|
அயோத்தி நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அந்த நாட்டின் அரச பாரம்பரியம் தசரதனோடு முடிந்துவிடுமோ என்ற வருத்தத்தோடு ஏங்கிக் கொண்டிருந்த மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆங்காங்கே மன்னரால் நிறுவப்பட்டிருந்த ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயில்களில், தசரதனுக்கு நல் மக்கட்பேறு வாய்க்க வேண்டும் என்று மக்கள்தான் எத்தனை உருக்கமாக வேண்டிக் கொண்டனர். தசரதனின் குடும்பத்திற்கு மட்டும் அல்லாது மொத்த நாட்டிற்குமே குலதெய்வமாக வழிபடப்படும் ஸ்ரீரங்கநாதர் ஏனோ நீடித்து சோதிக்கிறார். கோயில்களில் மட்டுமா, ஒவ்வொருவரும் தத்தமது வீட்டு பூஜையறைகளில் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் விக்கிரகத்துக்கு மனமுருக பூஜை செய்தார்களே, அந்த பக்தியெல்லாம் வீணாகவா போய்விடும்? நிச்சயம் போகாது. ஏனெனில் அந்த ஸ்ரீரங்கநாதனே தான் அயோத்தியின் மூத்த வாரிசாக அவதரிக்கத் தயாராகிவிட்டாரே! அந்த அரச வம்சத்தின் குலதெய்வமாக இதுநாள்வரை விளங்கிவந்த தான், இனி அவர்களுடைய குடும்பத்தின் பாசமிகு மகனாகப் பிறக்க சித்தம் கொண்டுவிட்டாரே! ஆமாம், பாற்கடலில் ஆதிசேஷன் மீது சயனித்திருந்த மகாவிஷ்ணு, தான் பூலோகத்தில் புதியதோர் அவதாரம் எடுக்க வேண்டிய கட்டாயம் நேருவதை உணர்ந்தார். அங்கே அதர்மம் தலை விரித்தாடுவதையும், ‘புத்திமானே பலவான்‘ என்ற நிலை மாறி, ‘சக்திமானே பலவான்‘ என்ற துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருப்பதை கவனித்தார். அதர்மச் செயல்களை வேரறுக்க முனைந்த அவர், மனித பண்பாட்டுக்கு இலக்கணமாகத் திகழும் அவதாரத்தைப் புனைய விருப்பம் கொண்டார். ராமர் ஆனார்! அது மட்டுமன்றி, தன்னைவிட்டு என்றுமே பிரியாத மூவரையும் உடன் அழைத்துச் செல்லவும் திருவுளம் கொண்டார். தான் நடந்து சென்றால் தனக்குக் குடையாக நிழல் தருபவனும், அமர்ந்திருந்தால் தனக்கு சிம்மாசன இருக்கையாகத் திகழ்பவனும், நின்றிருந்தால் பாதுகையாக மாறுபவனும், படுத்திருந்தால், மெல்ல அசைந்து அசைந்து தன்னை மென்மையாகத் தாங்கிக் கொள்ளும் தெப்பம் போன்றவனுமான ஆதிசேஷனை பூலோகத்தில் தன் இளவலாக ஏற்றுக் கொள்ளத் தீர்மானித்தார். இவனோடு சங்கு, சக்கரம் இரண்டும் மேலும் இரு தம்பிகளாகவும், மகாலட்சுமியே அங்கும் தன் மனைவியாகத் திகழவும் தனக்கே விதி செய்து கொண்டார்! அயோத்தி மன்னன் தசரதன், புத்திர காமேஷ்டி யாகத்தில் கிடைத்த பிரசாதத்தைத் தன் மனைவியர் மூவருக்கும் பகிர்ந்தளிக்க, விரைவில் அவர்கள் மூலம் வாரிசுகளாக நான்கு புத்திரர்களை அடைந்தான். தன் பச்சிளங் குழந்தைகளைப் பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டான் தசரதன். குலகுரு வசிஷ்டர் யோசனைப்படி குழந்தைகளுக்கு, ராமன், பரதன், லட்சுமணன், சத்ருக்னன் என பெயரிட்டு மகிழ்ந்தான். மனைவியர் கோசலை, கைகேயி, சுமித்திரை மூவரும் பெரும் பேறு எய்திய மகிழ்ச்சியில் திளைத்தனர். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்கத் தொட்டில் என்று நான்கு வரவழைக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் குழந்தைகளை இட்டு, மெல்ல அசைத்து தாயார்கள் மூவரும், குழந்தைகளைத் துாங்க வைக்கும் முயற்சியில் பாசம் மிகக்கொண்டு நெகிழ்ந்தார்கள். நாட்கள் மெல்ல நகர்ந்தன. வழக்கமாகப் பசியாறிய அந்தக் குழந்தைகள் அடுத்துத் துாங்குவதுதானே வழக்கம்! ஆனால், பரதனும், சத்ருக்னனும் துாங்கிவிட, ராமனும், லட்சுமணனும் மட்டும் கண் மூடாமல் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருந்தனர். இது அடுத்தடுத்த சந்தர்ப்பங்களிலும் தொடர்ந்ததுதான் புரியாத புதிராக இருந்தது. கோசலைக்குக் குழப்பம். இத்தனைக்கும் ராமன் அழவில்லை, ஆனால் கை, கால்களை அசைத்தபடி இருந்தானே தவிர, வயிறு நிரம்பிய திருப்தியில் உறங்க வேண்டிய அவன், வேறு எதையோ எதிர்பார்த்தது போல சுறுசுறுப்பாக இருந்தான். ‘குழந்தை அழுதால், எதற்காக இருக்கும் என்று ஊகித்து அதற்கேற்ப ஏதேனும் வழிமுறை மேற்கொள்ளலாம், அழவும் இல்லை, சிணுங்கக்கூட இல்லை. ஆனால் உறக்கமும் கொள்ளவில்லையே! சுமித்திரைக்கும் கிட்டத்தட்ட இதே மனநிலைதான். அவளுடைய குழந்தைகளான லட்சுமணன், சத்ருக்னன் இருவரில் லட்சுமணன், ராமனைப் போலவே விழித்திருந்தான்! ஆனால் சத்ருக்னன் உறங்கிவிட்டான். இது என்ன அதிசயம்! ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகளான இருவரும் ஒருவருக்கொருவர் மாறுபட்ட பழக்கம் கொண்டிருக்கிறார்களே! ஆக, ராமன், லட்சுமணன் இரு குழந்தைகளும் ஒரே மனநிலையுடையவர்களாக இருக்கிறார்கள் என்பது பொதுவாக அனைவருக்குமே புரிந்தது. அப்படியானால் அவ்விருவரையும் அருகருகே படுக்க வைத்தால், இருவரும் துாங்கி விடுவார்களா? குழந்தைகள் இப்படித் துாங்காமல் விழித்திருந்தால் அவர்களுக்கு ஏதேனும் உடல் உபாதை ஏற்பட்டால் என்ன செய்வது? மருந்து, சிகிச்சை என்றெல்லாம் ராஜ உபசாரமாக செய்ய முடியும்தான் என்றாலும், அதற்கு முன் மனோதத்துவ ரீதியாக இப்போதே சரி செய்ய முடிந்தால்…? பலருக்கும் அவரவர் மனதுக்குள் வெவ்வேறு வகையான எண்ணங்கள் உருவாயின. ஆனால் எந்த உத்தியை மேற்கொள்வது? கோசலையும், கைகேயியும் ஒன்றும் புரியாமல் புதிரான குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர். சுமித்திரைதான் முன்வந்தாள். ‘‘நால்வரில் ராமனும் லட்சுமணனும் மட்டும் உறங்கவில்லை; பரதனும் சத்ருக்னனும் உறங்கி விட்டார்கள். ஆக, இவ்விரு ஜோடிகளும் ஒரே மனநிலை கொண்டிருக்கிறார்கள் என்று புரிகிறது. ஆகவே, ராமன் தொட்டிலுக்கு அருகில் லட்சுமணன் தொட்டிலை வைத்து விடலாமா? இருவரும் அருகருகே இருப்பதால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவும், சிரித்துக் கொள்ளவும், பிறகு நிம்மதியாகத் துாங்கவும் செய்வார்களே, செய்யலாமா?’’ என்று கேட்டாள். ‘அட, இது நல்ல யோசனையாக இருக்கிறதே!‘ என்று பலரும் வியந்தனர். அதன்படி சத்ருக்னன் அருகில் இருந்த லட்சுமணனின் தொட்டிலை மெல்லத் துாக்கி வந்து, ராமனின் தொட்டில் அருகே வைத்தனர். சுமித்திரை சொன்னது போலவே ராமன், லட்சுமணன் இருவரும் கழுத்தைத் திருப்பி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மெல்ல சிரித்துக் கொண்டனர். இந்த தெய்வீக ரகசியத்தை ஊகித்தறிந்த வசிஷ்டர் புன்னகைத்தார். அப்போது அருகே இருந்த தசரதன், ‘தாமாகவே திரும்பிப் படுக்கும் அளவுக்கு வளராத இக்குழந்தைகளால் எப்படி இப்படி சிந்திக்க முடியும்?’ எனக் கேட்டு அதிசயித்தார். இந்த ஏற்பாட்டின்படி, ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன் என்று தொட்டில் வரிசை இடம் மாறியது. அதாவது அந்த கணத்திலிருந்தே சுமித்திரையின் யோசனைப்படி, ராமன் – லட்சுமணன், பரதன் – சத்ருக்னன் என்ற சகோதரப் பிணைப்பு உறுதியானது. சுற்றி நின்றிருந்த அனைவரும் சந்தோஷத்துடனும், பாசத்துடனும் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் அவர்கள் முகத்தில் லேசான சந்தேக சாயல்… ஆமாம், இப்படி தொட்டில்களை ஒட்டிப் போட்டும் ராமனும், லட்சுமணனும் உறங்கினார்களா? இல்லையே! இன்னும் என்ன செய்தால் அவர்கள் நிம்மதியாக உறங்குவார்கள்? இந்த கட்டத்திலும் சுமித்திரைதான் முன் வந்தாள். பாலகன் ராமனின் தொட்டிலருகே வந்தாள். உள்ளேயே ராமனைச் சற்றுத் துாக்கி நகர்த்திப் படுக்க வைத்தாள். பிறகு லட்சுமணனின் தொட்டிலுக்கு வந்து அதிலிருந்து அவனை மெல்லத் துாக்கி எடுத்தாள். பிறகு ராமனுடைய தொட்டிலிலேயே அவனுக்கு அருகே இருந்த இடத்தில் பூப்போல மெல்லக் கிடத்தினாள். எல்லோரும் வியந்து பார்த்துக் கொண்டிருக்க, ராமனின் இடது கரத்தை, லட்சுமணன் தன் வலது கரத்தால் பற்றினான். ராமன் முகத்தில் மலர்ச் சிரிப்பு பூத்தது. லட்சுமணன் முகத்திலும் நிறைவான மகிழ்ச்சி ரேகை ஓடியது. ஆதிசேஷனாய், தனக்கு மஞ்சமாய் சேவை புரிந்த லட்சுமணன் தன்னருகே வந்து சயனித்ததால் அந்த பந்தம் காரணமாகவே மகாவிஷ்ணுவான ராமன் நிம்மதியாக உறங்கலானான்! ‘அட!’ என்று சிலிர்த்து வியந்தனர் கோசலையும், கைகேயியும். இருவரும் ஒருசேர சுமித்திரையைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டினர். வசிஷ்டர், தசரதன் உள்ளிட்ட அனைவரும் தங்களின் பாராட்டை மலர்ந்த விழிகளால் தெரிவித்தனர். சுமித்திரை அடக்கத்துடனும், புகழ்ச்சியால் ஏற்பட்ட வெட்கத்துடனும் தலை குனிந்து கொண்டாள். ‘இப்போதே உங்கள் இருவருக்கும் என் நன்றிக் கடனைத் தீர்க்க ஆரம்பித்து விட்டேன். இனி கோசலையின் ராமனுடன் என் லட்சுமணனும், கைகேயியின் பரதனுடன் என் சத்ருக்னனும் என்றென்றும் பிரியாமல் இணைந்திருப்பர்,’ என மனசுக்குள் சொல்லிக் கொண்டாள். சுமித்ரை என்றால் ‘நல்ல அறிவுடையவள், உரிய தருணத்தில் காப்பாற்றக்கூடியவள்‘ என்று அர்த்தம்!
|
|
|
|