|
இந்த சுபநேரத்தில் குழந்தை பிறந்தால் யோகசாலியாக இருப்பான் என்று பெற்றோர் சிலர் மருத்துவரிடம் சொல்லி உடனடியாக ஆப்ரேஷன் செய்து பிரசவிக்கச் செய்வதுண்டு. இது போன்ற செயல்கள் இக்காலத்தில் மட்டுமின்றி அந்தக் காலத்திலும் நடந்திருக்கிறது. சோழ மரபில் வந்த மன்னர் சுபதேவர் – பெருந்தேவி கமலவதி தம்பதியினர் தங்களின் குழந்தைப்பேறை எதிர்நோக்கியிருந்தனர். ராணிக்கு பிரசவ நேரம் நெருங்கியது. கமலவதி பிரசவவலியால் துடித்தாள். அப்போது அரண்மனை ஜோதிடர்கள், ‘‘மகாராணி! இன்னும் ஒரு நாழிகை கழித்து பிறந்தால் சக்கரவர்த்தி யோகத்துடன் குழந்தை பிறப்பான். அதனால் மூவுலகையும் அரசாளும் பாக்கியம் பெறுவான்’’ எனத் தெரிவித்தனர். ‘அப்படியெனில் உடனடியாக பிரசவிக்காமல் ஒரு நாழிகை நேரம் தாமதமாகவே எனக்கு பிரசவம் நடக்கட்டும். அதுவரை என் கால்களைக் கட்டி தலைகீழாக தொங்க விடுங்கள்’’ என்றாள் பெருந்தேவி கமலவதி. பணிப்பெண்களும் அதன்படி செய்தனர். ஒரு நாழிகை நேரம் கடந்ததும், ஆண் குழந்தையை பெற்றுக் கொடுத்து விட்டு உயிர் விட்டாள் அந்த மாதரசி. குழந்தையின் கண்கள் சிவப்பாக காட்சியளித்தது. அதனால் சிவந்த கண்களை உடையவன் என்னும் பொருளில் ‘கோச்செங்கண்’ என பெயர் பெற்றான். இவனது காலத்தில் 72 சிவன் கோயில்களும், 3 விஷ்ணு கோயில்களும் கட்டப்பட்டன. இந்த சோழனின் முற்பிறவி வரலாறு சுவாரஸ்யமானது. புஷ்பதந்தன், மாலியவான் என்னும் சிவகணங்கள் இருந்தனர். இவர்களில் பக்தியில் சிறந்தவர் யார் என்னும் சர்ச்சை எழுந்தது. வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் சபிக்கும் அளவுக்கு நிலை மோசமானது. அதன்படி மாலியவான் சிலந்தியாகவும், புஷ்பதந்தன் யானையாகவும் மறுபிறவியில் வந்தனர். சோழநாட்டில் காவிரிக்கரையிலுள்ள திருவானைக்காவல் என்னும் தலத்தில் சிலந்தியாகவும், யானையாகவும் பிறந்தனர். அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கீழ் சிவலிங்கம் ஒன்று இருந்தது. யானை தும்பிக்கையில் நீரை நிரப்பி சிவலிங்கத்துக்கு தினமும் அபிஷேகம் செய்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மீது காய்ந்த இலைகள் விழாமல் இருக்க வலை பின்னி பந்தல் இட்டது. யானை பூஜை செய்ய வரும் போது சிலந்தியின் வலையை ஒட்டடை என அலட்சியப்படுத்தி கலைத்து விடும். சிலந்தி வலையை காணாமல் வருந்தி மீண்டும் பின்னத் தொடங்கியது. ஒருநாள் நாவல் மரத்தின் பின்புறம் ஒளிந்திருந்த சிலந்தி, வலையை களைத்துக் கொண்டிருந்த யானையை பார்த்தது. கோபத்தில் யானையின் துதிக்கைக்குள் புகுந்து கடிக்கத் தொடங்கியது. வலி தாளாமல் துதிக்கையை நிலத்தில் அடிக்க சிலந்தியோடு யானையும் இறந்தது. குற்றம் ஏதும் செய்யாமல் பக்தியுடன் பிறந்த சிலந்தி, மறுபிறவியில் சோழ மன்னராகப் பிறக்கும் பாக்கியம் பெற்றது. சுபதேவர் தன் மகனை வீரதீரம் மிக்கவனாக வளர்த்து முடி சூட்டினார். ஜோதிடர்கள் மூலம் முற்பிறவி பற்றி அறிந்த கோச்செங்கட்சோழன் சிவபக்தியுடன் வாழ்ந்தான். முற்பிறவியின் அடிப்படையில் அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. சிவலிங்கத்தை யானைகள் தரிசிக்க முடியாதபடி 72 மாடக்கோயில்களை கட்டினான். வாழ்வின் இறுதி காலத்தில் திருவாரூர் தியாகேசப் பெருமானையும், சிதம்பரம் நடராஜரையும் வழிபட்டு சிவபெருமானின் திருடியில் கலந்தான்.
|
|
|
|