Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » எந்தன் உயிர்க்காதலியே!
 
பக்தி கதைகள்
எந்தன் உயிர்க்காதலியே!


என் முன்னால் அமர்ந்திருந்தாள் வந்தனா. வயது முப்பத்தியிரண்டு. அழகி. விவாகரத்து ஆனவள். ‘பித்துப் பிடித்தவளைப் போல் இருக்கிறாள், கொஞ்சம் பார்த்துப் பேசுங்களேன்’ என்று என் நண்பர்  இவளை என்னிடம் அனுப்பி வைத்திருக்கிறார். நாங்கள் அமர்ந்திருந்தது ஒரு உணவகத்தில்.
‘‘அஞ்சு வருஷத்துக்கு முன்னால கல்யாணம். கணவர் தொழிலதிபர் சிவராமன்.’’
பெரிய கோடீஸ்வரன் ஆயிற்றே!
‘‘குழந்தையில்ல. ரெண்டு பேரும் பரிசோதனை பண்ணிக்கிட்டோம். எனக்குக் குழந்தை பிறக்கவே வாய்ப்பில்லன்னு டாக்டர் சொல்லிட்டாரு. அதையே காரணமா வச்சி என் புருஷன் என்ன டைவர்ஸ் பண்ணிட்டாரு சார்.’’
சரி, வயிற்றுப்பாட்டுக்கு வழி?
‘‘அதுக்கு ஒரு குறையும் இல்ல சார். எனக்கு ஒரு பெரிய பிளாட், காரு, நுாறு பவுன் நகை, பேங்க்ல அம்பது லட்சம் பணம் கொடுத்திருக்காரு.’’
பின் என்னதான் பிரச்னை?
‘‘என் வாழ்க்கையே போயிருச்சே? ஈ எறும்புக்குக்கூட துரோகம் நினைக்காத எனக்கு  ஏன் சார் இப்படி நடக்கணும்? நாள் தவறாமப் பச்சைப்புடவைக்காரியக் கும்பிடற எனக்கே இப்படி நடந்தா  அவள நெனக்காதவங்க எல்லாம் எவ்வளவு கஷ்டப்படுவாங்க?  தன் குழந்தைங்களுக்குக் கஷ்டத்தக் கொடுக்கறவ ஒரு மனுஷியாவே இருக்க முடியாதே! அப்பறம் எப்படித் தாயா, தெய்வமா இருக்க முடியும்?’’
ஒரு சர்வர் ஓடிவந்தார்.
‘‘உங்கள மேனேஜர் கூப்பிடறாங்க.’’
ஓடினேன்.
கல்லாவில் கம்பீரமாக அமர்ந்தபடி என்னைப் பார்த்துப் புன்னகைத்தவளை அடையாளம் கண்டு வணங்கினேன்.
‘‘ஒரேயடியாகப் புலம்புகிறாளோ?’’
‘‘உங்களைப் பழிக்கிறாள், தாயே! எனக்குக் கோபமும் அழுகையும் சேர்ந்து வருகிறது’’
‘‘அவள் கர்மக்கணக்கு.’’
‘‘அவளுடைய கர்மக்கணக்கு எனக்கெதற்கு?’’
‘‘உன் மூலம்  கணக்கை நேர் செய்ய அவளுக்கு ஒரு வாய்ப்பு தரலாம் என்றிருக்கிறேன்.’’
அன்னை வந்தனாவைப் பற்றிச் சொன்னாள்.
சேது என்ற இளைஞனை வந்தனா  காதலித்திருக்கிறாள். சேதுவிற்கு வந்தனாதான் எல்லாம். அந்தச் சமயத்தில் வந்தனாவிடம் தொழிலதிபரான சிவராமன் தன் காதலைச் சொல்லியிருக்கிறான். தான் செல்வந்தன் என்பதையும் கோடிகாட்டியிருக்கிறான். அதில் மயங்கிய வந்தனா தன் காதலன் சேதுவை விட்டு விலகினாள்.  
 காதல் தோல்வியைத் தாங்கமுடியாத சேது  வேலையை விட்டான். மதுவிற்கு அடிமையானான். அந்த அதிர்ச்சியில் அவனது தாயும் இறந்தாள். ஏற்கனவே தந்தையில்லை. சேது தனியாளாக, குடிகாரனாக, நடைப்பிணமாக வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
‘‘நான் என்ன செய்யட்டும், தாயே?’’
‘‘அவளிடம் பேசத் தொடங்கு. மற்றதை நான் உன் மூலம் செய்கிறேன்.’’
அன்னையை வணங்கிவிட்டு வந்தனாவிடம் ஓடினேன்.
‘‘வந்தனா, என்னமோ சொல்லிக்கிட்டிருந்தியே?’’
‘‘ஈ எறும்புக்குக்கூட துரோகம் நினைக்காத எனக்கு ஏன் சார் இப்படி நடக்கணும்? நாள் தவறாம.. .’’
‘‘நிறுத்து.’’
நான் போட்ட சத்தத்தில் பக்கத்து மேஜைகளில் இருந்தவர்கள் எல்லாம் என்னை முறைத்துப் பார்த்தனர்.
‘‘ஈ எறும்புக்குக்கு துரோகம் செஞ்சாக்கூடத் தப்பில்ல. மன்னிச்சிரலாம். அப்பாவி மனுஷனுக்கு துரோகம் செஞ்சிருக்கியே! நல்லா வாழ்ந்துக்கிட்டிருந்தவனுக்குக் காதல் ஆசை காட்டி அவனை நடைப்பிணமாக்கிட்டு நீ கோடிகள்ல புரளணும்னு நெனச்சி சிவராமனக் கட்டிக்கிட்டது துரோகம் இல்லாமத் தியாகமா?’’
வந்தனா அழத்தொடங்கினாள். சில நிமிடம் கழித்துக் கண்களைத் துடைத்தபடி கரகரத்த குரலில் பேசினாள்.
‘‘அதுக்கு என்ன பரிகாரம் செய்யணும்னு சொல்லுங்க, உடனே செய்யறேன். மீனாட்சிக்குத் தங்கத் தேர் இழுக்கட்டுமா? இல்ல, நுாறு பேருக்கு அன்னதானம் செய்யட்டுமா?’’
‘‘இருட்டுல தொலைச்ச காச வெளிச்சத்துல தேடினா எப்படி? போய் உன் காதலனைத் தேடிக் கண்டுபிடிம்மா. பாவம், துணையில்லாமத் தவிச்சிக்கிட்டிருக்கான். அவனை வாழ வை. பச்சைப்புடவைக்காரி உன்னை வாழ வைப்பா.’’
சிறிது நேரம் தொலைவில் வெறித்துப்பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு என்னிடம் விடைபெற்றாள்.

உணவகத்தில் யாருமேயில்லை. மூடும் நேரம் போலிருக்கிறது. கல்லாவில் அமர்ந்திருந்த கனகவல்லியை விழுந்து வணங்கினேன்.
‘‘எனக்கு நம்பிக்கையில்லை, தாயே! இவள் பணத்தாசை பிடித்தவள். இவள் தன் முன்னாள் காதலனை வாழவைப்பாள் என்று தோன்றவில்லை.’’
‘‘வைப்பாள். அடிப்படையில் இவள் நல்லவள். ஏதோ ஒரு பலவீனமான தருணத்தில் ஆசைக்கு அடிமையாகித் தன் வாழ்வைத் தொலைத்துவிட்டாள். நீ அவளுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியமே செய்திருக்கிறாய். அதற்கு நல்ல பலனைத் தருவது என்று முடிவு செய்துவிட்டேன்.’’
பலன் எப்படி இருக்கும்?
‘‘அவளுடைய வருங்காலத்தைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறாயா?’’
‘‘நான் தெரிந்து கொள்ளவேண்டும் என நீங்கள் விரும்பினால் தெரிந்து கொள்கிறேன்.’’
‘‘அங்கே நடப்பதைப் பார்.’’
அடுத்த இரண்டு நாட்களில் குடித்துவிட்டுத் தெருவில் கிடந்த தன் முன்னாள் காதலனைக் கண்டுபிடித்தாள் வந்தனா. தன் ஓட்டுனரின் துணையுடன் காரில் அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வந்தாள்.
சிறந்த மருத்துவர்களின் உதவியிடன் அவனை  மறுவாழ்வு மையத்தில் சேர்த்தாள். நான்கு மாதங்கள் படாத பாடு பட்டாள். ஒருவழியாக சேது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பினான். தன் காதலி திரும்பக் கிடைத்துவிட்டாள் என்று தெரிந்தவுடன் ஆனந்தக் கூத்தாடினான். இருவரும் அன்னையின் கோயிலுக்குச் சேர்ந்து சென்றனர். மீனாட்சி சன்னதியில் வந்தனாவின் கைமேல் தன் கையை வைத்து இனிமேல் எந்தக் காலத்திலும் மது அருந்த மாட்டேன் என சத்தியம் செய்தான் சேது.
அவனுக்கு ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வந்தனா-சேதுவின் திருமணம் மீனாட்சியம்மன் கோயிலில் எளிமையாக நடந்தது.  
அதன்பிறகுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. வந்தனா கர்ப்பமானாள்.
‘‘எனக்குத்தான் கருப்பையில் கோளாறு என்று அந்தப் பெண் டாக்டர் சர்ட்டிபிகேட் கொடுத்திருக்காங்களே! இது எப்படி சாத்தியம்?’’
இருவரும் வேறு ஒரு மருத்துவரிடம் சென்றார்கள். அவளிடம் எந்தக் குறையும் இல்லை என்று சொல்லிவிட்டார் அவர். உரிய காலத்தில் நல்ல, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என்றும் சொன்னார்.
‘‘வந்தனா, அந்த டாக்டர் கொடுத்த சர்ட்டிபிகேட் இருக்கா?’’
‘‘இதோ.’’
சேதுவின் ஆலோசனையின் பெயரில் வந்தனா அந்த மருத்துவர் மீது மோசடி வழக்கு தொடர்ந்தாள். அவளைப் பற்றி மருத்துவக் கவுன்சிலில் புகார் செய்தாள்.
அந்த வழக்கில் வந்தனாவிற்கு நாற்பது லட்சம் நஷ்ட ஈடு கிடைத்தது.
ஒன்பதாம் மாதம் தங்கச்சிலை போன்ற ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் வந்தனா.

காட்சி முடிந்ததும் அன்னையை மீண்டும் ஒரு முறை விழுந்து வணங்கினேன். எவ்வளவோ பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவளைப் பார்த்துக் கைகூப்பியபோது வார்த்தைகள் வரவில்லை. விம்மல்கள்தான் வந்தன.
அன்னை குறும்புச் சிரிப்புடன் கேட்டாள்.
‘‘வந்தனாவை வாழ வைத்துவிட்டேன். உனக்கு என்ன வேண்டுமென்று சொல்.’’
‘‘உங்களிடம் இனிமேல் நான் எந்தப் பிரார்த்தனையும் செய்யக்கூடாது. எனக்கு எந்த வேண்டுதலும் இருக்கக்கூடாது. அந்த வரத்தைக் கொடுங்கள், தாயே!’’
‘‘ஏனப்பா?’’
‘‘உங்களிடம் எனக்கு ஒன்று வேண்டும் என்று கேட்டால்  உங்கள் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கை முழுமையாக இல்லை என்றுதானே அர்த்தம்? பால் நினைந்துாட்டும் தாயினும் சாலப்பரிந்து உங்கள் குழந்தைகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதை முன்கூட்டியே கொடுக்கும் அன்பரசி நீங்கள். அப்படிப்பட்டவர்களிடம்  பணத்தைக் கொடு, புகழைக்கொடு எனக் கேட்பது உங்கள் அன்பை அவமதிப்பதாகாதா?’’
‘‘என்னிடம் எதையாவது நீ கேட்டாக வேண்டும்.’’
‘‘என் உடல் அழிந்து, என் உள்ளம் சிதைந்து,  உயிர்க்கொல்லும் வலியால் துடிக்கும்போது உங்கள் அன்பை நினைத்து அழக்கூட முடியாத நிலை வந்தாலும் நான் உங்களுடைய கொத்தடிமை என்ற நிலை மாறக் கூடாது, தாயே.’’
சிரித்தபடி காற்றில் கலந்தாள் என்னைக் கொத்தடிமையாகக் கொண்டவள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar