|
சுத்தியல் ஒன்று தானே வலிமையானவன் என மனதில் எண்ணி வந்தது. ஒருநாள் சாவி தொலைந்து போனதால் பூட்டைத் திறக்க எண்ணி அந்த சுத்தியலை எடுத்துப் பூட்டை அடித்தான் வீட்டுக்காரன். பூட்டிற்குக் கொஞ்சம் காயம் ஏற்பட்டது. ஆனாலும் பூட்டு உடைய வில்லை. அவன் மீண்டும் அடித்தான்; ஆனாலும் பூட்டு திறக்க வில்லை. அப்போது அவன் மனைவி பரபரப்புடன், ‘‘ஏங்க...பூட்டை உடைக்காதீங்க... இதோ சாவி கிடைச்சிருச்சு’’ என ஓடி வந்தாள். அவன் சாவியை வாங்கிப் பூட்டை திறந்தான். பின்னர் சாவிக்கு அருகில் சுத்தியலை வைத்து விட்டுப் போனான். சுத்தியலுக்கோ ரொம்ப அவமானம். ‘‘மிக வலிமையான நம்மால் திறக்க முடியாத பூட்டையும் சிறிய சாவி திறந்து விட்டதே’’ என வருந்தியது. சாவியிடம் பேச்சு கொடுத்தது. ‘‘நான் உன்னை விட வலிமையானவன்; ஆனால் என்னால் பூட்டைத் திறக்க முடியவில்லை. நீ என்னை விட மிக எளிமையானவன்; ஆனால் எளிதாக பூட்டைத் திறந்து விட்டாயே... காரணம் என்ன?’’ என்றது சுத்தியல். ‘‘நீ என்னைவிட பலசாலிதான். ஆனால் பூட்டை உடைக்க நீ அதன் தலையில் தட்டுகிறாய். அதனால் அதுவும் தன் பலத்தைக் காட்டி உன்னை எதிர்க்கிறது. எனவே திறப்பது கடினமான வேலையாகிறது. நானோ அதன் இதயத்தைத் தொடுகிறேன். பூட்டும் என்னைப் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கிறது. எனவே என் வேலை எளிதாகிறது’’ என்றது. மற்றவர் மனம் என்னும் பூட்டைத் திறக்க அதிகாரம் என்னும் சுத்தியல் கொண்டு அடிக்காமல் அன்பு என்னும் சாவியை நாமும் பயன்படுத்தலாமே!
|
|
|
|