Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மன்னிக்க வேண்டுகிறேன்
 
பக்தி கதைகள்
மன்னிக்க வேண்டுகிறேன்


‘‘நீங்க தானே பச்சைப்புடவைக்காரியப் பத்தி எழுதறது?’’
‘‘ஆமா. உங்களுக்கு என்ன வேணும்?’’
‘‘நான் குழந்தைசாமி. சோழவந்தான்ல பெட்டிக்கடை வச்சிருக்கேன்யா. எனக்கு ஒரே பையன். பட்டப்படிப்பு முடிச்சிட்டான். பச்சைப்புடவைக்காரிகிட்ட சொல்லி அவனுக்கு ஒரு வேலை வாங்கித்தரணும்யா.’’
‘‘பிரார்த்தனை பண்றேன்.’’
‘‘அடுத்துப் பாக்கும்போது அவகிட்ட சொல்லுங்கய்யா.’’
‘‘நான்தான் அவளுக்குக் கட்டுப்பட்டவன். அவள் எனக்குக் கட்டுப்பட்டவள் இல்லை’’
‘‘நீங்க மனசு வச்சா என் பிரச்னையைத் தீர்க்கமுடியும்.’’
‘‘உங்களுக்கு வருமான வரி சம்பந்தமா பிரச்னையிருந்தா சொல்லுங்க, உதவி செய்யறேன். குறி சொல்றது, கேட்டுச் சொல்றது எல்லாம் எனக்குத் தெரியாது.’’
 மூன்று மாதம் கழித்து குழந்தைசாமி என்னை அழைத்தார்.
‘‘சாலைய அகலப்படுத்தறதுக்காக என் நிலத்த அரசாங்கம் எடுத்துக்கிச்சிங்க. எங்க ஊரு வக்கீலய்யாதான் போராடி அஞ்சு லட்ச ரூபாய்  நஷ்ட ஈடு வாங்கிக் கொடுத்தாரு. ரெண்டு லட்ச ரூபாய்க்குமேல வருமானவரி பிடிச்சிருக்காங்க. ஆடிட்டர்கிட்டப் போ, அந்த ரெண்டு லட்சத்த வாங்கிக்கொடுத்திருவாருன்னு வக்கீல் சொன்னாருங்க. அதான்...நீங்க...‘‘
ஒரு தேதியைக் குறிப்பிட்டுத்  தக்க ஆவணங்களுடன் என்னை அலுவலகத்தில்  பார்க்கச் சொன்னேன். வந்தார்.
ஆவணங்களில் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
‘‘உங்களுக்கு எவ்வளவு நஷ்ட ஈடு வந்திருக்கு?’’
‘‘அஞ்சு லட்சம்.’’
‘‘உங்க நிலத்துக்கு அரசாங்கம் நிர்ணயிச்ச தொகை ஏறக்குறைய 24 லட்சம். அதனாலதான் ரெண்டு லட்சத்தி சொச்சம் வரி பிடிச்சிருக்காங்க. வருமான வரி ரிட்டர்ன் போட்டு அதத் திருப்பி வாங்கிரலாம். ஆனா 22 லட்சம் வரவேண்டிய இடத்துல உங்க கணக்குல 5 லட்சம்தானே வரவாயிருக்கு. பாக்கி 17 லட்சம் எங்க போச்சு?’’
குழந்தைசாமி திடுக்கிட்டார். எனக்குத் தெரிந்த அரசாங்க அதிகாரிகளிடம் பேசி விபரங்கள் சேகரித்து அதை ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது உண்மை புலப்பட்டது.
அந்த வழக்கறிஞர் 17 லட்ச ரூபாயைச் சுருட்டிவிட்டார். மொத்தமே ஐந்தரை லட்சம்தான் வந்ததென்று சொல்லி அதில் தனக்கு கட்டணமாக ஐம்பதாயிரத்தை எடுத்துக்கொண்டு பாக்கி அஞ்சு லட்சத்தை இவர் கணக்குக்கு மாற்றியிருக்கிறார். வங்கியில் விசாரித்தபோது குழந்தைசாமியின் பெயரில் இன்னொரு கணக்குத் தொடங்கப்பட்டு அரசாங்கம் கொடுத்த காசோலை அதில் போடப்பட்டுப் பின் மொத்தப் பணமும் எடுக்கப்பட்டிருந்தது.
குழந்தைசாமி வயிற்றைப் பிடித்துக்கொண்டு தரையில் உட்கார்ந்துவிட்டார். பத்து நிமிடம் கழித்து மெதுவாக எழுந்து நின்றார். காபி வாங்கிக்கொடுத்தேன்.
