Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வேல் பெற்றார்! விடை பெற்றார்!
 
பக்தி கதைகள்
வேல் பெற்றார்! விடை பெற்றார்!

கந்தப் பெருமானின் அருள்நிகழ்வுகள் கண்டு இந்திரன், பிரமன், திருமால், தேவர்கள், திக்பாலகர்கள், முனிவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது இந்திரன் கூறினான்.
‘‘நாரதரின் யாகம் நல்லபடியாக நிறைவேறியது. திருமாலின் புதல்வியர்களும் திருமண வரம் பெற்றனர். பிரம்ம தேவனும் ஆணவம் நீ்கி ஆனந்தம் அடைந்தான். மழலை மொழியில் மந்திர உபதேசம் பெற்று சிவபெருமானும் சிந்தை களித்தார். பெருமானின் ஆனந்தக் கண்ணீரால் கந்தனின் பேரழகை நாம் புரிந்து கொண்டோம்.
பிரணவ உபதேசத்தால் முருகனின் ஞானத்தை நாம் அறிந்து கொண்டோம். அழகு, அறிவு, ஆற்றல் கொண்ட முருகப்பெருமானின் வீரம் விளங்கினால் தான் அசுரர்களின் தொல்லை நீங்கி நாம் பூரணசுகம் பெற முடியும். போர்ப்படை புறப்பட சிவபெருமானிடம் அனைவரும் சென்று பிரார்த்திப்போம் வாருங்கள்’’
அனைவரும் திருக்கயிலை நாதனின் திருவடி பணிந்தனர்.  
‘‘வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானை கருத்தறிந்து முடிப்பான் தன்னை
துாயானை துாவெள்ளை ஏற்றான் தன்னை
சுடர்த்திங்கள் சடையானை தொடர்ந்து நின்ற
தாயானை தவமாய தன்மையானை
தலையான தேவாதி தேவர்க்கு என்றும்
சேயானை தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே’’
அனைவர் சார்பாகவும் இந்திரன் முறையிட்டான். ‘நாங்கள் அசுரர்களால் படும் அல்லல்கள் தாங்கள் அறியாததா? தக்க தருணத்தில் என் குமாரன் உங்கள் குறைகளைக் களைவான் என்று உறுதியளித்தீர்களே! இன்னமும் எங்களின் இன்னல்கள் தீரவில்லையே! எண்ணில்லாத யுகங்களாக அரக்கர்களின் பிடியில் அகப்பட்டு தவிக்கின்றோமே! என் புதல்வன் ஜயந்தனும், அரம்பையர்களும் சூரனால் சிறைப்பட்டு வாடுகிறார்கள்.
கடலில் செல்லும் கப்பலின் மீது அமர்ந்து கொண்டிருக்கும் பறவைகளைப் பலமுறை விரட்டினாலும், அந்தப் பறவைகள் நடுக்கடலில் வேறெங்கு போய் தங்க முடியும். மீண்டும் அதே கப்பலில் தானே அடைக்கலம் தேடும். அவ்வாறே எங்களுக்கு கதியாவது கயிலாயம் மட்டுமே! சிந்தை இரங்க வேண்டியது சிவபிரானாகிய தாங்களே!  
‘கயிலை அன்றியே ஏக ஓர் இடம் இலை
எமக்கு நீ அல்லால்  
சோகம் அகற்றிடும் துணைவர் இல்லையே!’
எம்பெருமானே! கொழுந்து விட்டு எரிகின்ற நெருப்பின் மீது கூட நித்திரை கொள்ளலாம். அழிக்கும் விஷத்தைக் கூட அள்ளி உண்ணலாம். பகைவர்களின் கொடுங்கோல் அடக்குமுறைக்குப் பயந்து வாழும் இக்கீழ்மை போதும் போதும்.
ஏற்றெழு வன்னிமேல் இனிது துஞ்சலாம்
தோற்றிய வெவ்விடம் எனினும் துய்க்கலாம்
மாற்றலர் அலைத்திட வந்த வெந்துயர்
ஆற்றரிது ஆற்றரிது அவலம் இப்புன்மையே!
தேவர்கள் செய்த தீவினைத் தொகை தீர்ந்து போய் அவர்களுக்குத் துயர் தீர்ப்பதற்கான தருணம் வந்து விட்டதை சிவபிரான் உணர்ந்தார். தன் பக்கத்தில் எழுந்தருளியிருந்த முருகனை நோக்கினார்.
‘‘புதல்வனே! உலகத்திலுள்ள உயிர்களுக்கெல்லாம் துன்பம் செய்து, தேவர் உலகத்தை அழித்து தீமையின் வடிவமாக விளங்குகின்ற சூரபத்மனை, அவன் கூட்டத்தைக் கொன்று அதர்மம் நீங்கவும் அறநெறி ஓங்கவும் வழி செய்து, இமையவர்கள் இன்னல் அகன்று இன்பமாக வாழும் வண்ணம் இந்திரனுக்கு அரசை மீட்டுக் கொடுத்து வெற்றியுடன் திரும்பி வருக’’ என்றார்.
‘பாரினை அலைத்து பல்உயிர் தமக்கும்
பருவரல் செய்து விண்ணவர் தம்
ஊரினை முருக்கித் தீமையே இயற்றி
உவப்புறா வன்மை கொண்டு உற்ற
சூரனை அவுணர் குழுவொடும் தடிந்து
சுருதியின் நெறி நிறீஇ மகவான்
பேரரசு அளித்துச் சுரர்துயர் அகற்றிப்
பெயர்தி’ என்றனன் எந்தை பெருமான்.
