|
திருப்பூர் கிருஷ்ணன்
காஞ்சி மடத்திற்கு தினமும் வருவாள் அந்தப் பெண். மகாபெரியவரை தரிசித்து அவரது ஆன்மிக கருத்துக்களைக் கேட்டுப் பயன் பெறுவாள். ஒருநாள் அவள் தரிசிக்க வந்த போது பெரியவர் அதிகம் பேசவில்லை. ‘ பெரியவா...மிக குறைவாகப் பேசுறாரே’ என மடத்து அன்பர்களிடம் விசாரித்தாள். பெரியவருக்கு வாய்ப்புண் இருப்பதைக் கேள்விப்பட்டாள். அவர் நலம் பெற வேண்டும் என அவள் மனம் பரபரத்தது. உஷ்ணத்தால் ஏற்பட்ட வாய்ப்புண் வெண்ணெய் சாப்பிட்டால் தீரும் என்பதை அவள் அறிவாள். உடனடியாக வீட்டுக்கு ஓடினாள். தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்தாள். அதை ஒரு தொன்னையில் எடுத்துக் கொண்டு மடத்துக்கு வந்தாள். ‘‘பெரியவா...வாய்ப்புண்ணுக்கு வெண்ணெய் சாப்பிட்டா நல்லது’’ என அவரது முன்னிலையில் வைத்தாள். அப்போது ஒரு குழந்தை ஓடி வந்து, வெண்ணெயை ஆசையுடன் பார்த்தது. ‘‘உனக்கு வெண்ணெய் வேணுமா?’’ எனக் கேட்டார் மகாபெரியவர். அதுவும் தலையசைத்தது. ‘‘இந்தா...எடுத்துக்கோ’’ என்றார் வெண்ணெயைச் சாப்பிட்டவாறே குழந்தை நகர்ந்தது. அந்த பெண்ணுக்கோ வருத்தம். மகாபெரியவருக்காக வெண்ணெய் கொண்டு வந்தும் அவர் சாப்பிடவில்லையே? வாய்ப்புண் எப்படி குணமாகும்? என்ற யோசனையுடன் மடத்தில் இருந்து கிளம்பினாள். மறுநாள் காலையில் வந்தாள். அப்போது மகாபெரியவர், ‘‘நீ கொடுத்த வெண்ணெய்யால் வாய்ப்புண் குணமாகி விட்டது’’ என்றார் ஆச்சரியப்பட்ட அவள், ‘‘பெரியவா... நீங்க தான் வெண்ணெய் சாப்பிடலையே? குழந்தைக்கு அல்லவா கொடுத்தீர்கள்’’ என்றாள். ‘‘நீ வெண்ணெய் கொண்டு வந்தது என்னவோ எனக்குத்தான். ஆனால் அதைச் சாப்பிட்டது அந்தக் குழந்தை. எல்லாக் குழந்தையும் கண்ணனுடைய வடிவம்தான். குழந்தை சாப்பிட்டால் கண்ணன் சாப்பிட்ட மாதிரி. அவன் சாப்பிட்டால் எல்லோரும் சாப்பிட்ட மாதிரி. பாஞ்சாலியின் அட்சய பாத்திரத்தில் இருந்த ஒரே ஒரு பருக்கையைக் கண்ணன் சாப்பிட்டதும், துர்வாசர் வயிறு நிறைந்த கதை உனக்குத் தெரியாதா என்ன? கண்ணன் சாப்பிட்ட பருக்கையால், துர்வாசர் வயிறு நிறைந்தது போல நேற்று நீ கொடுத்த வெண்ணெய்யை குழந்தை சாப்பிட்டதும் எனக்கு வாய்ப்புண் குணமானது. அவ்வளவு தான்’’ என்றார். அவளும் நெகிழ்ச்சியுடன் பிரசாதம் வாங்கி மகிழ்ந்தாள்.
|
|
|
|