|
தையல்காரர் ஒருவர் துணி தைத்துக் கொண்டிருந்தார். அவரது மகன் அருகில் நின்றபடி அவரையே கவனித்தான். ஒரு புதிய துணியை எடுத்த தையல்காரர், அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார். பின்னர் கத்திரிக்கோலை கால் அருகே வைத்து விட்டு தைக்கத் தொடங்கினார். துணியை தைத்து முடித்ததும் சிறிய ஊசியை எடுத்து தன் தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப்படுத்தினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் அவரிடம், ‘‘அப்பா! கத்திரிக்கோல் விலை உயர்ந்தது, அழகானது, அதை அலட்சியமாக காலடியில் வைக்கிறீர்கள். ஊசி சிறியது. மலிவானது. ஆனால் அதை தலையில் பாதுகாக்கிறீர்களே... ஏன்? எனக் கேட்டான். ‘‘நீ சொல்வது உண்மை தான். கத்திரிகோல் அழகாகவும், மதிப்புள்ளதாகவும் இருந்தாலும், அதன் செயல் வெட்டுவது அதாவது பிரிப்பது. ஆனால் சிறியதாகவும், மலிவானதாகவும் ஊசி இருந்தாலும் அதன் செயல் சேர்ப்பது. ஒருவருடைய மதிப்பு அவருடைய செயலைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. அவர் பெரிதான உருவத்தை வைத்து அல்ல’’ என்றார் தையல்காரர்.
|
|
|
|