|
படகு ஒன்று கடலில் சென்று கொண்டிருந்தது. திடீரென காற்று வேகமாக அடித்ததால் படகு திசைமாற ஆரம்பித்தது. அதில் சென்று கொண்டிருந்த சபாபதியும், லாவண்யாவும் திகைத்த நேரத்தில் படகு இரண்டாக உடைந்தது. இருவரும் கடலுக்குள் குதித்தனர். நீச்சலடித்து அருகிலுள்ள தீவில் கரை ஒதுங்கினர். அந்தத்தீவு மனிதன் கால் பதித்திடாத பூமியாக இருந்தது. ‘‘ கடவுள் இப்படி நம்மை சோதிக்கிறாரே...’’ என லாவண்யா ஆதங்கப்பட்டாள். அங்கு கிடைத்த மரக்கட்டைகள், ஓலைகளைக் கொண்டு சிறுகுடிசை ஒன்றை அமைத்தனர். தீவில் கிடைத்த பழங்களைச் சாப்பிட்டு பசியைப் போக்கினர். ஆனால் கடவுளிடம் வேண்டுவதை விடவேஇல்லை. இப்படி நாட்கள் பல கடந்தன. தங்களுக்கு உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையை மட்டும் அவர்கள் இழக்கவில்லை. ஆனால் ஒருநாள் கடும்வெயில் அடிக்கவே, காற்றில் ஓலைகள் ஒன்றோடொன்று உரசி குடிசையில் தீப்பற்றியது. “கடவுளே… எங்களுக்கு நல்வழி காட்டுவாய் என நம்பியிருந்தோம். ஆனால் இப்படி உள்ளதையும் பிடுங்கி விட்டாயே... ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நாங்கள் இருக்க முடியும்... புதுமணத் தம்பதியான எங்களை இப்படி வஞ்சிப்பது நியாயமா” என அழுதாள் லாவண்யா. நெருப்பு அணைந்து வானை நோக்கி புகைய ஆரம்பித்தது. அப்போது அந்த தீவை நோக்கி கப்பல் ஒன்று வரும் சத்தம் கேட்டது. “அப்பாடா… நல்ல வேளை… ஒருவழியாக இங்கிருந்து தப்பித்தோம். நம்மை காப்பாற்ற கடவுள் அனுப்பியவர்கள் இவர்கள் தான்’’ என்று உற்சாகத்தில் இருவரும் துள்ளி குதித்தனர். கப்பல் அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்ததும், மாலுமி இருவரையும் கப்பலில் ஏற்றிக் கொண்டார். தீவை விட்டு நகர்ந்தும் நிம்மதி பெருமூச்சு விட்டாள் லாவண்யா. ‘‘நாங்கள் இப்படி தீவில் சிக்கியிருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது’’ எனக் கேட்டான் சபாபதி. “ஆளில்லாத தீவில் புகை வருவதைக் கண்டோம். உதவி கேட்டு யாரோ தீவில் கரை ஒதுங்கியவர்கள் காப்பாற்றும்படி சமிக்ஞை கொடுப்பதாகக் கருதியே கரை ஒதுங்கினோம். புகை வராவிட்டால் நாங்கள் இங்கு வந்திருக்க வாய்ப்பில்லை” என்றனர். அப்போது தான் அவர்களுக்கு குடிசை எரிந்ததன் காரணம் புரிந்தது. ‘‘வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் நம் அவசர புத்தியால் கடவுள் மீது தப்புக்கணக்கு போட்டு விடுறோம். அவர் தரும் சோதனையும் கூட நம் நன்மைக்காகத் தான் என்பதை உணர்ந்து விட்டேன்’’ என்றாள் லாவண்யா. பிரச்னைகள் எல்லாம் தற்காலிகமானதே. கடவுள் அருளால் தீர்வு கிடைக்கும் என நம்புவோம்.
|
|
|
|