|
பெருமை மிக்க தேவகுரு பிரகஸ்பதி அசுரர்குலம் வளர்ந்த கதையை விவரித்தார். அறுபத்து ஆறுகோடி அசுரர்களின் தலைவனாகிய அசுரேந்திரன், மங்கல கேசி என்னும் அரக்கியை மணந்தான். அவர்களுக்குப் பிறந்த புதல்வி சுரசை. அரக்கர்களின் குருவாகிய சுக்கிராச்சாரியாரிடம் சுரசை அனைத்து மாய மந்திர கலைகளையும் முழுவதுமாகக் கற்றுத் தேர்ந்தாள். அதன் காரணமாக சுரசையை ‘மாயை’ என்றே பெயர் சூட்டி அனைவரும் அழைத்தனர். அரக்கர்கள் தொகை அதிகரிக்கவும், அவர்கள் தேவர்களை அடக்கி ஆளவும் வேண்டும் என்று எண்ணிய சுக்கிராச்சாரியார் மாயையை நோக்கிச் சொன்னார். ‘‘மாய மந்திரங்களில் வல்லவளே! நான் சொல்வதை நன்கு கவனித்துக் கேட்டு அதன்படி நீ நடந்தால் அசுரர்குலம் விருத்தி அடையும். திருமாலும், இந்திரனும், முனிவர்களும் எவ்வளவு காலம் நம் குலத்தை அழிப்பதும், அடக்குவதுமாக இருப்பது? உன் பெற்றோர்கள் வளமும் நலமும் இழந்து வாடுவதா? நம் குலம் இனி உன்னால் தான் நலம் பெற வேண்டும். கடுந்தவம் புரியும் காசிப முனிவர் முன் நீ கட்டழகுத் தோற்றத்தில் சென்று அவர் நெஞ்சில் காமத்தை ஊற்றெடுக்கச் செய்! முனிவரை மயக்கி, புதல்வர்களைப் பெற்று, அசுரர் பலத்தை அதிகரிக்கச் செய்! இதுவே என் தீராத ஆசையும் தீர்மானமான கட்டளையும்’’ என்றார். ‘‘குருநாதரே! மேருமலைக்கு வடக்கே பொட்டல் காட்டில் பொறிபுலன்களை அடக்கித் தவம் புரிகிறார் காசிபமுனிவர் என்பதை மாயத்தால் இப்போதே அறிந்து கொண்டு விட்டேன். பேரழகியாகப் புறப்படுகிறேன்! தேவர்களுக்குப் பேரழிவைத் தரப் போகிறேன். ஆசியளியுங்கள் அசுரகுருவே! தேவர்களின் தந்தை தான் காசிபர் என்பதை நான் அறிவேன். அவரே அசுரர்களின் தந்தையாகவும் மாற நான் ஆவன செய்கிறேன். வசீகரத் தோற்றத்துடன் மேருமலைக்குச் சென்றார் மாயை. மான் அல்லவோ கண்கள் தந்தது! மயில் அல்லவோ சாயல் தந்தது! தேன் அல்லவோ மொழியைத் தந்தது! சிலை அல்லவோ அழகைத் தந்தது! காமவல்லியாகச் சென்ற அவள் காசிபர் தவம் செய்யும் இடத்தில் பூஞ்சோலைகளையும், புனல் பொங்கும் ஓடைகளையும், மல்லிகைப் பந்தல்களையும், மலர் படுக்கைகளையும் உருவாக்கினாள். பொட்டல் காட்டில் தியானத்தில் இருந்த காசிபரின் உடல்மீது திடீரென்று குளிர் பூந்தென்றல் பட்டது. கண்ணைத் திறந்தார் காசிபர். கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே! தருநிழலே! நிழல் கனிந்த கனியே! ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே! உகந்த தண்ணீரிடை மலர்ந்த சுகந்த மணமலரே! மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே! மென்காற்றில் விளைசுகமே! சுகத்தில் உறும் பயனே! காசிபரின் விழிகளிலே மனதை மயக்கும் வசீகரத் தோற்றத்தில் மாயை காட்சி தந்தாள். அடுத்த கணம் காமம் தலைக்கேற காசிபர், ‘‘பெண்ணே! உன் மீது மையல் கொண்டேன். அனுபவிக்க விரும்புகிறேன். ஏற்றுக் கொள் என்று மாயையின் கால்களிலே விழுந்தார் மகாமுனிவர். ‘காமத்திற்கு கண் கிடையாது’ என்பார்கள். கச்சியப்பர் பாடுகிறார். மிகவும் கொடுமையானது காமம். சிறப்பையும், செல்வத்தையும் அழிக்கும். அறிவொளியை அணைத்து நரகத்தில் தள்ளும். தீமை உள்ளன யாவையும் தந்திடும் சிறப்பும் தொழில் செல்வமும் கெடுக்கும். ஏம நன்னெறி தடுத்து இருள் உய்த்திடும். காமம் அன்றியே ஒருபகை உண்டு கொல்? கள்ளினும் கொடியது காமத் தீயதே! நஞ்சினும் தீயது நலமில் காமமே! மையல் கொண்ட காசிபரிடம் மறுப்பது போல் நாடகமாடினாள் மாயை. ‘‘முனிவரே! தனித்திருக்கும் ஒரு பெண்ணிடம் தகாத வார்த்தைகளைப் பேசுவது முறையாகுமா? கங்கையில் நீராடுவதற்காக நான் இப்பக்கம் வந்தேன். ‘கங்கையாற்றை உனக்காக இங்கேயே ஓடச் செய்வேன். காரிகையே! என் விருப்பத்திற்கு இணங்கி விடு.’ கருத்தழிந்து நின்ற காசிபரைக் கண்டு தன் திட்டம் வெற்றி பெற்றதில் திருப்தி அடைந்தாள் மாயை. மாதவரே! நான் எடுக்கும் வடிவத்தை நீங்களும் எடுத்தால் இவ்விரவு முழுவதும் இருவரும் இன்புறலாம். இரவின் முதல் ஜாமத்தில் பேரழகு பெண்ணாக மாயையும், ஆற்றல் வாய்ந்த இளம் வாலிபனாக காசிபரும் மாறினர். ‘ரிஷி கர்ப்பம் ராத் தாங்காது’ என்பார்களே! அக்கணமே அவர்களின் கூடலில் பிறந்தான் சூரபத்மன்! இரண்டாவது ஜாமத்தில் சிங்கத்தின் வடிவுடன் இருவரும் சேர சிங்கமுகாசுரன் ஜனனம் ஆனான். யானை வடிவில் மூன்றாவது ஜாமத்தில் இருவரும் சேர்ந்தனர். அப்போது தோன்றினான் தாரகாசுரன். பின்னர் நான்காவது ஜாமத்தில் ஆடாக இருவரும் கூட ஆட்டு முகத்துடன் அஜமுகி என்ற பெண் அரக்கி பிறந்தாள். சூரபத்மன், சிங்கமுகன், தாரகன், சகோதரி அஜமுகி இவர்களுடன் இருவரின் வியர்வையில் உருவான பல்லாயிரம் அசுரர்களும் ஒன்று சேர அசுரர் குலம் ஒரே இரவில் பூதாகாரமாகப் பெருகியது. வெவ்வேறு மிருக வடிவில் இருவரும் ஒன்று கூட தீய அர்க்கர்கள் தோன்றினர் என்பதால் தாய், தந்தையர் எந்த உணர்வோடு இல்லறத்தில் ஈடுபடுகிறார்களோ அதற்கேற்ப தான் குழந்தைகளின் குணநலன்கள் அமையும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கருவில் இருந்தே திருமால் சரிதம் கேட்டதனால் பக்த பிரகலாதன் பிறந்தான். சிறந்த வீரர்களின் வரலாற்றை ஜனனத்திலேயே தெரி்நது கொண்டதால் வீர சிவாஜி உருவானான். உச்சந்தலைக்கு ஏறிய காம உணர்வில் இரவு முழுவதும் கழிந்த பின் அடுத்தநாள் காலையில் சூரியன் உதித்தான். கதிரவனின் பிரகாசத்தில் நல்உணர்வு பெற்ற காசிபர் சூரன் உள்ளிட்ட இரண்டு லட்சம் அசுரப் புதல்வர்களைப் பார்த்தார். அப்போது முனிவரைப் பார்த்து மாயை. ‘‘அசுர குலம் தழைக்கவே கட்டழகியாக உருமாறி, ‘அசுரேந்திரன் – மங்கலகேசியின் புதல்வியான நான் உங்களிடம் வந்தேன். வந்த வேலை முடிந்து விட்டது. என் பிரிவால் வருந்தாதீர்கள். எங்கள் குரு சுக்கிராச்சாரியாரிடம் புதல்வர்களை அழைத்துச் செல்கிறேன் என்று கூறிப் புறப்பட்டாள். வெள்ளை வெளேரென்று துாய்மையாக உடை அணிந்த ஒருவன் அத்துணியில் அழுக்குப்பட அனுமதிக்க மாட்டான். ஆனால் தப்பித் தவறி உடையின் துாய்மை சற்று கெட்டுப் போய் விட்டதென்றால் தொடர்ந்து அழுக்குப்பட அவனே அனுமதித்து விடுவான். கெட்ட செயல்களும் அப்படித்தான். தொடர்ந்து நம்மை தொற்றிக் கொள்ளும். மாயை ஒவ்வொரு ஜாமத்திலும் வெவ்வேறு வடிவம் எடுக்கத் தாமும் அவ்வடிவம் எடுத்து இன்பம் துய்த்ததற்காக காசிபர் மனம் வருந்தினார். அறிவு தெளிந்து மீண்டும் தவம் செய்யப் புறப்பட்டார். சூழ்ச்சியில் வல்லவரான சுக்கிராச்சாரியாரை சூரபத்மன் முதலான தம் மக்களுடன் மாயை வந்து வணங்கினாள். குருநாதரை அனைவரும் கும்பிட்டனர். தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே! அனைவரையும் ‘நீடுழி வாழ்க’ என ஆசிர்வாதம் செய்த குருநாதர் மேலான மந்திர உபதேசம் செய்தார். சூரனே! பெருஞ்செல்வத்தையும், வெற்றியையும், புகழையும், அழிவில்லாத ஆயுதங்களையும் பெற்று இந்திரன், பிரம்மன், திருமால் இவர்களுக்கு மேலான நீ ஆட்சி புரிய வேண்டும். சிவபெருமானுடைய மூலமந்திரம் ஒன்றை உபதேசிக்கின்றேன். பொறிபுலன்களை அடக்கி, ஒருமைப்பட்ட மனதுடன் விடாமல் மந்திரத்தை உச்சரிப்பாய்! தோல்வி உன்னைத் தொடாமல் இருக்க, வெற்றித் திருமகள் எப்போதும் உன்னைப் பற்றி இருக்க இடம் மகாமந்திரத்தை ஜபித்து மாபெரும் வேள்வி செய்! அனைவரும் அசுரகுருவின் அடிமலர்களில் விழுந்து எழுந்தனர்.
|
|
|
|