‘‘வயிறெரிஞ்சி சொல்றேன்யா. படிப்பறிவில்லாத இந்த ஏழையை நம்பவச்சிக் கழுத்தறுத்த அந்தாளு ரத்தம் கக்கித்தான்யா சாவான்.’’ என புலம்பினார்.
‘‘தப்புச் செஞ்சவங்களத் தண்டிக்கறது பச்சைப்புடவைக்காரியோட வேலை. அவ வேலையை நீங்க ஏன் செய்யணும்?’’
‘‘என் வயித்தெரிச்சல் அவனச் சும்மா விடாதுய்யா. அவன் குலமே நாசமாப் போயிரும்.’’
அவரை அமைதிப்படுத்தப் பேச்சை மாற்றினேன்.
 ‘‘உங்க மகனுக்கு வேலை கெடைக்கணுமா?’’
 ‘‘ஆமாங்கய்யா. பச்சைப்புடவைக்காரிகிட்டப் பேசிட்டீங்களா?’’
‘‘இன்னும் இல்ல. பேசறதும் பேசாததும் உங்க கையிலதான் இருக்கு.’’
‘‘என்னய்யா சொல்றீங்க?’’
‘‘நீங்க அந்த வக்கீல முழுமனசோட மன்னிச்சிருங்க. அந்தாளும் அவர்  குடும்பமும் நல்லா இருக்கணும்னு பச்சைப்புடவைக்காரிகிட்ட வேண்டிக்கங்க. உங்க பையனுக்குக்காக நான் பச்சைப்புடவைக்காரிகிட்டப் பேசறேன்.’’
‘‘என் வயித்துல அடிச்சவன் நல்லா இருக்கணும்னு நானே எப்படிய்யா வேண்ட முடியும்?’’
‘‘ஏதாவது ஒண்ணுதான் கெடைக்கும். ஒண்ணு, அந்த வக்கீல் ரத்தம் காக்கிச் சாவான். இல்லேன்னா, உங்க பையனுக்கு நல்ல வேலை கெடைச்சிக் காலாகாலத்துலக் கல்யாணம் ஆகி நீங்க பேரன் பேத்தியோட சந்தோஷமா இருப்பீங்க. எது வேணும்?
‘‘என் பையனுக்கு வேலை.’’
‘‘நல்லபடியாக் கிளம்புங்க. இந்த வேலை முடிஞ்சிருச்சி. உங்க பேங்க் கணக்குக்கு வரிப்பிடித்தம் ரெண்டு லட்சத்திச் சொச்சம் வந்துரும்.’’
‘‘உங்களுக்கு கட்டணம்..’’
‘‘முதல்ல உங்க பணம் வரட்டும். அப்புறம் பாக்கலாம்.’’
கண்ணீர் மல்கக் கைகூப்பி நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார் குழந்தைசாமி.
அப்புறம்தான் நான் செய்த தவறு எனக்கு உறைத்தது. அந்த மனிதரின் மகனுக்கு வேலை கிடைக்குமென்று உத்தரவாதம் கொடுக்க நான் யார்? கொத்தடிமையாக லட்சணமாக நடந்துகொள்ளாமல் திமிராக வாக்குக் கொடுத்துவிட்டேனே! வேலை கிடைக்கவில்லையென்றால் நம்ப வைத்து ஏமாற்றிய பாவம்  வந்துவிடுமே!
பட்டினி கிடந்தேன்.  கோயிலுக்கு நடந்து சென்றேன். பச்சைப்புடவைக்காரியிடம் மன்றாடினேன். ஒன்றுமே நடக்கவில்லை.
இரண்டு மாதம் கடந்தது.
வருமான வரிப்பிடித்தம் இரண்டு லட்சத்திச் சொச்சம் வந்துவிட்டதாகச் சொன்னார் குழந்தைசாமி. எப்போது பையனுக்கு வேலை கிடைக்கும் என்று கேட்டார். என்ன சொல்வதென எனக்குத் தெரியவில்லை.
அன்று காலையிலிருந்தே மனம் படபடவென்று அடித்துக்கொண்டிருந்தது. பதினொரு மணியளவில் ஒரு வாடிக்கையாளருக்காக ஜி.எஸ்.டி. அலுவலகம் சென்றிருந்தேன். நான் பார்க்கவேண்டிய அதிகாரி அவருடைய இருக்கையில் இல்லை. நாளை வரலாமா என்று அந்த அதிகாரியின் உதவியாளரிடம் கேட்டேன்.
‘‘நாளை எதற்கு? இன்றே உன் மனக் கவலையைப் போக்குகிறேன்.’’
‘‘எனக்கென்ன மனக்கவலை?’’ என தெனாவட்டாகக் கேட்டேன்.
‘‘குழந்தைசாமியின் மகனுக்கு வேலை கிடைத்துவிடும் என்று உத்தரவாதம் கொடுத்துவிட்டு இப்படிச் சாப்பிடாமல், துாங்காமல் தவிக்கிறாயே என்று சொன்னேன்.’’
கதறியபடி அன்னையின் காலில் விழுந்து வணங்கினேன்.
‘‘நான் செய்தது தப்புதான் தாயே! எனக்கு என்ன தண்டனை வேண்டுமானலும் கொடுங்கள். பாவம், அந்த மனிதரை வாழ வையுங்கள். எனக்காக அவர் மகனுக்கு வேலை கொடுங்கள்.’’
‘‘நீ செய்தது தப்பில்லையப்பா.  அவன் மனதில் இருந்த ஆத்திரத்தைக் களையெடுத்து அதில் அன்புப் பயிரை நட்டிருக்கிறாய்.  அதனால் அவன் கர்மக்கணக்கு செம்மைப்பட்டுவிட்டது.’’
 ‘‘அவனை வஞ்சித்தவனின் நிலை?’’
‘‘நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. இன்னும் சில நிமிடங்களில் நீயே தெரிந்துகொள்வாய்’’
அலைபேசி ஒலித்தது.
‘‘எடுத்துப் பேசு. இது முதல் கேள்விக்குப் பதில்.’’
பேசியவர் குழந்தைசாமி.
‘‘ஐயா நீங்க நல்லாயிருக்கணும்யா. பச்சைப்புடவைக்காரி காப்பாத்திட்டாய்யா. என் நிலத்த எடுத்துக்கிட்டதுனால என் மகனுக்கு அரசாங்க உத்தியோகம் கொடுத்திருக்காங்கய்யா. வர சித்திரையில கல்யாணம் வச்சிருக்கேன்யா. நீங்க சொன்ன மாதிரி அந்த வக்கீல் குடும்பம் நல்லா இருக்கணும்னு பிரார்த்தனை பண்ணிக்கிட்டிருக்கேன்யா.’’
உரையாடலை முடித்துவிட்டு முன்னால் இருந்த உமா மகேஸ்வரியைப் பார்த்து விம்மினேன்.
‘‘ஸ்.. என்ன இது குழந்தை போல் அழுதுகொண்டு. . . இரண்டாவது கேள்விக்குப் பதில் வரப்போகிறது.’’
மீண்டும் அலைபேசி ஒலித்தது. பேசியது வேலுாரில் இருக்கும் சுதா  என்ற மனநல மருத்துவர். என்னுடைய வாசகி. நல்ல மனம் கொண்ட பெண்.
‘‘ஒரு நோயாளிக்காக நீங்க பச்சைப்புடவைக்காரிகிட்ட வேண்டிக்கணும். எனக்காக.’’
‘‘நிச்சயமா, டாக்டர்.’’
‘‘ரொம்பப் பரிதாபமான கேசு. அவருக்கு அழகு அழகா ரெண்டு பொண்ணுங்க. அவங்க ரெண்டு பேரும் டூ-வீலர்ல போயிக்கிட்டிருந்தபோது பின்னால வந்த பஸ் மோதி ஸ்பாட்டுலயே இறந்துட்டாங்க. அந்தச் செய்தியக் கேட்ட அவருடைய மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வந்து அவங்களும் இறந்துட்டாங்க. இவருக்கு சித்தம் கலங்கிருச்சி. எல்லாம் நான் செஞ்ச பாவம்னு புலம்பிக்கிட்டேயிருக்காரு. தீமையும் ஒரு நோய்தான்னு நீங்கதானே சொல்வீங்க?’’
‘‘அந்த மனிதரின் அதிர்ஷ்டம், டாக்டர். சரியான நேரத்துலதான் கூப்பிட்டிருக்கீங்க.’’
பச்சைப்புடவைக்காரியின்முன் கைகூப்பி அவள் சொல்லிக்கொடுத்த பிரார்த்தனையை அவளிடமே சொன்னேன்.
‘‘அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்’’
பிரார்த்தனை முடிந்ததும் அன்னை சொன்னாள்.
‘‘அவன்தான் குழந்தைசாமியை வஞ்சித்தவன்.  கர்மதேவதை தன் வேலையைச் செய்துவிட்டாள். உனக்கு என்ன வேண்டும், சொல்’’
‘‘ புரியாமல் துரோகம் செய்துவிட்டான். அவனுக்கும் வாழ்வு கொடுங்கள்.‘‘
‘‘அவன் மனதிலும் அன்பு நிறையட்டும் என்று ஏற்கனவே கேட்டுவிட்டாயே! நான் பார்த்துக்கொள்கிறேன்.’’
 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar