|
கணவருக்கு வீட்டில் காபி ஊற்றிக் கொடுத்தாள் மனைவி. அதில் எறும்பு ஒன்று மிதந்தது. அதைப் பார்த்ததும் கணவர், காபியை விடக் கொதிக்க ஆரம்பித்து விட்டார். டம்ளரோடு காபியை வீசினார். சந்தோஷமான வீடு போர்க்களமாக மாறியது.
இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது. அங்கிருந்த கணவர் காபியில் மிதக்கும் எறும்பை கையில் எடுத்தார். மனைவியை அழைத்து, ‘‘உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகர் இந்த எறும்பு தான் போலிருக்கு. நீ தயாரித்த காபிக்காக உயிரையே கொடுத்து விட்டதைப் பார். இது போன்ற ரசிகர்களை வீணாக இழந்து விடாதே’’ எனக் கிண்டல் செய்தார்.
மனைவி சிரித்தாலும் தவறை உணர்ந்து வெட்கப்பட்டாள். அதன் பின் சர்க்கரை டப்பாவிற்குள் எறும்பு புகாதபடி பாதுகாத்தாள். அதனால் காபியில் எறும்பும் சாகவில்லை. வீட்டின் மகிழ்ச்சியும் சாகவில்லை.
வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதும், சங்கடத்தில் முடிப்பதும் பிரச்னைகளை கையாளும் விதத்தில் தான் உள்ளது.
நமக்கு மட்டும் தான் கோபம் வரும் எனவும், நாம் தவறே செய்ய மாட்டோம் எனவும் யாரும் நினைப்பது கூடாது. இனியாவது நகைச்சுவையாகவோ, அன்பாகவோ, இனிமையாக பேசியோ மற்றவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள். நிம்மதியாக வாழுங்கள்.
|
|
|
|