|
நண்பர் நடத்திய அம்மன் பூஜையில் கலந்து கொண்டேன். ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக இருந்தன. பச்சைப்புடவைக்காரி சிகப்பு நிறப் பட்டாடையில் துர்கா பரமேஸ்வரியாக ஜொலித்துக்கொண்டிருந்தாள். நைவேத்தியம், அம்மனுக்குச் செய்யப்பட்ட அலங்காரம், அடியவர்களுக்கு பிரசாதம் வழங்கிய நேர்த்தி, வந்திருந்த பெண்களுக்கு செய்யப்பட்ட மரியாதை எல்லாம் சேர்ந்து என் மனதை உருக்கியது. வந்திருந்தவர்களுக்கெல்லாம் வடை, பாயசத்துடன் உணவு வழங்கப்பட்டது. அருகில் ஒரு அழகான நடுத்தரவயதுப் பெண் அமர்ந்திருந்தாள். அவளை எங்கும் பார்த்த ஞாபகம் இல்லை. கடைசிக் கவளம் உணவை உண்ணும் போது அந்த நினைப்பு வந்தது. அதன்பின் என் மனம் ஒரு நிலையில் இல்லை. நானும் பைத்தியக்காரன் போல பச்சைப்புடவைக்காரியின் பெயரைச் சொல்லி பிதற்றுகிறேனே தவிர அவளுக்கு இப்படி ஒரு பூஜை செய்ய வேண்டும் எனத் தோன்றவில்லையே! ஏற்பாடுகள் செய்ய எனக்கு நேரம் இல்லை என்று சால்ஜாப்பு சொல்லிச் சமாளிக்கலாம். பச்சைப்புடவைக்காரி ஒன்றும் சொல்லமாட்டாள். ஆனால் இந்தப் பாழாய்ப்போன மனசாட்சி என்னைக் குற்றவாளியாக்கி விசாரணை நடத்திக் கொண்டிருந்தது. அவள் மீது உண்மையான பக்தி இருந்தால் இப்படி ஒரு பூஜையை நானே செய்திருக்கலாமே! அந்த வழிபாட்டில் அன்னை குளிர்ந்திருப்பாளே! அவளுடைய கொத்தடிமை என்று சொல்லிக் கொண்டு திரிவதால் என்ன பயன்? இதுவும் ஒரு மாதிரியான போலி வேஷம்தானே! முறையாக வழிபாடு செய்யாத என் மீதே இத்தனை அன்பு காட்டுகிறாள் என்றால் பச்சைப்புடவைக்காரி எப்பேர்ப்பட்ட அன்பரசியாக இருக்க வேண்டும்! அந்த அன்பரசிக்கு ஏற்ற கொத்தடிமையாக இல்லாமல் போனேனே என்று நினைத்ததும் கண்களில் கண்ணீர் பொங்கியது. கை, கால்கள் நடுங்கின. திடீரென என் வலது மணிக்கட்டை யாரோ இறுகப் பற்றினார்கள். திரும்பிப் பார்த்தேன். பக்கத்தில் இருந்த நடுத்தர வயதுப் பெண் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். அதற்கு விலையாக புவனம் ஏழையும் கொடுத்தாலும் போதாது எனத் தோன்றியது. எனக்கு மட்டும் கேட்கும்படி மெல்லிய குரலில் பேசினாள். ‘‘இதுபோல் விரிவாக பூஜை செய்ய வேண்டும் என்று ஆசை வந்து விட்டதோ?’’ கீழே விழுந்த பொருளை எடுப்பது போல் குனிந்து அவள் காலைத் தொட்டு வணங்கினேன். ‘‘ஆம் தாயே! நீங்களே நேரில் வந்திருக்கிறீர்களே!’’ ‘‘முட்டாள், நான் பூஜையை ஏற்க வரவில்லையடா. இந்தச் சமயத்தில் நீ கண் கலங்குவாய் என்று தெரியும். உன்னைத் தெளிய வைக்கவே வந்தேன்.’’ மீண்டும் ஒரு முறை அவள் காலைத் தொட்டு வணங்கினேன். ‘‘உனக்கு என்ன வேண்டும் சொல். இதுபோல் பிரம்மாண்டமாக பூஜை செய்ய வேண்டுமா இல்லை, என் மனதிற்குப் பிடித்த வகையில் வழிபாடு செய்ய வேண்டுமா? ‘‘உங்களுக்கு பிடித்த விதத்தில் வழிபடுவதுதானே கொத்தடிமைக்கு அழகு?’’ ‘‘அது எப்படியென்று காட்டுகிறேன். அங்கே நடப்பதைப் பார்.’’ காட்சி விரிந்த போது ஒரு பிரம்மாண்ட்மான கேளிக்கைப் பூங்காவின் நுழைவுவாயில் தெரிந்தது. கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பம் நுழைவுச் சீட்டு வாங்கிக்கொண்டு வரிசையை விட்டு வெளியே வந்தது. வரிசையில் அவர்களுக்கு அடுத்தபடியாக நின்றிருந்தவர்கள் நுழைவுச் சீட்டுக் கொடுப்பவனிடம் தகராறு செய்தபடி இருந்தனர். முதலில் நுழைவுச் சீட்டு வாங்கிய குடும்பத்தின் தலைவன், என்ன தகராறு என்று அறிய அங்கே போய்ப் பார்த்தான். அங்கே இருந்தவர் அழாக்குறையாகத் தன் கஷ்டத்தைச் சொன்னார். ‘‘நாங்க எட்டு பேரு வந்தோம் சார். நான், என் மனைவி, அப்பா, அம்மா, ரெண்டு குழந்தைங்க, பக்கத்துவீட்டுக் குழந்தைங்க ரெண்டு பேரு. இந்தாளுங்க திடீர்னு டிக்கெட் விலைய ரெண்டு மடங்காக்கிட்டாங்க. இப்போ நாலு டிக்கெட்டுக்குத்தான் கையில காசு இருக்கு.’’ ‘‘கையில கிரெடிட் கார்ட் எதுவும் இல்லையா?’’ ‘‘காலாவதியாயிருச்சி சார். புதுப்பிக்க அனுப்பியிருக்கேன். இன்னும் வரல. ஆட்டோவுக்கும் பஸ்ஸுக்கும் எக்கச்சக்கமாச் செலவழிச்சி வந்திருக்கோம். இந்தப் பணத்த சேக்கறதுக்கு ஒரு மாசம் பாடுபட்டோம். அத்தனையும் வீணாப்போயிடுமே! என்ன செய்யறதுன்னு தெரியல, சார்.’’ ‘‘ஒரு நிமிஷம் இங்கேயே இருங்க வந்துடறேன்.’’ குடும்பத் தலைவன் தன் மனைவி, குழந்தைகளிடம் ஆலோசனை நடத்தினான். எட்டுப்பேர் கொண்ட குடும்பம் படும் வேதனையைச் சொன்னான். அவர்களுக்கு எப்படி உதவலாம் என்றும் கோடி காட்டினான். மனைவியும் குழந்தைகளும் உற்சாகமாகச் சம்மதித்தனர். மீண்டும் அந்த மனிதரிடம் போனான் குடும்பத் தலைவன். ‘‘சார் கையக் கொடுங்க. இன்னிக்கு உங்களுக்கு அதிர்ஷ்ட நாளுன்னுதான் சொல்லணும். என்னோட உறவுக்காரங்க வரேன்னு சொல்லியிருந்தாங்க. கடைசி நிமிஷத்துல வரமுடியலன்னு போன் பண்ணிட்டாங்க. அவங்களுக்காக வாங்கின நாலு டிக்கெட் என்கிட்டதான் இருக்கு. டிக்கெட்ட கவுண்ட்டர்ல திருப்பிக் கொடுக்க முயற்சி செஞ்சேன். வித்த டிக்கெட்ட வாங்க மாட்டோம்னு கண்டிப்பாச் சொல்லிட்டாங்க. இந்தாங்க நாலு டிக்கெட். நீங்க எல்லோரும் சந்தோஷமாப் போயிட்டு வாங்க.’’ ‘‘இதுக்குக் காசு.. .’’ ‘‘இதத் தெரியாதவங்களுக்குக் கொடுத்துக் காசு பாக்கறதை விட தேவைப்படறவங்களுக்குக் கொடுத்து அவங்கள சந்தோஷப்படுத்தலாமேன்னு நெனைக்கறோம், சார், ‘‘ ‘‘நீங்களும் வாங்களேன், சேர்ந்தே போகலாம்.’’ ‘‘பையன் குடிக்கத் தண்ணி வேணும்னு கேட்டான். அத வாங்கிக் கொடுத்துட்டுப் பின்னாலயே வந்துடறோம்.’’ அந்த மனிதர் அவனது கைகளை இறுகப்பற்றியபடிக் கண்ணீர் மல்க நன்றி கூறினார். அவர் அந்தப் பக்கம் நகன்றதும் இந்தக் குடும்பம் பூங்காவைவிட்டு வெளியேறியது. காட்சி முடிந்தது. பச்சைப்புடவைக்காரி பேச ஆரம்பித்தாள். ‘‘நுழைவுச் சீட்டைத் தாரை வார்த்துக் கொடுத்த குடும்பமும் அதே மத்தியதர வர்க்கம்தான். அவர்கள் பல நாட்களாகக் குருவிபோல் சேமித்துத்தான் அந்தத் தொகையைச் சேர்த்திருந்தார்கள். என்ற போதிலும் தாங்கள் கேளிக்கைகளில் ஈடுபடுவதைவிட அடுத்தவர்கள் ஏமாறக் கூடாது என்று என்று நினைத்தார்கள் பார்.. அந்த நினைப்புதான் எனக்குச் செய்யப்படும் ஆகச்சிறந்த பூஜை. சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதுதான் எனக்கு மிக பிடித்த வழிபாடு. ‘‘இன்று நடந்ததே ஒரு பூஜை அதைப் போல் பத்தாயிரம் பூஜைகளைச் செய்த பலனை அந்தக் குடும்பத்திற்கு அங்கேயே கொடுத்துவிட்டேன். அந்தக் குடும்பத்தினர் செல்வச் செழிப்புடன் சீரும் சிறப்புமாக வாழப் போகிறார்கள். ‘‘இப்போது சொல். உனக்கும் அது போல் என்னை வழிபட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதா? ‘‘ஆசையாகத்தான் இருக்கிறது, தாயே! ஆனால் அந்த அளவிற்கு எனக்குக் கர்மக் கணக்கு சாதகமாக இருக்குமா என்று தெரியவில்லை. ஏனென்றால் அன்பரசியான உங்கள் அருள் இருந்ததால்தான் அவர்கள் மனதில் அப்படி ஒரு அன்பு சுரந்தது. எனக்கு வேறு ஒரு வரம் வேண்டும் தாயே.’’ ‘‘என்ன வரம்? சொர்க்கவாசம் வேண்டுமா? காவியம் இயற்றும் ஆற்றல் வேண்டுமா?’’ ‘‘வேண்டாம், தாயே! அடுத்த பிறவியில் அந்தக் குடும்பத்தைப் போல் அன்புள்ளம் கொண்டவர்களுக்குப் பணிபுரிய வேண்டும். அப்படிப்பட்டவர்கள் வசிக்கும் வீட்டைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும். கடை கண்ணிக்குச் சென்று அவர்களுக்கு வேண்டியதை வாங்கித் தர வேண்டும். ஒரு சமையல்காரனாகப் பிறந்து அவர்களுக்கு வாய்க்கு ருசியாகச் சமைத்துப்போட வேண்டும், தாயே!’’ ‘‘ஏனப்பா இப்படி ஒரு வரத்தைக் கேட்கிறாய்?’’ ‘‘அப்படியாவது என் மனதில் அன்பு அதிகமாகி அதற்கு அடுத்த பிறவியிலாவது உங்கள் மனதிற்கு உகந்தபடி வழிபாடு செய்யலாமே என்ற நப்பாசையில்தான் அப்படிக் கேட்கிறேன், தாயே!’’ அன்பே வடிவான அகிலாண்டேஸ்வரி கலகலவென சிரித்தபடி காற்றோடு கலந்துவிட்டாள்.
|
|
|
|