|
திருப்பூர் கிருஷ்ணன்
அது ஒரு சிறிய கிராமம். அங்கு ஒருமுறை விஜயம் செய்தார் காஞ்சி மகாபெரியவர். அந்த கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமண்ய தீட்சிதர் மகாபெரியவரைத் தரிசிக்க வந்தார். பல தலைமுறையாக வைதீக முறையில் யாகம் நடத்தும் குடும்பம் அவருடையது. அனந்த ராமன் என்னும் சிறுவனைத் தன்னுடன் அழைத்து வந்திருந்தார். சிறுவனின் துறுதுறுப்பும், ஆன்மிக நாட்டமும் மகாபெரியவரைக் கவர்ந்தது, ‘பிரஸன்ன ராகவம்’ என்னும் ராமாயண புத்தகத்தை பரிசளித்தார். ‘‘குழந்தே...தினமும் இதைப் படி. சுவாரஸ்யமாக இருக்கும். இந்த ஒரு புத்தகத்தைப் படிச்சாலே போதும். எல்லா தர்மங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். அண்ணன் – தம்பி பாசம், அப்பா– பிள்ளை பாசம், தாய் – மகன் பாசம், கணவன் – மனைவி நேசம், நட்பின் மகத்துவம் என்று இதில் இல்லாததே இல்லை. உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த தர்மத்தை எடுத்துச் சொல்லு. ராமாயணக் கதையை எடுத்துச் சொல்வது பெரும் புண்ணியம்’’ என்று விளக்கம் அளித்தார் மகாபெரியவர். இதைக் கேட்டு மகிழ்ந்த தீட்சிதர் அடிக்கடி மகாபெரியவரின் வழிகாட்டுதலைப் பின்பற்றும்படி சிறுவனை வற்புறுத்தினார். சிறுவனும் தினமும் படித்ததோடு, வால்மீகி, கம்பர், துளசிதாசர் ராமாயணங்களை ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டார். வால்மீகி ராமாயண ஸ்லோகங்களை மனப்பாடம் செய்தார். இளைஞரான பின் ராமாயணச் சொற்பொழிவு நிகழ்த்த தொடங்கினார். ஸ்லோகங்களை மேற்கோள் காட்டியும், மெல்லிய நகைச்சுவை கலந்தும் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகளைக் கேட்க மக்கள் கூடினர். அவ்வப்போது காஞ்சி மகாபெரியவரின் உபதேசங்களை மக்களுக்கு எடுத்துரைத்தார். ‘‘காஞ்சி மகாபெரியவர் கருணையுடன் ராமாயணத்தைக் கொடுத்து ஆசி வழங்கியதால் தான் சொற்பொழிவுத் துறையில் ஈடுபட்டு என்னால் பெயர் வாங்க முடிந்தது. பிரஸன்ன ராகவம் என்பது ஒரு புத்தகம் அல்ல. வாழ்வு தந்த பொக்கிஷம்’’ என நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவார். மகாபெரியவர் விஜயம் செய்த அந்தக் கிராமத்தின் பெயர் ‘சேங்காலிபுரம்’. ராமாயணச் சொற்பொழிவாளராக புகழ் பெற்ற சிறுவன் தான் காலம் சென்ற ‘சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர்’.
|
|
|
|