மகான் ராமகிருஷ்ணரிடம் மூன்று மாணவர்கள் பாடம் பயின்றனர். ஒருமுறை அவர்கள், ‘‘ குருவே...அறிவு, ஞானம் என்பது ஒன்று தானா இல்லை வெவ்வேறா? எனக் கேட்டனர்.
விளக்கம் அளிப்பதாகத் தெரிவித்த ராமகிருஷ்ணர் மூவரையும் ஒரு அறையில் உட்கார வைத்தார்.
மற்றொரு அறைக்குள் சென்ற ராமகிருஷ்ணர் சிறிது நேரம் அங்கிருந்து விட்டு வெளியே வந்தார். அந்த அறையின் கதவுகளை மூடி விட்டு மாணவர்களின் அருகில் வந்தமர்ந்தார்.
முதல் மாணவனிடம், ‘‘அந்த அறைக்குள் மூன்று டம்ளர் பால் உள்ளது. அதில் நீ ஒன்றை மட்டும் குடித்து விட்டு வா’’ என அனுப்பினார். உள்ளே சென்ற அவன். தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று டம்ளர்களில் பால் இருப்பதைக் கண்டான். தங்க டம்ளரில் இருந்த பாலை எடுத்து சந்தோஷமுடன் குடித்து விட்டு வந்தான். அடுத்து இரண்டாவது மாணவன் சென்றான். தங்க டம்ளரில் பால் இல்லாததைக் கண்ட அவன் அதிலிருந்த பால் கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டான். இருந்தாலும் தங்கத்திற்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படும் வெள்ளி வெள்ளி டம்ளரில் இருந்த பாலைக் குடித்தான். ஓரளவு மனதிருப்தியுடன் வெளியே வந்தான். பின்னர் மூன்றாவது மாணவன் அறைக்குள் சென்றான். காலியாகக் கிடந்த தங்க, வெள்ளி டம்ளர்களைக் கண்டதும் கோபம் வந்தது. ‘‘எனக்கு மட்டும் வெண்கல டம்ளர் பாலா? நான் மட்டும் அவ்வளவு மட்டமா? என் நிலைமை இப்படி தாழ்ந்து விட்டதே?’’ என தாறுமாறாகச் சிந்தித்தான். இருந்தாலும் குருநாதரின் கட்டளையை ஏற்று, வெண்கல டம்ளர் பாலைக் குடித்தான். வெளியே வந்த போது அவனது முகத்தில் களையே இல்லை.
ராமகிருஷ்ணர் மூவரையும் பார்த்தார். ‘‘பாலைக் குடித்தீர்களா?’’ எனக் கேட்டார். முதல் மாணவன் மகிழ்ச்சியுடன், ‘‘தங்க டம்ளரில் பால் குடித்தேன்.
குருநாதா...நான் கொடுத்து வைத்தவன் ஆகிவிட்டேன்’’ என்றான். இரண்டாவது மாணவன், ‘‘எனக்கு தங்க டம்ளரில் இல்லாவிட்டாலும் ஓரளவு மகிழ்ச்சி தான் குருநாதா...’’ என்றான். மூன்றாவது மாணவனுக்கு அழுகை பீறிட்டது. ‘‘‘மிக துரதிர்ஷ்டக்காரன் நானே! வெண்கல டம்ளர் தான் கிடைத்தது என்றான்.
அமைதியாக கேட்ட ராமகிருஷ்ணர், ‘‘மாணவர்களே! தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று டம்ளர்களிலும் ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து காய்ச்சிய பால்தான் இருந்தது. மூவருக்கும் ஒரே மாதிரியான சுவை தான் இருந்திருக்கும். ஆனால் நீங்கள் மூவரும் நினைத்தது வேறு.
பால் இருக்கும் டம்ளர்களின் மதிப்பைப் பற்றியே உங்களின் மனம் யோசித்தது. பாலின் குணம், சுவை ஒரே மாதிரி தான் இருக்கும் என்பதை யோசிக்கவில்லை. நீங்கள் பண்டத்தை விட்டு விட்டு பாத்திரத்தையே பார்த்துள்ளீர்கள்! பாத்திரத்தைப் பார்த்து சந்தோஷப்படுவது அறிவு. அதிலுள்ள பண்டத்தைப் பார்த்து இன்புறுவது ஞானம். ஞானிகள் பண்டத்தின் பயன் பற்றியே சிந்திப்பார்கள். பாத்திரங்களுக்கு மதிப்பு தர மாட்டார்கள். மண்சட்டியில் கொடுத்தாலும் கூட மகிழ்ச்சியுடன் குடிப்பார்கள்’’
‘‘அறிவு கொண்டு பார்க்காமல் ஞானக்கண் கொண்டு பார்த்திருந்தால் மூவரும் ஒரே மாதிரியான மனநிலையை எட்டியிருப்பீர்கள்’’ என்றார் ராமகிருஷ்ணர்.