‘வேலாயுதத்தால் வீழ்த்தப்பட்டான் தாரகன்’ என்னும் செய்தியைத் துாதர்கள் மூலம் அறிந்து துயரத்தில் ஆழ்ந்தாள் அவனது மனைவி சவுரி. கணவரின் உடல் மீது புரண்டு புலம்பினாள். தாரகனின் அண்ணனான சிங்கமுகாசுரனின் ஆசுர மாநகருக்குச் சென்றிருந்த அவன் மகன் அசுரேந்திரன் தந்தையின் மரணத்தால் பெரிதும் கலக்கம் உற்றான். பெரிய தந்தையான சூரபத்மனிடம் உடனே இது பற்றிச் சொல்லி ஆவன செய்ய வேண்டும் என்று அவசரமாக வீரமகேந்திரபுரம் விரைந்தான். தென்கடலின் நடுவிலுள்ள வீர மகேந்திரபுரத்தில் தான் சூரபத்மனின் அரண்மனை உள்ளது. உறவினர்கள் பலர் சூழ அங்கு சென்ற தாரகன் பெரியப்பாவின் கால்களைப் பற்றியபடியே கண்ணீர் விட்டுப் புலம்பினான். ‘‘பெரியப்பா! உங்கள் அன்புச் சகோதரர் போரில் இறந்து விட்டார்’’ என்றான்.
தனது தந்தை என்று சொல்லாமல் உங்கள் சகோதரர் தாரகன் என்று ஏன் அசுரேந்திரன் சொன்னான் தெரியுமா? ‘உங்கள் தம்பி’ எனக் கூறினால் தான் சூரபத்மனுக்கு ஆத்திரமும், வீரமும் அதிகப்படும் என்ற உளவியல் காரணம் தான்! இதை கச்சியப்பர், ‘உன்றனது இளவல்தன்னை ஒண்கிரெளஞ்சம் என்னும் குன்றொடும் வேலால் செற்றுக் குறுகினன்’ என்று பாடுகிறார் கச்சியப்பர்.
‘ என்ன தாரகன் இறந்தானா? மகனே! இது பொய்! நடந்தது என்ன என்பதைப் பயப்படாமல் சொல்!’
‘ பெரியப்பா! இந்திரன், திருமால் செய்த சூழ்ச்சியினால் சிவகுமாரன் பூதப்படைகளோடு வந்து போர் நடத்தி என் தந்தையையும், கிரவுஞ்சத்தையும் வேலாயுதத்தால் வீழ்த்தி விட்டான். நான் கூறுவது முற்றிலும் உண்மை. அடங்காத் துயரமும், ஆத்திரமும் கொண்டு சூரபத்மன் கர்ஜித்தான்.
‘தேர்களையும், ஆயுதங்களையும், வீரர்களையும் வினாடி நேரத்தில் இங்கே கொண்டு கூட்டுங்கள். தம்பியை அழித்த முருகப் பெருமானோடு இப்போதே போர் தொடுத்தாக வேண்டும்’ .
அப்போது அமோகன் என்னும் மந்திரி, ‘அசுரர் அரசே! மன்னிக்க வேண்டும். சாம, தான, பேதம் என்னும் மூன்று வழிகளில் முயற்சி செய்யாமல் எடுத்த எடுப்பிலேயே நான்காவதான போர் என்று அறிவிப்பது முறையாகுமா? முதலில் எதிராளியின் பலம் என்ன என்று ஒற்றர்களை அனுப்பி ஆராய வேண்டாமா? எதிராளிகள் வலிமை மிக்கவர்கள் என்று நான் கூறுவதாக தவறியும் நினைத்து விடாதீர்கள். தேவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் தீராதிதீரர் நீங்கள். உங்களுக்கு நிகரான வலிமை பெற்றவர்களுடன் தானே போரிட வேண்டும். முருகனோடு நீங்கள் போரிடுவது பழிப்புக்கு இடமாகும் அல்லவா?
‘நன்று...நன்று. நீ கூறுவதில் பொருள் இருக்கிறது. எதிராளிகளின் படை பலத்தை ஆராய்ந்து வர ஆட்களை அனுப்பலாம்’ என்றான் சூரபத்மன்
இந்நிலையில் தாரகனை வெற்றி கொண்ட பின் படைகளுடன் திருச்செந்துார் நோக்கிப் புறப்பட்டார் முருகப்பெருமான். செல்லும் வழியிலுள்ள சிவத்தலங்கள் பலவற்றில் வழிபாடு நிகழ்த்தினார் வடிவேலன்.
மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாயத் தொடங்கினோர்க்கு
வார்த்தை சொல சற்குருவும் வாய்க்கும் பராபரமே!
சிவபெருமானின் இடது பாகத்தைப் பெற அம்பிகை தவம் செய்த அரிய திருத்தலமான கேதாரம், தலங்களின் தலைநகராக விளங்கும் காசி, நந்திதேவர் தவம் செய்து சிவபெருமானைத் தாங்கும் வலிமை பெற்ற திருப்பருப்பதம், திருமாலும், தேவர்களும் சின்னஞ்சிறு வயதில் தம்மை வழிபாடு செய்தி திருவேங்கடம் (முருகப்பெருமானின் திருத்தலங்களில் ஒன்றாக கச்சியப்பர் குறிப்பிடுகிறார்), சிலந்தியும், பாம்பும், யானையும், கண்ணப்பரும் வழிபட்ட தென்கயிலாயம் என்னும் திருக்காளத்தி, ரத்தின சபையான காரைக்கால் அம்மையார் வழிபட்ட திருவாலங்காடு, முக்தி தரும் ஏழு நகர்களில் முக்கியமான காஞ்சிபுரம், நினைக்க முக்தி அளிக்கும் திருவண்ணாமலை, காசிக்கு நிகரான திருமுதுகுன்றம் என்னும் விருத்தாச்சலம், நடராஜர் தனிப்பெருங் கூத்தாடும் தங்கசபையான சிதம்பரம் முதலான பல திருத்தலங்களைத் தரிசித்த வண்ணம் முருகப்பெருமான் படைகளுடன் காவிரியாற்றின் வடகரையில் உள்ள மண்ணியாற்றங்கரையை வந்தடைந்தார். மாலைநேரம். அந்தியின் செந்நிறத்தில் சிவபெருமானின் திருமேனியையும், இளம்பிறையில் அவர் கையில் ஏந்திய பிரம்ம கபாலத்தையும் முருகப்பெருமானும் தேவர்களும் மனக்கண்ணால் கண்டு மகிழ்ந்தனர். இந்திரனை நோக்கிய முருகப்பெருமான், ‘இவ்விடம் மலர் வனங்களும், மணற்குன்றுகளும் நிறைந்து கண்ணிற்கும், நெஞ்சிற்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும் தருகின்றது. சிவலிங்கம் அமைத்து இங்கே கோயில் எழுப்பி பூஜிக்க விரும்புகிறேன். அனைத்து ஏற்பாடுகளையும் செய்க என்று பணித்தார். வியக்கத்தக்க வண்ணம் விஸ்வகர்மா கோயிலை எழுப்பி சிவலிங்கம் நிறுவினார்.
‘‘திவ்விய தீர்த்தம், நறுமலர்கள், சந்தனம், துாபம், தீபம், திருஅமுது முதலியவைகளை இந்திரன் தருவித்தான். கந்தப் பெருமான் உள்ளம் ஒன்றி தந்தைக்குப் பூசனை செய்தார்.
‘நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீரதனால்
உடம்பு நனைந்து நனைந்து
அருள் அமுதே! ஞான நன்நிதியே!
என் உரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து முருகப்பெருமான் புரிந்த வழிபாட்டில் அனைவரும் பேரின்பமும், புளகாங்கிதமும், மனநிறைவும் பெற்றனர். தேவர்கள் அவ்விடத்திற்கு திருசேய்ஞலுார், குமரபுரி எனப் பெயரிட்டனர். புதல்வன் புரிந்த பூஜையை ஏற்று உமாதேவியரோடு ஈஸ்வரர் இடப வாகனத்தின் மீது தோன்றினார்.