‘தந்தையே! தங்கள் ஆணைப்படியே அனைத்தையும் செய்து முடிக்கின்றேன்’ என்று முருகப்பெருமான் பதில் உரைத்ததும், ‘மகனே! போருக்குப் புறப்படும் உன் கைகளில் ஆற்றல் மிக்க ஆயுதங்களைப் பொருத்த உள்ளேன்’ என்ற சிவபெருமான் ஏகாதச உருத்திரர்களை மனத்தில் எண்ணினார்.
ஏகம் என்றால் ஒன்று. தசம் என்றால் பத்து. பதினொரு உருத்திரர்களே ஏகாதச உருத்திரர்கள் ஆவர். அவர்கள் சிவபெருமானைப் போலவே தோற்றம் கொண்டவர்கள். அவர்களை முருகனின் கரங்களில் ஆயுதங்களாக இருந்து வெற்றி பெற ஆதார சக்திகளாக அமைக என்று பணித்தார் சிவபெருமான்.
உருத்திரர்கள் பதினொருவரும் முருகப்பெருமானின் திருக்கைகளில் தோமரம், கொடி, வாள், குலிசம், அம்பு, அங்குசம், தாமரை, தண்டு, வில், மணி, மழு  என அமைந்தனர். பிறகு எல்லா ஆயுதங்களுக்கும் நாயகமாக விளங்குவதும், விடுத்த அடுத்த வினாடியே பழமையான அண்டங்களின் ஐம்பெரும்பூதங்களையும் அழிக்க வல்லதும், அனைத்து உயிர்களையும் ஒரு சேர முடிக்க வல்லதும், எதிராளியின் வரபலங்களை வாங்க வல்லதுமான ஒப்பற்ற வலிமையுடைய ஒளி பொருந்திய வேலாயுதத்தை உண்டாக்கி புதல்வன் கையில் பொருத்தினார் சிவபெருமான்.
‘‘எப்படைக்கும் நாயகம் ஆவதோர் தனிச்சுடர்வேல்
நல்கியே மதலை கைகொடுத்தார்!’
அம்பிகையிடம் வேல் பெற்று கந்த பெருமான் களம் காண்பதாக ஆலயங்களில் விழாக்கள் நடைபெற்றாலும் கச்சியப்பர் இயற்றிய கந்தபுராணத்தின்படி சிவபெருமான் வேலாயுதத்தை உருவாக்கி மைந்தனிடம் தந்ததாக அறிய முடிகிறது. ‘சிக்கலிலே வேல் வாங்கி செந்துாரில் சம்ஹாரம்’ என்ற வகையில் புகழ் மிக்க முருகன் தலமான சிக்கலிலே அம்பிகையிடம் வேல் பெறும் விழா கொண்டாடப்படுகிறது.
‘வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் – வாரி
குளித்த வேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை!
வேல் ஞானத்தின் அடையாளமாக. அறிவின் சொரூபமாக விளங்குகிறது. அறிவை ஒரு ஆயுதம் என்றே திருவள்ளுவரும் குறிப்பிடுகிறார்.
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள் அழிக்கலாகா அரண்
அழிவு வராமல் தடுக்கும் கருவியாகவும், பகைவர்களும் அழிக்க இயலாத பாதுகாப்பாகவும் விளங்குவதே அறிவு. அறிவின் சொரூபமாகவே வேலாயுதம் எவ்வாறு விளங்குகிறது என அறிவோமா?
கூர்த்த அறிவு, பரந்துபட்ட அறிவு, ஆழங்கால்பட்ட அறிவு என்பது போலவே  வேல் கூர்மையாகவும், அகன்றும், ஆழமாகவும் வடிவம் பெற்றுள்ளது. பார்வதி பரமேஸ்வரரை வழிபட்டு வாழ்த்து பெற்று வடிவேலுடன் கந்தப்பெருமான் புறப்பட்டார். வீரவாகு முதலான நவவீரர்களும், லட்சம் வீரர்களும், அண்டாபரணர், நந்தி, உக்கிரர், சண்டர், சிங்கர் என அனைவரும் ‘வீரவேல், வெற்றிவேல்’  என முழக்கமிட்டபடி சேனாதிபதியான முருகவேளைப் பின்தொடர்ந்தனர். திருமால் வாயுதேவனைப் பார்த்து, ‘ நீ ஆறுமுகக் கடவுளுக்குத் தேர்ப்பாகனாக இருந்து தேரைச் செலுத்துவாய்’ என்று ஆணையிட்டார். காற்றுத் தேரில் கந்தன் அமர்ந்து முன் செல்ல ஆயுதங்கள் தாங்கிய லட்சக்கணக்கான வீரர்கள் அணிவகுக்கப் படை புறப்பட்டது.
‘தொந்தத் திகுகுடதகுகுட டிமிடிமி
தந்தத் தனதன டுடுடுடு டமடம
துங்கத் திசைமலை உவரியும் மறுக சலரிபேரி
துன்றச் சிலைமணி கலகல கலின் என
சிந்தச் சுரர்மலர் அயன்மறை புகழ்தர
துன்புற்று அவுணர்கள் நமன்உலகு உறவிடு வடிவவேலா!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar