|
முருகக் கடவுள் ஒருவரையே தனது வழிபடு கடவுளாகக் கொண்டு, சைவ சமயத்தையே தனது மெய்ச் சமயமாய்க் கருதி, சீரிய தவ வாழ்க்கை வாழ்ந்தவர் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் ஒரு சமயம் பாம்பன் தலத்திலிருந்து தெய்வீக யாத்திரைக்குப் புறப்பட்டார் சுவாமிகள். திருவண்ணாமலை உள்ளிட்ட பல தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்தவர், பின் காஞ்சிபுரத்தை அடைந்தார். ஆடிசன் பேட்டையில் உள்ள ஜவுளிக்கடைச் சத்திரத்தில் தங்கினார். சில நாட்கள் அங்கு தங்கியிருந்து காமாட்சி அம்மன், ஏகாம்பரேசுவரர், கச்சபேசுவரர் எனப் பல கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தார். பின் தன் கையிருப்பு வெகுவாகக் குறைந்ததால், சத்திரத்தைக் காலி செய்துவிட்டு சொந்த ஊருக்குப் புறப்பட்டார். அப்போது சிவந்த நிறமும், தலையில் வெண் பட்டுத் தலைப்பாகையும் அணிந்திருந்த ஓர் இளைஞர் வேகமாக சுவாமிகள் எதிரே வந்தார். சுவாமிகளையே உற்றுப் பார்த்தவர், “ஐயா, நீங்கள் யார், எந்த ஊர், இங்கு வந்த காரணம் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார். “நான் தென்னாட்டைச் சேர்ந்தவன். பாம்பன் என் சொந்த ஊர். பெயர் குமரகுருதாசன். இங்கே சுவாமி தரிசனம் செய்ய வந்தேன். தரிசனம் எல்லாம் ஆகி விட்டது. அதனால் ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றார் சுவாமிகள். “ஓகோ, தரிசனம் எல்லாம் ஆகி விட்டதா, சரிதான்! ஆமாம், குமரக் கோட்டம் சென்று தரிசித்தீர்களோ?” என்று கேட்டார் அந்த இளைஞர். “குமரக் கோட்டமா? இல்லையே ஐயா! அது எங்கே உள்ளது? நான் தரிசிக்கவில்லையே!” என்றார் சுவாமிகள் “ம், சரிதான்! வாருங்கள் என் பின்னோடு. அது முருகப் பெருமான் உறையும் தலம். கச்சியப்பர் கந்த புராணம் அரங்கேற்றிய தலமும் கூட. அதைத் தரிசிக்காமல், எல்லா தரிசனமும் ஆகி விட்டது என்று ஊருக்குப் புறப்பட்டு விட்டீர்களே! நல்ல வேடிக்கை ஐயா!” என்று சற்று கிண்டலாக இடித்துரைத்தவாறே, சுவாமிகளை அழைத்துச் சென்றார் அந்த இளைஞர். முருகனின் அருட்தலம் என்றதும் உடலெல்லாம் புல்லரித்தது சுவாமிகளுக்கு. அதுவும் கச்சியப்ப சிவாசாரியார் கந்த புராணத்தை அரங்கேற்றிய தலம் என்றால் அதன் பெருமைக்குக் கேட்கவா வேண்டும்! “நன்றி ஐயா! நன்றி! மிக்க நன்றி!” என்று கண்ணீர் மல்க, அந்த இளைஞருக்கு நன்றி சொல்லிக் கொண்டே வந்தார் சுவாமிகள். சற்று நேரத்தில் கோயில் கோபுரம் தெரிந்தது. பின் ஆலய நுழைவாயிலும் கொடி மரமும் தெரிந்தன. “இது தான் ஐயா, குமரக் கோட்டம். உள்ளே வந்து சுவாமி தரிசனம் செய்யுங்கள்” சொல்லிக் கொண்டே கோபுர வாயிலுள் நுழைந்தார் அந்த இளைஞர். அவ்வளவுதான், சட்டென்று காணாமல் போனார். திகைத்துப் போனார் பாம்பன் சுவாமிகள். சுற்று முற்றும் பார்த்தார். அங்கும் இங்கும் தேடினார். அந்த இளைஞர் அகப்படவே இல்லை. மாயமாய் மறைந்தவர், மறைந்ததுதான். யார் அந்த இளைஞர், ஏன் பாம்பன் சுவாமிகளை குமரக் கோட்டம் தலத்திற்கு அழைத்து வந்தார், ஏன் பின் மாயமாய் மறைந்தார் என்றெல்லாம் அறிய தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் வெளியீடான, பா.சு.ரமணன் எழுதிய ‘ஸ்ரீ பாம்பன் சுவாமிகள்’ புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.
|
|
|
|