Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அசுர வேந்தனும் ஆறுமுகனும்
 
பக்தி கதைகள்
அசுர வேந்தனும் ஆறுமுகனும்

முதல்நாள் போரில் பூதப்படைகளும், அசுர சேனைகளும் ஆக்ரோஷத்துடன் ஒன்றை ஒன்று எதிர்த்தன.
வேலவர் தம்பி வீரவாகுவிற்கும் சூரன்மகன் பானுகோபனுக்கும் இடையே பெரும்போர் நடந்தது.
சமானமான வீரர்கள் இருவர் சமர்க்களத்தில் சண்டையிட்டுக் கொண்டதால் இருபக்கத்திலும் அம்புகளும், ஆயுதங்களும் ஆயிரக்கணக்கில் ஏவப்பட்டன. ரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்தது. சடலங்கள் மலைபோல் குவிந்தன.
‘ஆற்றல் வாய்ந்த அஸ்திரங்களை விடுத்தும் வீரவாகுவை வீழ்த்த முடியவில்லையே’ என்று எண்ணிய பானுகோபன் வேறுவழியின்றி மாயமாகி யுத்தகளத்தினின்று மறைந்தான்.
வீரமகேந்திரபுரம் சென்ற பானுகோபன் தந்தையிடம் தலைக்காட்டாமல் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு மண்டபத்தில் தஞ்சம் அடைந்தான்.
போரில் புறமுதுகு காட்டி மகன் மீண்டதை அறிந்த சூரன் சேவகர்களை அழைத்தான்.
‘என்ன இருந்தாலும் பானுகோபன் இளையவன் தானே. நாளை இரண்டாம் நாள் போருக்கு அசுர வேந்தனே வருகிறார் என்று அறிவிப்பு செய்யுங்கள்.
தேவர்களின் கொட்டம் நாளையோடு தீரப்போகிறது என்று விண்ணதிர முழங்கினான் சூரபத்மன்.
காலை புலர்ந்தது.
சூரபத்மனின் லட்சம் வெள்ளத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் படைகளைத் திரட்டி வந்து தயாராக இருந்தார்கள்.
சிகரம் ஒன்றின் மேலேறி சூரபத்மன் பார்வையை நான்கு புறமும் சுழற்றி, விரிந்து விளங்கிய தன் படை பலத்தையும், வீரர்களையும் கண்டு விம்மிதம் உற்றான்.
‘ஆகாயமும், கடலும் தோற்கும் வண்ணம் அகன்று பரந்திருக்கும் என் படைகள் முன்பும், என் வஜ்ஜிர தேகத்தை மூடிய வலிமையான கவசங்கள் முன்பும் பாலமுருகனின் வேலாயுதம் என்ன செய்யும்’ என்று எண்ணிய சூரபத்மன் அம்பறாத் துாணியை முதுகில் கட்டிக் கொண்டான். சிரத்தில் வைர மகுடத்தை எடுத்து சூட்டிக் கொண்டான். தும்பைப் பூ மாலையை அணிந்து கொண்டு தேர் மீது ஏறி அமர்ந்தான்.
அரண்மனை வாயிலைத் தேர் கடக்கும் போது சிங்கமுகாசுரனின் மகன் ஆதிசூரனும், தாராகாசுரனின் மகன் அசுரேந்திரனும் போர்க்கோலம் பூண்டபடி வந்து பெரியப்பாவை வணங்கினர்.
‘நீங்கள் இருவரும் தலைமை ஏற்று படைகளைக் களத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்’ முன்நடையாக இருவரும் செல்ல அவர்களைத் தொடர்ந்து அசுரர்களின் வாழ்த்தொலி முழங்க இரண்டாம் நாள் போரில் களம் கண்டான் சூரபத்மன்.
அசுர வேந்தனே நேரிடையாக வருவதை அறிந்த இந்திரன் ஓடிச்சென்று திருமுருகனின் பாத கமலங்களிலே விழுந்தான்.
அஞ்சாதே இந்திரா. வாயு தேவனை உடனே அழைத்துவா. சாரதியாய் அவன் தேர் ஓட்ட சமர்க்களம் செல்கிறேன்.
நவ வீரர்களும் அணிவகுக்க முருகப்பெருமான் போர்க்கோலத்துடன் சேனைகளுக்கு இடையே சென்றார். அண்டங்கள் எல்லாம் அதிர இருபடைகளும் மோதின. ஒன்பது வீரர்களின் ஒப்பற்ற வலிமைக்கு ஈடுகட்ட இயலாமல் சூரனின் தம்பி மகன்கள் இருவரும் தலை இழந்து தரையில் சாய்ந்தனர். சகோதரர்களின் மைந்தர்கள் சாய்ந்தார்களே என வருந்தி புயல் தோற்கும் வேகத்துடன் 13 வீரர்கள் மீது பாய்ந்தான் சூரபத்மன். அரக்க வேந்தனின் அளப்பரிய ஆற்றலால் கதி கலங்கி வீரவாகு உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் மயக்கமுற்று கீழே சாய்ந்தனர். உயிருக்குப் போராடினர்.
‘வீழ்ந்தது துாதன் வீரவாகு அணி’ என எக்காளமிட்டபடி கரங்கள் கொட்டிச் சிரித்தான் சூரபத்மன். அடுத்த நொடியே இறுமாந்திருந்த சூரன் அருகே தேரைக் கொண்டு நிறுத்தினான் வாயுதேவன்.
அதுவரை முருகனைப் பற்றிப் பிறர் சொல்லி மட்டுமே அறிந்திருந்த சூரபத்மன் முதன் முறையாகக் கண்ணெதிரில் தேர்மீது கந்தபெருமானைக் காணும் பேறு பெற்றான்.
பகைமை தலை விரித்தாடும் யுத்த பூமியில் கருணை வழியும் முகத்துடன் காட்சி தந்தார் கந்தபெருமான்.
வடிவேலன் வரலாற்றைப் பாடும் கச்சியப்பர் ‘பன்னிரு கண் வேலவனை தன்னிரு கண்ணால் பார்க்கும் பாக்கியம் பகைவனுக்கும் கிட்டியதே!’ என்று உணர்ச்சி பொங்க இவ்விடத்தில் அற்புதமாகப் பாடுகின்றார்.

முண்டகம் மலர்ந்த தன்ன மூவிரு முகமும் கண்ணும்
குண்டல நிறையும் செம்பொன் மவுலியும் கோல மார்பும்
எண்டரு கரம் ஈராறும் இலங்கெழிற் படைகள் யாவும்
தண்டையும் சிலம்பும் ஆர்க்கும் சரணமும் தெரியக் கண்டான்!

பூவுல கண்டமெல்லாம் புரந்திடும் சூரன் தன்னைத்
தீ வினையாளன் என்றே செப்புவர்; சிறப்பின்மிக்க
மூவிரு முகத்து வள்ளல் முன்னர் வந்தெய்தப் பெற்றான்
ஆ! இவன் தவத்திற்கன்றி அறத்திற்கும் முதல்வன் அன்றோ!

நேருக்கு நேர் முருகனைக் கண்டும் நல்லறிவு தலைப்படாத சூரபத்மன் ஆணவத்துடனேயே பேசினான்.
‘சிறுவனாகிய நீ என்ன தைரியத்தில் என்னுடன் மோத வந்துள்ளாய்.. உன் சேனைகள் அனைத்தும் அழிந்ததைப் பார்த்தும் வரபலம் மிக்க என்னை உன்னால் வெற்றி கொள்ள முடியுமா.. சிவபெருமானும், திருமாலும், நான்முகனும் என்னுடன் போர் புரியாத நிலையில் இப்போது அவதரித்த சிறுவனா என்னை அழிக்க முடியும்?’
மெல்ல நகைத்தார் முருகப் பெருமான்.
‘அண்டங்களை ஆள்பவன். ஆற்றல் உடையவன். அளப்பரும் படைகள் கொண்டவன் என்றெல்லாம் ஆணவமாகப் பேசாதே. உன் நுாற்றெட்டு யுக வாழ்வையும், ஆயிரத்தெட்டு அண்ட அரசையும் நிர்மூலமாக்க வந்த நெருப்புப் பொறி நான் என்பதை நினைவில் கொள். இக்கணமே பாய்ந்து வரும் என் பாணங்களுக்கும், அழிக்க வரும் ஆற்றல் வாய்ந்த ஆயுதங்களுக்கும் பதில் சொல்!’
முருகருக்கும், சூரனுக்கும் இடையே பெரும் போர் மூண்டது. சக்ராயுதமும், சூலாயுதமும் எதிரெதிர் திசையில் மோதின. குவியும் உடல்கள் குருதி ஆற்றில் மிதந்தன. சூரபத்மன் தன் படைக்கலங்கள் அனைத்தையும் இழந்தான். மார்பில் அணிந்திருந்த கவசங்களும், தலையில் புனைந்திந்த மகுடமும் மண்ணில் வீழ்ந்தன. தும்பைப் பூமாலை துாசியில் விழுந்தது. அப்போது முருகப்பெருமான் கூறினார்.
எல்லாவற்றையும் இழந்து எதிரில் நிற்கும் உன்னை இப்போது அழிப்பது எனக்கு எளிதான செயல்தான். ஆனால் அதைச் செய்ய எனக்கு மனம் இல்லை. உன் தம்பி தாரகனையும், மாயம் செய்த கிரவுஞ்ச மலையையும் தரையில் வீழ்த்திய தன்னிகரற்ற வேலாயுதம் என் கரத்தில் பொருந்தி இருப்பதைக் கண்டுமா உனக்கு புத்தி வரவில்லை. வேற்படையால் உன்னை இப்போதே வீழ்த்தி விடலாம்.

