|
வீரமகேந்திரபுரியில் சிறைப்பட்டிருந்த ஜயந்தனுக்கும், தேவர்களுக்கும் ‘நல்ல காலம் விரைவில் வரும்’ என்னும் நம்பிக்கையை உறுதிபடுத்தியபின் சூரபத்மனின் அரண்மனையை நோக்கிப் புறப்பாட்டார் வீரவாகு. நகரின் ராஜவீதிகளையும், மாட மாளிகைகளையும், அரண்மனையின் எடுப்பான தோற்றத்தையும் கண்டு வியப்பின் விளிம்புக்கே சென்றுவிட்ட வீரவாகு சிவபெருமானின் பேரருள் பெற்றுவிட்டால் ஒருவன் அடைய முடியாதது எதுவுமே இல்லை போலும் என்று எண்ணி ஆனந்தமும், ஆச்சர்யமும் அடைந்தார். சூரபத்மனின் அவைக்குள் தன் சுய உருவத்தோடு சென்றார். கனகமணி அரியணையில் கம்பீர தோற்றத்துடன் சூரபத்மன் அமர்ந்திருக்க, சுற்றிலும் தேவமாதர்கள் ஆலவட்டமும், சாமரமும் வீச, சந்திரனும் சூரியனும் குடைதாங்க, அரம்பையர்கள் ஆடல் புரிய, வித்தியாதரரும், கின்னரரும் வீணைமீட்ட, புலவர்கள் புகழந்து பாட ராஜசபை கம்பீர தோற்றத்தில் இருந்தது. வீரவாகு எண்ணினார்: ‘‘பரம சிவனாரின் பரிபூரணக் கருணைக்கு பாத்திரமான சூரபத்மனுக்கு அதைப் பாதுகாத்து நிரந்தரமாக அனுபவிக்கத் தெரியாமல் போய்விட்டதே! தேவர்களைச் சிறைப்படுத்தி சேவகம் புரியவைத்த கொடுஞ்செயலால் செல்வங்கள் அனைத்தையும் தொலைத்து விடப்போகிறானே! அழகிய கலைநயம் மிக்க அற்புதமான கூட்டைத் துாக்கணாங்குருவிகள் கட்டும். அக்கூட்டில் வெளிச்சம் பரவ மின்மினி பூச்சிகளைப் பிடித்து வந்து வைக்கும். ஆனால் அறிவில் குறைந்த சில குருவிகள் கொள்ளிக் கட்டைகளை மின்மினிகள் என எண்ணி கூட்டிற்குள் வைத்து அடியோடு அழிந்து போவது போல் அல்லவா ஆகிவிட்டது இந்த அசுரனின் செய்கை. மெய்ச் சோதிதங்கு சிறு கொள்ளி தன்னை விரகின்மை கொண்ட குருகார் கச்சோதம் என்று கருதிக் குடம்பை தனில் உய்த்து மாண்ட கதைபோல் அச்சோ எனப் பல் இமையோரை ஈண்டு சிறை வைத்த பாவம் அதனால் இச் சூரபத்மன் முடிவு எய்தும் நாளை இதனுக்கோர் ஐயம் இலையே!
‘ரத்தின அரியணையில் மெத்தனமாகக் கால் மேல் கால் போட்டு ஏற்றம்மிக்க தோற்றத்துடன் சூரபத்மன் அமர்ந்திருக்க, ஆறுமக நாதன் அனுப்பிய துாதன் நான் அட்டகாசமாக இவ் அவைக்குள் புகுந்தால் தானே அழகு! சாதாரண முறையில் சூரன் அவைக்குள் செல்வது சண்முகப்பெருமானுக்கு அல்லவா குறைவை ஏற்படுத்தும்’ என்று வீரவாகு ஒருகணம் நினைத்தார்.
வேண்டியபோது அடியார் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவும் பெருமாளே! அடியவர் இச்சையில் எவைஎவை உற்றன அவை தருவித்து அருள் பெருமாளே!
