|
பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் சூதாட்டத்தில் நாட்டை இழந்தார். சகுனியின் சூழ்ச்சியால் சாத்தியமானதை தனக்கு சாதகமாக்கத் துணிந்தான் துரியோதனன். தங்களுக்கு அடிமையான தர்மர், பன்னிரண்டு ஆண்டு வனவாசமும், அதன் பின் ஓராண்டு அஞ்ஞாத வாசமும் (யார் கண்ணிலும் படாமல் மறைந்து வாழ்தல்) செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தான். இதை கடைபிடித்தால் இழந்த நாட்டை மீண்டும் அளித்து விடுவதாக உறுதியளித்தான். வனவாச காலத்தில் பாண்டவர் உயிர் இழந்து விடுவார்கள் என்றும், பின் நாடு சொந்தமாகி விடும் எனவும் எண்ணினான் துரியோதனன். தர்மர் நிபந்தனைக்கு கட்டுப்பட்டு தம்பிகளான பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன், மனைவியான திரவுபதியுடன் காட்டிற்குப் புறப்பட்டார். அவர்களுடன் அந்தணர்கள், அவர்களின் மனைவியர், முனிவர்களும் பின் தொடர்ந்தனர். தன் மீது கொண்ட அன்பினால் அவர்கள் பின் தொடர்ந்தாலும், கங்கைக் கரையை அடைந்ததும் நாடு திரும்பி விடுவர் என தர்மர் கருதினார். கங்கைக்கரையில் ஒரு ஆலமரத்தடியை அடைந்தனர். இரவு நேரமாகி விட்டதால், அங்கே தங்கினர். தண்ணீர் மட்டும் குடித்து விட்டு இரவைக் கழித்தனர். மறுநாள் பொழுது புலர்ந்தது. கண் விழித்த தர்மர், தங்களுடன் சேர்ந்து உண்ணாமல் இருக்கும் அந்தணர்களைக் கண்டு வருந்தினார். ‘‘வேததத்தில் சிறந்த உத்தமர்களே! உங்களின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன். நாங்கள் காட்டில் கிடைக்கும் காய், கனிகளை மட்டும் உணவாக ஏற்று வாழப் போகிறோம். அங்கு விலங்கு நடமாட்டம் இருக்கும். அரக்கர்களின் அச்சுறுத்தலையும் சந்திக்க நேரிடும். அதனால் இங்கிருந்து நாட்டிற்கு கிளம்புங்கள்’’ என வேண்டினார். ‘‘தர்ம புத்திரரே! எங்களால் சிரமம் உண்டாகாது. உணவுக்காக காய், கனிகளை நாங்களே தேடிக் கொண்டு உங்களுக்கு பக்கபலமாக ஜபம், வழிபாட்டில் ஈடுபடுவோம். மற்ற நேரத்தில் நல்ல விஷயங்களை சொல்லி பொழுதை பயனுள்ளதாக்குவோம்’’ என்றனர் அந்தணர்கள். அந்தணர்களுக்கு உணவிட முடியாத பாவியாக இருக்கிறேனே என்று எண்ணி தர்மர் வருந்தினார். அவரது எண்ணத்தை அறிந்து கொண்ட தவுமியர் என்னும் முனிவர், ‘‘தர்மபுத்திரரே! வருந்த வேண்டாம். சூரிய பகவானுக்கு உரிய ஆதித்ய மந்திரத்தை உபதேசிக்கிறேன். கழுத்தளவு நீரில் நின்றபடி ஜபித்தால் அவரின் அருள் கிடைக்கும். உன் கவலை தீரும்’’ என்றார். தர்மரும் மகிழ்ச்சியுடன் முனிவர் சொல்லித்தந்த சூரிய மந்திரத்தை ஜபித்தார். மனம் குளிர்ந்து ஆனந்தம் அடைந்த சூரியபகவான் அவர்களுக்கு காட்சியளித்தார். ‘‘தர்மபுத்திரா... உன் தேவையை நான் அறிவேன். இதோ... இந்த அட்சய பாத்திரத்தை பெற்றுக் கொள். இதன் மூலம் அனைவருக்கும் அன்னமிடும் பாக்கியம் அடைவாய்,’’ என்று சொல்லி பாத்திரத்தைக் கொடுத்தார். தர்மர் அதை வாங்கி திரவுபதியிடம் ஒப்படைத்தார். அவள் அதிலிருந்து நான்கு வகையான சுவை மிக்க உணவு வரப் பெற்றாள். அனைவருக்கும் வயிறார பரிமாறிய பின், தானும் சாப்பிட்டாள். அன்று முதல் தர்மர் நன்றியுணர்வுடன் சூரிய பகவானை வழிபடத் துவங்கினார்.
|
|
|
|