|
ராமரின் பரம்பரையில் வந்த அரசர் அம்பரீஷன். அவர் ஏகாதசி விரதத்தை சிரத்தையுடன் அனுஷ்டிப்பார். விரதம் முடிந்ததும் ஒருவருக்கு அன்னமிட்டு சாப்பிடுவார். ஒருமுறை கோபக்காரரான துர்வாசமுனிவர் வந்தார். அவரை சாப்பிட அழைத்ததும், துர்வாசர் பூஜை முடித்தபின் வருவதாகக் கூறிச் சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. திதி முடிய சில நிமிடமே இருந்ததால் அம்பரீஷருக்கு என்ன செய்வதென தெரியவில்லை. துர்வாசரை விட்டுச் சாப்பிட்டால் அவருக்குக் கோபம் வரும். சாப்பிடாமல் இருந்தால் ஏகாதசி திதி முடிந்து விடும். எனவே பெரியோர் ஆலோசனைப்படி சிறிது தீர்த்தம் அருந்தி விரதம் முடித்தார். அப்போது துர்வாசர் அங்கு வர, தன்னை மதிக்காமல் விரதம் முடித்த அம்பரீஷன் மீது ஒரு பூதத்தை ஏவினார். அது அவனைக் கொல்லப் போயிற்று. உடனே விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் தோன்றி பூதத்தைக் கொன்றதோடு துர்வாசரைத் துரத்தியது. துர்வாசர் முதலில் பிரம்மாவிடம் ஓடினார். சக்கரத்தைத் தன்னால் தடுக்க முடியாது என்று அவர் சொன்னதால் சிவனிடம் ஓடினார். அதைத் தடுக்கும் உரிமை தனக்கில்லை என சிவனும் மறுத்தார். முடிவில் மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தார். ‘‘நான் பக்தர்களின் அன்புக்கு கட்டுப்பட்டவன். என்னாலும் தடுக்க முடியாது. அம்பரீஷன் மன்னித்தால் பிரச்னை தீரும்’’ என்றார் விஷ்ணு. பின் சுதர்சனத்திடம் துர்வாசரை விட்டு விடும்படி அம்பரீஷன் கேட்ட பின்னரே துர்வாசர் உயிர் தப்பினார்.
|
|
|
|