|
ஜெயமணி ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை. பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்த அவள், ஒருமுறை தன் மகள் ஆர்த்திக்கு பாடம் எடுக்கும் சூழ்நிலை உருவானது. ஆர்த்திக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள். ஆர்த்தியின் கணவர் முகேஷ் எளிய உணவு விடுதி ஒன்றை நடத்தி வந்தார். அவர்களின் வாழ்க்கை சீராகக் கழிந்தது. ஆனால் முகேஷின் அண்ணனோ அசுர வேகத்தில் வீடு, கார் என வாங்கி பலரையும் ஆச்சர்யப்படுத்தினார். அதைக் கேள்விப்பட்ட சிலர், ‘‘என்ன.. ஆர்த்தி... நீங்க கார் வாங்கலயா... நீ கொடுத்து வச்சது அவ்வளவுதான் போலிருக்கு’’ என துாண்டி விட்டனர். ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு வந்தாள் ஆர்த்தி. பேத்திகளைக் கண்ட ஜெயமணி அன்புடன் அணைத்துக் கொண்டாள். ‘‘என்னம்மா... மாப்பிள என்ன பண்றார்... வீட்டில் எல்லோரும் சவுக்கியமா...’’ எனக் கேட்டாள். “ம்... எல்லாரும் நல்லா இருக்காங்க... நான் மட்டும் தான் ’’ என்று இழுத்தாள். அதைக்கேட்ட ஜெயமணிக்கு மகளின் மனஓட்டம் புரிந்தது. ‘‘ஏம்மா..ஏதாச்சும் பிரச்னையா’’ எனக் கேட்டாள். ஆர்த்தி தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தாள். ‘‘ம்... இதுதான் உன் பிரச்னையா... இதுக்காகவா வருத்தப்படற’’ ‘‘நீ சொல்லுவம்மா... என்னோட கஷ்டம் உனக்கு எப்படி புரியப் போகுது’’ என கோபித்தாள். ‘‘அம்மா... ஆர்த்தி உன்னோட கஷ்டம் புரியதும்மா. நானும் உன் வயதை கடந்து வந்தவ தானே...நாம் எல்லோரும் பணம் தான் வாழ்க்கைன்னு ஓடிக் கொண்டிருக்கிறோம். அதிலும் மத்தவங்களோட ஒப்பிட்டு மனம் புழுங்குவதை வார்த்தையால சொல்லி முடியாது. நான் கூட அந்தக் காலத்துல உன்னைப் போல வருத்தப்படுவேன். ஆனால் நம் ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் தனித்தன்மை கொண்டது. அதனால மத்தவங்களோட ஒப்பிடக் கூடாதுங்கறது பிறகு தான் புரிஞ்சுது. முகேஷ் அண்ணன் நல்ல உழைப்பாளி. அதிர்ஷ்டமும் கை கொடுக்க, மளமளன்னு முன்னேறிட்டாரு. அதுக்காக மாப்பிள்ளை ஒன்னும் தகுதியில்லாதவர் இல்ல. நிச்சயம் அவருக்கும் காலம் கைகொடுக்கும். அது வரை பொறுமையுடன் இரு. ஆர்த்தி... நீ மூங்கில் காடுகளை பார்த்திருக்கியா? மண்ணில் இருந்து வெளியே வர மூங்கில் பலகாலம் எடுத்துக் கொள்ளும். ஆனால் அதன் பின்பு அதன் வேகம் அசுர வளர்ச்சியா இருக்கும். சாதாரண காற்றுக்கும் மழைக்கும் கூட சில மரங்கள் வேரோடு சாயும். புயலே அடிச்சாலும் மூங்கில் வளைந்து கொடுத்து நிற்கும். அதன் வேர் மரத்தை சாயவிடாமல் மண்ணில் ஆழமாய் பிடிச்சிருக்கும். தாமதம் ஆனாலும் மூங்கில் போல மாப்பிள்ளையும் வாழ்க்கையில சாதிப்பார். ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு வளர்ச்சி, ஒரு தேவை இருக்கு. உன் கணவரை அவர் அண்ணனோடு ஒப்பிடாதே. ஒவ்வொருவரின் வளர்ச்சியும், பாதையும் தனித்துவம் கொண்டது. ஒருவரின் பாதை இன்னொருவருக்கு உதவாது. வளர்ச்சி தள்ளிப்போவதை நினைச்சு வருந்தாதே. பொறுமையுடன் கடமையைச் செய். வளர்ச்சி தானாக வரும். அப்போது உலகமே உன்னை அண்ணாந்து பார்க்கும்’’ என்றாள் ஜெயமணி. ஆர்த்தியின் கண்களில் ஈரம் கசிந்தது. தெளிந்த மனதுடன் தாயை அணைத்துக் கொண்டாள்.
|
|
|
|