|
யமுனை நதிக்கரைக்கு அருகில் காண்டவ வனம் என்ற பெரிய காடு இருந்தது. மழைக்கு அதிபதியான இந்திரனின் கட்டுப்பாட்டில் இருந்த அப்பகுதியில் அரிய மூலிகைகள் இருந்தன. யமுனா நதியில் ஒருநாள் காலையில் கிருஷ்ணனும், அர்ஜூனனும் நீராடி விட்டு கரையேறிய போது அங்கு அந்தணர் ஒருவர் வந்தார். ‘‘எனக்கு அளவுக்கு அதிகமாகப் பசிக்கிறது. இந்த காட்டில் பசிப்பிணி தீர்க்கும் மூலிகைகள் உள்ளன. இந்த காட்டிற்குள் நான் செல்வதற்கு தங்களின் உதவி தேவைப்படுகிறது. செய்வீர்களா?’’ எனக் கேட்டார். அவரது பேச்சும், தொனியும் வித்தியாசமாக இருக்கவே உற்று நோக்கிய கிருஷ்ணர், ‘‘ அக்னிதேவா...ஏன் இந்த அந்தணர் வேடத்தில் வந்திருக்கிறாய்?’’ எனக் கேட்டார். சுயவடிவத்திற்கு மாறிய அக்னி, ‘‘சுவாமி...தாங்கள் அறியாத விஷயம் மூவுலகிலும் ஏதுமில்லை. மன்னர் சுவேதசிக்காக பன்னிரண்டு ஆண்டுகள் துர்வாச முனிவர் யாகம் நடத்தினார். அதில் அர்ப்பணிக்கப்பட்ட அதிகப்படியான நெய்யை உண்டதால் என் உடல்நலமின்றி அவதிப்படுகிறேன். இதிலிருந்து குணம் பெற மூலிகையைத் தேடி காண்டவ வனத்திற்கு வந்தேன். ஆனால் நான் வரும் போதெல்லாம் இந்திரன் பெருமழை பொழியச் செய்கிறான். அதனால் காட்டிற்குள் நுழையவே முடியவில்லை. ஆதரவின்றி நோயால் வாடும் உதவி புரிய வேண்டும்’’ என வருந்தினான். ‘‘நீராட வந்த எங்களிடம் ஆயுதம் ஏதுமில்லையப்பா.... வில், அம்புகள், தேர் எல்லாம் வேண்டுமே’’ என்றார் கிருஷ்ணர். அக்னிதேவன் நொடிப்பொழுதில் அவற்றை வரவழைத்தான். ‘‘அக்னிதேவா...உனக்கு ஒரு நிபந்தனை. அளவுக்கும் அதிகமாக மூலிகைகளை சாப்பிட்டால் அது விஷமாக மாறிவிடும். 21 நாட்கள் மட்டும் தான் இந்த காட்டிற்குள் தங்கியிருக்க வேண்டும். இந்திரனால் உனக்கு தீங்கேதும் நேராமல் பார்ப்பது எங்கள் பொறுப்பு’’ என்றார். அக்னியும் சம்மதித்து காட்டிற்குள் நுழைந்தான். விஷயம் அறிந்த இந்திரன் உடனடியாக காளமேகத்தை அழைத்து மழை பொழிய உத்தரவிட்டான். காளமேகம் வருவதைக் கண்ட கிருஷ்ணர் அம்புகளால் சரக்கூடு கட்டி மேகத்தை வனத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கும்படி அர்ஜூனனுக்கு ஆணையிட்டார். இதற்கிடையில் அக்னியும் காட்டையே எரித்து தனக்கு தேவையான அளவு மூலிகைகளைச் சாப்பிட்டு பூரண உடல்நலம் பெற்றான். இறுதியாக கிருஷ்ணருக்கும், அர்ஜூனனுக்கு நன்றி சொல்லி விட்டு விடை பெற்றான். அக்னிதேவன் காண்டவ வனத்தை எரித்த இந்த நாட்களே ஆண்டுதோறும் சித்திரை, வைகாசி மாதங்களில் அக்னி நட்சத்திர நாட்கள் என அழைக்கப்படுகின்றன. .
|
|
|
|