நன்றுடையானை தீயதில்லானை நரைவெள்ளேறு
ஒன்றுடையானை உமை ஒருபாகம் உடையானை
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளி
குன்றுடையானை கூற என் உள்ளம் குளிரும்மே!
திருக்காட்சி அளித்ததோடு அமையாமல் ‘சர்வ சங்காரப்படை’ என்று புகழப்படும் உருத்திரபாசுபதத்தை முருகனின் கரத்தில் அளித்து வாழ்த்தினார். பிறகு பூதரும், தேவரும், வீரரும் புடைசூழ் கந்தவேள் பயணத்தைத் தொடர்ந்தார். காவிரியைக் கடந்து திருவிடைமருதுார், மாயூரம், திருப்பறியலுார் முதலிய தலங்களைத் தரிசித்த வண்ணம் சென்று கொண்டிருந்த போது பராசர முனிவரின் புதல்வர்கள் எதிர்கொண்டு திருப்பரங்குன்றத்திற்கு அழைத்தனர்.
சரவணப் பொய்கையில் முருகப்பெருமானைக் கைகளில் ஏந்தி பார்வதிதேவியார் பால் தரும் பொழுது சிந்திய துளிகளை ஆறு மீன்கள் அருந்தின. பின் அம்மீன்கள் ஆறு முனிவர்களாக உருப்பெற்றார் அல்லவா! அம்முனிவர்களே தற்போது முருகப் பெருமானைச் சந்தித்தனர். முனிவர்களுக்கு திருப்பரங்குன்றத்தில் அருள்புரிந்த பின்னர் கந்தபெருமான் கடற்கரைத் தலமான திருச்செந்துாருக்கு எழுந்தருளினார்.
அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க்குமர
அழியாப் புனித வடிவாகும்
அரனார்க்கு அதிக பொருள் காட்டதிப
அடியார்க்கு எளிய பெருமாளே!
விரிந்து பரந்த வெண்மணற் பரப்பில் சேனை வீரர்களும், தேவர்களும் சூழ அமர்ந்த முருகப்பெருமான், ‘அசுரர்குலம் வளர்ந்தது எப்படி? சூரபத்மன் சகோதரர்கள் தோன்றிய கதை என்ன? எவ்வாறு தவம் செய்து வரங்கள் பெற்றனர்? உங்களுக்கு அசுரர்கள் இழைத்த கொடுமைகள் என்னென்ன? அனைத்தையும் விரிவாக அறிந்து கொள்ள விரும்புகிறேன். சொல்லுங்களேன்’ என்று தேர்களைப் பார்த்து ஒன்று அறியாதவர் போலக் கேட்டார்
பிரணவத்திற்கே பொருள் உரைத்தவர் அசுரர்கள் வரலாற்றை அறிய மாட்டாரா என்ன? ஆசிரியர் விரல் விட்டு எண்ணிக் காட்டி கணிதப்பாடம் நடத்தும் போது, ‘மாணவன் போல ஆசிரியரும் விரல் விட்டுத் தானே எண்ணுகிறார்’ என எண்ணலாமா?
தேவகுருவான வியாழபகவான் பிரகஸ்பதி வணங்கியபடி, ‘தாங்கள் அறியாததா? அனைவரும் தெளிவு பெற வேண்டி இதைக் கேட்கின்றீர்கள்’ என்றவாறு அசுரர்கள் வளர்ந்த கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
நாமெல்லாம் குடும்பத்தினரோடு குழுவாகச் சென்று கடற்கரை மணலில் அமர்ந்தபடி கதை பேசிக் களிக்கின்றோம் அல்லவா! இச்செயலுக்கு மூலகாரணமாக அமைந்தவரே முருகப்பெருமான் தான் என்பதைப் புரிந்து கொள்வோம்!