|
பாண்டவர், கவுரவர்களுக்கு இடையே பகை மூண்டது. போர் நடத்துவதற்காக குருேக்ஷத்திரம் என்னும் இடத்திலுள்ள மரங்களை அப்புறப்படுத்தி யானைகளால் சீர்படுத்தினர். அங்கு ஒரு மரத்தில் சிட்டுக்குருவி ஒன்று தன் குஞ்சுகளுடன் வசித்தது. அங்கிருந்த மரத்தை வெட்டும் போது குருவி தன் குஞ்சுகளுடன் கீழே விழுந்தது. சுற்றும் முற்றும் பார்த்த போது கிருஷ்ணரும், அர்ஜூனனும் சிட்டுக்குருவியின் கண்ணில் தெரிந்தனர். கிருஷ்ணரின் அருகில் பறந்து வந்தது குருவி. ‘‘கிருஷ்ணா... இங்கு என்ன நடக்கிறது. எல்லா மரங்களையும் ஏன் வெட்டுகிறார்கள்?’’ எனக் கேட்டது. ‘‘பாரதப்போர் நடக்க இருப்பதால் மரங்களை அப்புறப்படுத்துகிறோம்’’ என்றார். ‘‘பறக்க முடியாத என் குஞ்சுகள் நிலை என்னாகுமோ.. நீ தான் எங்களை காப்பாற்ற வேண்டும்’’ எனக் கெஞ்சியது. “ இயற்கையை வெல்ல யாரால் முடியும். காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. நிச்சயம் அது தன் கடமையைச் செய்யும்” என்று சொல்லி விட்டு நடந்தார் கிருஷ்ணர். ‘‘அர்ஜூனா... உன்னுடைய வில்லை கொடு அர்ஜூனா...எனக்கு சின்ன வேலை இருக்கிறது’’ என வில்லை வாங்கிய கிருஷ்ணர், மரத்தை பிடுங்குவதற்காக நின்ற யானையின் மீது அம்பு தொடுத்தார். அம்பானது யானையைக் கொல்லாமல் அதன் கழுத்தில் இருந்த மணியை அறுக்க அது கீழே விழுந்தது. அதை பார்த்த அர்ஜூனன் சிரித்தான். ‘‘என்னிடம் சொல்லியிருந்தால் யானையை வீழ்த்தியிருப்பேன். சரி ஆனது ஆகட்டும். வில்லைக் கொடுங்கள் யானையை ஒரு நொடியில் வீழ்த்துகிறேன்’’ என்றான் அர்ஜூனன். ‘‘வில்லையும் நீயே பத்திரமாக வைத்துக் கொள். நான் யானையை கொல்ல விரும்பவில்லை’’ என்றார் கிருஷ்ணர். “பிறகு ஏன் யானை மீது அம்பு எய்தீர்கள்?” எனக் கேட்டான். “அப்பாவி சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைத்ததற்கான தண்டனை இது’’ என்று மட்டும் சொல்லி விட்டு கிருஷ்ணர் நகர்ந்தார். இந்நிலையில் பாரதப் போர் மும்முரமாக நடந்தது. முடிவில் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். அர்ஜூனனும் கிருஷ்ணரும் போர்க்களத்தில் சுற்றி வந்த போது யானையில் கழுத்தில் அறுத்து எறிந்த மணியின் அருகில் வந்தனர். ‘‘அர்ஜூனா! இந்த மணியைத் துாக்கு’’ என்றார் கிருஷ்ணர். ‘‘எத்தனையோ முக்கிய வேலைகள் இருக்க, இதைச் செய்ய வேண்டியது இப்போது அவசியமா’’ எனக் கேட்டபடி மணியை எடுத்தான் அர்ஜூனன். அதிலிருந்து சிட்டுக்குருவி குஞ்சுகளுடன் வெளியே வந்தது. ஆச்சரியத்துடன் பார்த்த அவன் அசைவற்று நின்றான். பதினெட்டு நாட்களாக தன்னையும், குஞ்சுகளையும் மணிக்குள் வைத்து காப்பாற்றிய கிருஷ்ணரை குருவி வணங்கியது. கிருஷ்ணர் ஆசியளித்து மகிழ்ந்தார். ‘‘என்னை மன்னித்து விடு! அம்பு எய்ய தெரியாமல் திணறுவதாக தங்களை ஏளனம் செய்தேனே! ஆனால் அப்பாவி உயிர்களை காப்பதற்காகத் தான் இப்படி செய்தீர்கள் என்ற உண்மை புரியவில்லையே’’ என வருந்தினான் அர்ஜூனன். ‘‘யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதும் எதை எப்படி செய்ய வேண்டும் என்பதும் கிருஷ்ணன் ஒருவனுக்குத் தான் தெரியும். ஏனென்றால் காலம் என்னும் சக்கரத்தை சுழலச் செய்வது அவன் ஒருவன் தானே. |
|
|
|