|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » கெட்ட கனவிற்கு நல்ல பலன் |
|
பக்தி கதைகள்
|
|
இருநுாறு கிலோமீட்டர் தள்ளி வசிக்கும் மருத்துவர் நாதன் அந்த பரபரப்பான காலை நேரத்தில் சொல்லாமல் கொள்ளாமல் ஏன் என் முன்னால் வந்து நிற்க வேண்டும்? நாதன் நல்ல மனம் கொண்ட மருத்துவர். தன் சேமிப்பையும் ஓய்வு நேரத்தையும் ஏழைக் குழந்தைகளின் நலனுக்காக அர்ப்பணித்தவர். பதற்றத்துடன் விசாரித்தேன். ‘‘அண்ணா, ஒரு பிரச்னை. அத உடனே தீத்து வைக்கணும்னு நான் பச்சைப்புடவைக்காரிக்கிட்ட வேண்டிக்கல. நீங்களும் வேண்டிக்க வேண்டாம். என்னமோ நான் கஷ்டப்படறதப் பாக்கணும்னு அவளுக்கு ஆசை வந்துருச்சி போல.’’ என்னதான் பிரச்னை? ‘‘பத்து நாளா சரியா ராத்திரி ரெண்டு மணிக்கு ஒரு பயங்கரமான கனவு வருது, உடனே முழிச்சிக்கறேன்.’’ ‘‘என்ன கனவு? ‘‘நான் மதுரை மீனாட்சி கோயில்ல அவ சன்னதில வரிசையில நிக்கறேன். தீபாராதனை காட்டப்போற சமயம். யாரோ என்னை அவசரமாக் கூப்பிடறாங்க. நான் வெளிய ஓடி வரேன். யாருமில்ல. திருப்பி உள்ள போறதுக்குள்ள சன்னதில திரை போட்டுடறாங்கன்னா. முழிப்பு வந்துருது. அப்பறம் துாங்க முடியல. அதனால ஆஸ்பத்திரில முழுமனசா வேலை பாக்கமுடியல. பயமாயிருக்குண்ணா.’’ அரைமணி நேரம் புலம்பி விட்டு கவலை தோய்ந்த முகத்துடன் விடைபெற்றார் நாதன். நல்லதையே நினைத்து நல்லதையே செய்யும் நல்லவருக்கே இந்தக் கதியென்றால் என்போன்ற சுயநலவாதிகளின் நிலைமை. மனம் நடுங்கியபடிதான் அன்று அவள் கோயிலுக்கு நடந்து சென்றேன். செருப்பு போடும் இடத்தின் வாசலில் ஒரு பூக்காரி இடைமறித்தாள். ‘‘பூ வாங்கிட்டுப் போங்க சாமி.’’ ‘‘ஆமா இப்போ அது ஒண்ணுதான் குறைச்சல்.’’ ‘‘உன் நண்பருக்குத் துன்பம் என்றால் என் மீது ஏனப்பா எரிந்து விழுகிறாய்?’’ ‘தாயே!’ என்று அலறியபடி அவள் காலில் விழுந்தேன். ‘‘நல்லவர்கள் துன்பப்பட்டால் உலகம் தாங்காது, தாயே!’’ ‘‘எனக்கே தர்ம நியாயங்களைச் சொல்லித் தருகிறாயா?’’ ‘‘தாயே! நாதன் படவேண்டிய துன்பத்தை நான் படுகிறேன். என்னைப் போல் ஒரு சுயநலக்காரன் துாக்கம் இழப்பதால் யாருக்கும் பிரச்னை இல்லை. மக்கள் பணியில் இருக்கும் அந்த… ‘‘ ‘‘நிறுத்துடா. நல்லவர்களுக்கு நான் துன்பம் கொடுப்பேன் என நீயும் நம்புகிறாயே! கடைசியில் நீயும் ஒரு சராசரி ஆள்தான். உன்னைப் போய்.. ‘‘ அன்னையின் வாயிலிருந்து அடுத்த வார்த்தை வருவதற்குள் மீண்டும் அவள் காலில் விழுந்தேன். ‘‘அங்கே நடக்கும் காட்சியைப் பார்.’’ லாவண்யா ஒரு சின்னத்திரை நடிகை. பேரழகி. வயது 28. குடும்பப்பாங்கான பாத்திரங்களுக்கு ஏற்ற முகம். இயல்பான நடிப்பு. அதனால் அவள் புகழ் நாளுக்கு நாள் பரவத் தொடங்கியது. நல்ல பெயர். நல்ல வருமானம். பெரிய வீடு, நீளமான கார், வங்கியில் லட்சக்கணக்கில் பணம் என்று வசதியாக வாழ்ந்தாள். அவள் பச்சைப்புடவைக்காரியின் தீவிர பக்தை. தினமும் மீனாட்சியின் படத்தின் முன் ஒரு மணி நேரம் கண்ணீருடன் நிற்பாள். இரவு வீட்டுக்கு வந்தவுடன் பச்சைப்புடவைக்காரியிடம் அன்று படப்பிடிப்பில் நடந்ததையெல்லாம் கூறுவாள். ‘பெரிய பெரிய படிப்பு படித்தவர்கள் எல்லாம் ஐயாயிரம், பத்தாயிரம் சம்பளத்தில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தபோது எனக்கு மட்டும் லட்சம் லட்சமாய்க் கொடுக்கிறாயே தாயே’ என்று கண்ணீர் வடிப்பாள். தன் வருமானத்தில் ஆறில் ஒரு பங்கை மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக ஒதுக்கி வைத்தாள். எந்த விளம்பரமும் இல்லாமல் பல தர்ம காரியங்களைச் செய்தாள். பல குடும்பங்களை வாழ வைத்தாள். குணமும் திறமையும் ஒரு இடத்தில் இப்படி சேர்ந்து இருந்தால் லாவண்யா வாழ்வில் பல உச்சங்களைத் தொடுவாளே என்று எண்ணினேன். ஆனால் என் எண்ணத்தில் மண் விழுந்தது. ஒரு நாள் இரவு லாவண்யாவிற்குப் பயங்கர கனவு தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் ஐந்தாறு பேர் சேர்ந்து அவளைப் பலவந்தப்படுத்தினார்கள். திடுக்கிட்டு விழித்தாள். அதன்பின் துாக்கம் வரவில்லை. ஒருவாரம் கழித்து அதே கனவு மீண்டும் வந்த போது லாவண்யா ஆடிப் போனாள். மூன்றாவது முறை கனவு வந்தவுடன் தன் பெற்றோரிடம் சொன்னாள். அவர்கள் யாரிடமோ அழைத்துச் சென்று மந்திரித்தனர். பத்து நாட்கள் கழித்து மீண்டும் அதே கனவு. லாவண்யா நடுங்கினாள். அதன்பின் அவளால் இயல்பாக நடிக்க முடியவில்லை. ஆண் நடிகர்களை அருகில் நெருங்க விட வில்லை. மூன்றே மாதங்களில் அவளை எல்லாத் தொடர்களிலிருந்தும் கழற்றி விட்டனர். அவளுக்குப் பச்சைப்புடவைக்காரி மீது கோபம். அவளை வணங்குவதையே நிறுத்தினாள். ‘‘ஒரு நல்லவளின் வாழ்க்கையோடு இப்படி விளையாடி விட்டீர்களே!’’ ‘‘அவளின் கர்மக்கணக்கு உனக்குத் தெரியுமா? அவளது நட்புவட்டம் பெருகி, அதனால் அவளுடைய மண வாழ்வில் குழப்பம் ஏற்பட்டு முப்பத்தியிரண்டு வயதில் தற்கொலை செய்து சாகவேண்டும் என்பது விதி. அவளின் மனதில் இருந்த அன்பு அந்தக் கணக்கை அடியோடு மாற்றி விட்டது. மிச்சம் இருந்த கர்மத்தை தீய கனவுகள் மூலமாகக் கழித்து விட்டேன். இன்னும் சில மாதங்களில் எல்லாம் சரியாகிவிடும். ஒரு நல்லவனைக் கைப்பிடித்து அமோகமாக வாழ்வாள்.’’ ‘‘இது தெரியாமல் அவள் உங்களை...’’ ‘‘அவள் மனதில் நான் இல்லாவிட்டால் என்ன? என் மனதில் அவள் இருக்கிறாளே! காலாகாலத்தில் அவளை என்னிடம் திரும்பச் செய்துவிடுவேன்.’’ ‘‘நாதன் விஷயம்.. ‘‘ ‘‘ நாதனை நான் பார்த்துக்கொள்கிறேன்.’’ ‘‘அவரிடம் நான் என்ன சொல்லட்டும்?’’ ‘‘ஒன்றும் சொல்லவேண்டாம். இன்னும் ஒரு வாரத்தில் அவரே உன்னிடம் சொல்வார்.’’ அந்த ஒருவாரமும் நாதனுக்காக இரவு உணவைத் தவிர்த்து அன்னையின் கோயிலுக்கு நடந்து சென்றேன். ஏழாம் நாள் கோவிலில் இருந்து திரும்பி வந்தபோது அலைபேசி ஒலித்தது ‘‘அண்ணா’’ அலறியது நாதன். ‘‘பச்சைப்புடவைக்காரி யாருன்னு காமிச்சிட்டாண்ணா. ஒரு உயிரக் காப்பாத்தற சக்திய எனக்கு கொடுக்கணுங்கறதுக்காகத்தான் அந்தக் கனவ வரவழைச்சிருக்கா.’’ ஒன்றும் புரியவில்லை. உணர்ச்சிபூர்வமான குரலில் விளக்கினார் நாதன். ‘‘தாராபுரம் பக்கத்துல ஒரு கிராமத்துல பிரியான்னு ஒரு பொண்ணு இருக்கா. பதினொரு வயசு. நீரிழிவு நோய். என்கிட்ட சிகிச்சை எடுத்துக்கறா. நேத்து ராத்திரி அதே மாதிரிக் கனவு வந்து முழிச்சிக்கிட்டேன். மணியைப் பாத்தேன் ரெண்டு. அடுத்த நொடி என் போன் அடிச்சது. பிரியாவோட அம்மாதான் பேசினாங்க. ‘‘ஐயா திடீர்னு பிரியாவுக்கு உடம்பு நடுங்குது. வலிப்பு வந்தமாதிரி இருக்கு. குழந்தை வெளிறிப் போயிருச்சிங்க. அவர் வாடகைக்கார் பிடிக்கப் போயிருக்காருங்க. அங்க வரதுக்கு எப்படியும் ரெண்டு மணி நேரம் ஆயிருமே. அதுவரைக்கும் தாங்குவாளா?’’ கனவுனால நான் அதீத விழிப்பு நிலையில இருந்தேண்ணா. என்ன நடந்திருக்குன்னு உடனே தெரிஞ்சிபோச்சு. ‘‘முதல்ல அவ வாயில ஒரு ஸ்பூன் சர்க்கரையைப் போடுங்க. அப்புறம் நிறைய சர்க்கரை போட்டு சாத்துக்குடி ஜுஸ் கொடுங்க. இது லோ சுகர்மா. சரியாயிரும். நாளைக்குக் காலையில மெதுவா ஆஸ்பத்திரிக்கு வாங்க. ராத்திரி ரெண்டு மணிக்குப் போன் அடிச்சா சாதாரணமா அத எடுக்க அஞ்சாறு நிமிஷம் ஆகும்ணா. அன்னிக்கும் அதே மாதிரி ஆயிருந்தா ஒரு குழந்தையோட உயிருக்கே ஆபத்து வந்திருக்கும். குழந்தையோட நிலை தெரியாத அந்த ஊர் டாக்டர் வேற சிகிச்சை கொடுத்திருந்தா பெரிய பிரச்னையாகியிருக்கும்ணா. அதெல்லாம் நடக்கக்கூடாதுன்னு தான் பச்சைப்புடவைக்காரி எனக்கு தெனம் தெனம் அப்படி கனவக் கொடுத்திருக்கா. ஒரு குழந்தையோட உயிரக் காப்பாத்த அந்த மாதிரி கெட்ட கனவ வாழ்க்கை பூரா பாக்க நான் தயாராயிருக்கேன்னு அவகிட்ட சொல்லிருங்கண்ணா.’’ என்னைக் கொத்தடிமையாகக் கொண்டவளின் அன்பை நினைத்து அழுவதா நாதனின் நல்ல மனதை நினைத்து அழுவதா என்று மனம் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தது.
|
|
|
|
|