நெடிய தாரகற் செற்றவேல் இருந்தது; நின்னை
அடுதல் இங்கொரு பொருளும் அன்று! அரிது மற்றன்றால்
படை இழந்திடு நின் உயிர் உண்டிடின் பழியாய்
முடியும் என்று தாழ்கின்றனம், தருமத்தின் முறையால்

தக்க ஆயுதங்கள் இன்றி தலைகவிழ்ந்து நிற்கும் ஒருவரை போரில் அழிப்பது தருமத்திற்கு உகந்த செயல் அன்று. இப்போதும் வாய்ப்பு தருகிறேன். சிந்தித்துப் பார்த்து செயல் புரி. தேவர்களை விடுவித்தால் உன்னைக் கொல்லாமல் விட்டுவிடுகிறேன்.
முருகப்பெருமானைக் ‘கருணையே ஒரு வடிவமாகி வந்தவர்’ என்றுதான் சாத்திரங்களும், காவியங்களும் புகழ்கின்றன. திருப்போரூர் சந்நிதி முறையில் சிதம்பர சுவாமிகள் சிறப்பாகப் பாடுகின்றார்.

ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கி
தீது புரியாத தெய்வமே! நீதி
தழைக்கின்ற போரூர் தனிமுதலே! நாயேன்
பிழைக்கின்றவாறு நீ பேசு

‘விநாச காலே விபரீத புத்தி’ என்பார்கள். அறிவுரை எதுவும் அசுர வேந்தன் காதில் ஏறவில்லை. அவன் மனத்திற்குள் எண்ணினான். இப்போது முருகன் என்னைக் கொல்லவும் முடியாது. ஆயுதங்கள் இல்லாதபோது இவனை நான் வெல்லவும் முடியாது. ‘மன்னிப்பு’ என்று ஒருபோதும் நான் சொல்லவும் முடியாது. மாயமாகப் போர்க்களத்தினின்று மறைந்து விடுவோம். தக்க ஆயுதங்களோடு மீண்டும் வந்து எதிரிகளை அழிப்போம்.
தோல்வி அடைந்த சூரபத்மன் மகேந்திரபுரிக்கு வந்தான். அங்குள்ள அந்தப்புரத்தை அடைந்தும் மனைவி பதும கோமளையைப் பார்க்க மனமின்றி வேதனையில் துடித்தான்.
தந்தைக்கு நேர்ந்த தோல்வியை அறிந்த மகன் பானுகோபன்
‘அவசரப்பட்டு நீங்கள் ஏன் யுத்தகளம் சென்றீர்கள். நான் இருக்கிறேன். என் தம்பியர் அக்கினிமுகன், இரணியன் இருக்கிறார்கள். நாளையே யுத்தகளம் சென்று மொத்த வெற்றியையும் உங்கள் காலடியில் காணிக்கை ஆக்குகிறோம். தந்தையே!’
பானுகோபன் மொழிகளால் ஆறுதலும், அமைதியும் அடைந்தான் சூரபத்மன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar