|
பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் பாசுபதாஸ்திரம் பெறுவதற்காக சிவனை தேடிச் சென்று கொண்டிருந்தான். வழியில் நதிக்கரை ஒன்றில் அனுமன் சாதாரண வானரம் வடிவில் அமர்ந்து ராமநாமத்தை ஜபித்தபடி தியானத்தில் இருந்தார். அவரைக் கண்டதும், ‘‘ஏய் வானரமே.. உன் ராமனுக்கு உண்மையில் திறமை இருந்திருந்தால் கடலைத் தாண்ட வில்லால் அம்பு தொடுத்து சரப்பாலம் கட்டியிருக்கலாமே...ஏன் வானரங்களின் உதவியை நாட வேண்டும்?’’ என ஏளனம் செய்தான். தியானம் கலைந்த அனுமன் எதிரே நிற்பவன் அர்ஜூனன் என்பதை அறிந்து அவனது கர்வத்தை ஒடுக்க நினைத்தார். ‘‘சரப்பாலம் என் ஒருவனின் பாரத்தையே தாங்காது...எப்படி இலங்கைக்குச் செல்லும் அத்தனை வானரங்களின் பாரத்தையும் தாங்கும்?’’ எனக் கேட்டார் அனுமன். அர்ஜூனன் திறமை மீதிருந்த நம்பிக்கையால், ‘‘நான் கட்டும் சரப்பாலத்தின் மீது எத்தனை வானரங்கள் ஏறி நின்றாலும் உறுதியாக நிற்கும்’’ என்றான். ‘‘ இதை சாதித்துக் காட்டினால் அடிமையாக உன் தேர்கொடியாக நான் இருப்பேன்’’ என்றார் அனுமன். ‘‘நான் தோற்றால் வேள்வித்தீ வளர்த்து அதில் உயிர் விடுவேன்’’ என்றான் அர்ஜூனன். அர்ஜூனன் பாணம் தொடுத்து பாலம் கட்டி முடிக்கும் வரை ராமநாமம் ஜபித்தபடி இருந்தார் அனுமன். கட்டி முடித்ததும் ராமநாமம் ஜபித்தபடி அதன் மீது கால் வைக்க அது நொறுங்கியது. ‘‘அஸ்திரத்தை தேடி வந்த இடத்தில் இப்படி வம்பில் மாட்டிக் கொண்டேனே’’ என்ற அர்ஜூனன் உயிர் விடத் தயாரானான். அப்போது அந்தணர் ஒருவர் அங்கு வர, இருவரும் அவரை வணங்கி நடந்ததைக் கூறினார். ‘‘போட்டி என வந்து விட்டால் சாட்சி வேண்டாமா...எனவே மறுபடியும் பாலம் கட்டும் பணி நடக்கட்டும். நான் தீர்ப்பளிக்கிறேன்’’ என்றார் அந்தணர். ‘‘கிருஷ்ணா... கிருஷ்ணா...’’ என ஜபித்தபடியே பாலத்தைக் கட்டினான் அர்ஜூனன். ஏற்கனவே பாலம் நொறுங்கியதால் அனுமனுக்கு அலட்சிய எண்ணம் ஏற்பட்டது. ராமநாமம் சொல்வதை மறந்தார். இரண்டாவது முறை பாலம் தயாரானதும் அனுமன் காலை வைத்து அழுத்தியும் பாதிப்பு ஏற்படவில்லை. குழப்பத்துடன் அந்தணரை நோக்கி, ‘‘யார் நீங்கள்?’’ எனக் கேட்டார் அனுமன். அப்போது அந்தணர் மறைந்து மகாவிஷ்ணு காட்சியளித்தார். இருவரும் அவரை வணங்கினர். ‘‘என் பக்தர்களான நீங்கள் இருவருமே தோற்கவில்லை. பக்தியும், நாம ஜபமும் தான் ஜெயித்தது. ஆனால் ராமனாகவும், கிருஷ்ணராகவும் இருப்பவன் மகாவிஷ்ணு தான் என்பதை மறந்து விட்டீர்கள். அதை உணர்த்தவே இந்த நாடகம்.’’ என்றார், அப்போது அனுமன் சுயவடிவம் காட்ட மன்னிப்பு கேட்டான் அர்ஜுனன். ‘‘பாரதப்போரில் அர்ஜூனனின் தேர்க்கொடியில் தங்கியிருந்து நீ தான் உதவ வேண்டும் அனுமா! அதற்காகவே இந்த திருவிளையாடலை நிகழ்த்தினேன். நீ இருக்கும் இடத்தில் எந்த மந்திரமோ, தந்திரமோ வேலை செய்யாது’’ என்றார் கிருஷ்ணர். அனுமனும் சம்மதித்தார். எந்த ஒரு பிரச்னைக்கும் வருத்தப்படத் தேவையில்லை. கடவுளின் திருநாமத்தை நம்பினால் வாழ்வு சிறக்கும்.
|
|
|
|