கருத்தறிந்து முடிப்பவன் அல்லவா கந்தப்பெருமான். ஆயிரம் கோடி சூரியர்களின் பிரகாசத்தை அள்ளி வழங்கும் அரியனை ஒன்று சூரனின் இருக்கைக்கு எதிராகத் தோன்றியது. கந்தன் அருளை வியந்து அதன் மீது அமர்ந்து கொண்டார் வீரவாகு! சற்றே அதிர்ச்சியுற்ற சூரபத்மன் சமாளித்துக் கொண்டு என் எதிரே அமர உனக்கு எத்தனை துணிச்சல்! எப்படி நீ உள்ளே வந்தாய்! யார் நீ! இருக்கை ஒன்றை வரவழைத்து அதன் மீது நீ உட்கார்ந்ததைப் பார்த்து நான் அச்சப்படுவேன், ஆச்சர்யப்படுவேன் என்று நினைத்தாயா! இரு கை கொட்டி நகைக்கின்றேன்! ஏனென்றால் அசுர மகளிரின் கருப்பைக்குள் வளரும் குறை மாதக் குழந்தைகள் கூட இந்த சித்து விளையாட்டைச் சிறப்பாகச் செய்யும். சினம் பொங்கச் சீறினான் சூரபத்மன். சூரனே! ஆத்திரத்தில் அறிவிழக்காது நான் கூறுவதை அமைதியாகக் கேள்! உனக்கு வரம் வழங்கிய சிவனாரே பன்னிரு கரங்கள் கொண்ட பாலமுருகனாக அவதரித்து திருச்செந்துார் படைவீட்டில் தங்கி உள்ளார். உன் தம்பி தாரகனையும், கிரவுஞ்ச மலையையும் தகர்த்த மேல் ஆயுதம் இல்லாத வேலாயுதம் அவர் கையில் மிளிர்கின்றது. அவர் நினைத்தால் வினாடி நேரத்தில் உன்னை வீழ்த்தலாம்! தேவர்களையும், ஜயந்தனையும் சிறை வைத்ததற்கு வருந்துகிறாயா! விடுதலை அறிவித்து திருந்துகிறாயா! சண்முகனின் சரணார விந்தத்தில் பொருந்துகிறாயா! என்று அறிந்து வரத்தான் என்னை அனுப்பி உள்ளார். உன் மகுடத்தை மண்ணில் சாய்ப்பதற்கு நானே போதும். ஆனால் துாதுவனாகத் தொழில் புரியும் நான் உன்னோடு மோதுவது முறையற்றது என்று அறிவேன்! என் தலைவன் முருகப்பெருமானை எளிதாக எடைபோட்டு விடாதே! திருமாலும் நான்முகனும் பல காலம் தேடியும் காண இயலாத சிவபெருமானின் நெற்றிக் கண்ணலிருந்து தீப்பொறியாய்ப் புறப்பட்டு அவதாரம் செய்தவர் அவர். முக்கண் மூர்த்தியும், திருமாலும், நான்முகனும், முனிவர்களும், தேவர்களும் அவரே!
மண் அளந்திடும் மாயனும், வனச மேலவனும் எண்ணரும் பகல் தேடியும் காண்கிலாது இருந்த பண்ணவன் நுதல் விழியிடைப் பரஞ்சுடர் உருவாய் உண்ணிறைந்த பேரருளினால் மதலையாய் உதித்தான்! முக்கண் மூர்த்தியும் ஆங்கு அவன்; முண்டக ஆசனனும் சக்கரப் படை அண்ணலும் ஆங்கு அவன் தானே. திக்குப் பாலரும் கதிர்களும் முனிவரும் சிறப்பின் மிக்க தேவரும் ஆங்கு அவன்; யாவர்க்கும் மேலோன்
வீரவாகுவின் உரையைக் கேட்டு கோபமுற்று சூரபத்மன் கொதித்தான். ‘நீ யார் முன்னே பேசுகின்றாய் என்று அறிவாயா? தரணி முழுமைக்கும் தனி அரசனாக, ஆயிரத்தெட்டு அண்டங்களுக்கும் அதிபதியாக நான் விளங்குகின்றேன்! நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த அருகம்புல்லா ஆலமரத்தை அடிபெயர்க்க முடியும். பல்முளைக்காத பாலகனா என்னை எதிர்கொள்ளத் தகுந்தவன்.
மேலை ஆயிரத்து எட்டெனும் அண்டமும் வென்றே ஏலுகின்றதோர் தனி இறை ஆகிய எனக்கு கோலவால் எயிறு இன்னமும் தோன்றிலாக் குதலைப் பாலகன் கொலாம் இனையன புந்திகள் பகர்வான்
நீ எத்தனை சொன்னாலும் தேவர்களை விடுவிக்க மாட்டேன். காசினி முழுவதையும் கடல் கொண்டாலும் இக்காரியத்தில் நான் உறுதியாய் இருப்பேன். கர்ஜித்த சூரன்தன் வீரர்களைப் பார்த்து ‘இவனையும் பிடித்து இருட்சிறையில் தள்ளுங்கள்’ என்று கட்டளை இட்டான். இரும்பு சங்கிலியால் வீரவாகுவைக் கட்ட வந்தனர் அசுரர்கள். பிடிக்க வந்த வீரர்களுடன் பெரும்போர் மூண்டது. சதமுகன், யாளிமுகன், சகத்திர வாகுகள் காவலாளர்கள் என எதிர்த்தவர்கள் அனைவரையும் வெற்றி கண்டார் வீரவாகு. பத்துத் தலைகளும், இருபது தோள்களும் உடைய சூரபத்மனின் இளைய மகன் வச்சிரவாகு ‘முருக துாதனை முற்றிலும் அழிப்பேன்’ என முழக்கம் செய்தபடி மோதினான். வச்சிரவாகுவும், வீரவாகுவும் ஒருவருக்கு ஒருவர் சற்றும் சளைக்காமல் சமரில் ஈடுபட்டனர். சூரன் மகனை வீரவாகு என்னவெல்லாம் செய்தார் என்பதைக் கந்தபுராணச் செய்யுளே நம் கண்முன் காட்டுகிறது.
மிதித்தனன்! கொதித்தனன்! விடுத்தனன்! படுத்தனன்! சதைத்தனன்! புதைத்தனன்! தகர்த்தனன்! துகைத்தனன்! உதைத்தனன்! குதித்தனன்! உருட்டினன்! புரட்டினன்! சிதைத்தனன்! செருத்தனன்! செருக்கினன்! தருக்கினன்!
பகைவர்களையும், பல வெள்ளம் வீரர்களையும் வீழ்த்திய பிறகு வீரவாகு திருச்செந்துாரை நோக்கிப் பறந்தார். சண்முகப் பெருமானின் பாதமலர்களைப் பணிந்தார். ‘ஐயனே! தாங்கள் கூறிய அறநெறியை அறவே புறக்கணித்து விட்டான் அசுரன். பாறாங்கல்லை பஞ்சாக்க முடியுமா? அதர்மமே அவனின் அணுகுமுறையாக உள்ளது. துாதுவனின் வார்த்தைகளைக் கேட்டபின் முருகப்பெருமான் வீரமுழக்கம் செய்தார். ‘வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அரக்கர் குலத்தை அடியோடு வீழ்த்த நாளையே நாம் போர் செய்ய புறப்படுவோம்! அனைவரும் ‘வெற்றிவேல்! வீரவேல்’ என்று வாழ்த்தொலி எழுப்பினர். போர் அணியாகப் பேரணி புறப்பட்டது.
|
|
|
|