|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » சிங்கமுகன் வீழ்ச்சி! |
|
பக்தி கதைகள்
|
|
‘பானுகோபனை வதம் செய்த பிறகே வடிவேலனைச் சென்று காண்பேன்’ என்று சபதம் செய்து, அதில் வெற்றியும் பெற்ற வீரவாகு திருமுருகன் திருமுன்னர் போய் பணிந்தார். இரு தினங்களாக வீரவாகுவைக் காணாத வேலவர் விவரம் அறிந்து அவரை வெகுவாகப் பாராட்டி உனக்கு நான் ஒரு வெகுமதி அளிப்பதாக உள்ளேன். ஆரம்ப நாட்களிலேயே ஆகாயத்திற்குப் பறந்து சென்று பகலவனைப் பற்றிய பானுகோபன் வீரத்திலும், மாயத்திலும் ஒப்பற்றவன். தனியொருவனாக நின்று அவனோடு போரிட்டு அரிய வெற்றியை அடைந்த வீரவாகுவே உனக்கு உரிய அன்பளிப்பு வழங்க எண்ணியுள்ளேன். குபேர பதவி வேண்டுமா...அல்லது இந்திரபோகம் அனுபவிக்க விரும்புகிறாயா.. பிரம்ம பதம், விஷ்ணு பதம் அடைய நினைத்தாலும் இக்கணமே தரத் தயாராக இருக்கிறேன். பானுகோபனை வெல்வது அவ்வளவு எளிதானதல்ல. சபதம் செய்து அவளை சமரில் வென்ற உனக்கு உரிய சன்மானம் இப்போதே அளிக்கின்றேன். என்ன பதவியை ஏற்க விருப்பம். சொல்! மனம் நெகிழ்ந்த வீரவாகு நெடுஞ்சாண் கிடையாக நிலத்தில் வீழ்ந்து நமஸ்காரம் செய்தார். குபேரனாகவோ, இந்திரனாகவோ பதவி பெறுவதில் எனக்குச் சற்றும் ஆசையில்லை. பிரம்ம பதம், விஷ்ணு பதம் என்னும் பதவிகளையும் கனவிலும் நான் கருத மாட்டேன். எனக்கு எக்காலத்திலும், எச்சமயத்திலும் உங்கள் திருப்பதமே துணையாக இருந்தால் அதுவே போதுமானது.
கோலம் நீடிய நிதிபதி வாழ்க்கையும் குறியேன்! மேலை இந்திரன் அரசினை கனவிலும் வெஃகேன்! மால், அயன் பெறும் பதத்தினையும் ஒரு பொருட்டென மதியேன்! சால நின்பதத்து அன்பையே வேண்டுவன் தமியன் என்றான்!
‘நின்னிற் சிறந்த நின்தாள் இணையவை’ என்கிறது பரிபாடல். கடவுளை விட மேலான நிலையிலேயே கடவுளின் பாத கமலங்கள் அருளாளர்களால் போற்றப்படுகின்றன. பாதக மலங்களை நீக்கும் பாத கமலங்களையே நான் பற்ற வேண்டும் என்று வீரவாகு வேண்டினார். ‘அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவ மாட்டான்’ என்ற பழமொழியை நாம் தவறாகப் பொருள் உணர்ந்து பயன்படுத்துகிறோம். உண்மையில் ‘கடவுளுடைய திருவடி நமக்குத் துணையாக இருப்பது போல உறவினர்கள் துணையாக மாட்டார்கள்’ என்பதே அப்பழமொழியின் உண்மைப்பொருள். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து என்னும் முதல் அதிகாரத்தில் மீண்டும் மீண்டும் கடவுளின் திருவடிகளையே குறிப்பிடுகிறார். மலர்மிசை ஏகினான் மாணடி, வேண்டுதல் வேண்டாமை இலான் அடி, இறைவன் அடி சேராதார். அழிந்து போகும் நிலையற்ற பதவிகள் என்னும் பதங்களை வேண்டாது வேலவரின் பதங்களையே வெகுமதியாகக் கேட்ட வீரவாகுவின் செயலை தேவர்கள் அனைவரும் போற்றிப் பாராட்டினர். இதற்கிடையில் புதல்வன் பானுகோபன் போரில் மரணம் அடைந்தான் என்னும் செய்தியைக் கேட்டு சூரபத்மன் துயரக்கடலில் ஆழ்ந்தான். ‘புதல்வனே! நீ புகன்றதை எல்லாம் புறக்கணித்தேன். இப்போது உன்னையே இழந்து தவிக்கிறேனே...
என்னாம் இனி அதனை எண்ணுவது ? தன்னால் வராத வினை உளதோ தக்கோனே!
சென்றதை நினைத்து வருத்தப்படுவதால் என்ன நிகழப் போகிறது. உன் இழப்பிற்கு நானே தான் காரணம் என சூரனுக்கு சற்றே நல்லறிவு தலைக்காட்டியது. இதைத் தானே ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்கிறது பழந்தமிழ் இலக்கியமான புறநானுாறு. அப்போது சூரன் படையினர் சிங்கமுகனை ஆசுர மாநகரிலிருந்து கூட்டி வந்தனர். ஆயிரம் சிங்க முகங்களுடனும், இரண்டாயிரம் கரங்களுடனும் காட்சி அளித்த சகோதரனைக் கண்டதும் சூரபத்மனுக்கு தளர்ச்சி நீங்கி மலர்ச்சி வந்தது. ‘தம்பி.. உடன் போருக்குப் புறப்படு! அடுத்ததாக நானும் களம் காண இருக்கிறேன்.’ ஆர்ப்பாட்டம் ஆகாயத்தை எட்ட அசுர வீரர்களோடு ஆயிரம் தலை கொண்ட சிங்கமுகன் சமர்க்களம் வந்த போது அவனைப் பார்த்ததும் பூதகணங்களுக்குப் பயம் தொற்றிக் கொண்டது. அச்சத்திலேயே பலர் உடல் நடுங்கி தரையில் விழுந்து தலை சாய்ந்தனர். வீரவாகு உள்ளிட்ட ஒன்பது வீரர்களும் உடல் வியர்த்து, உள்ளம் நடுங்கி சிங்கமுகனை வீழ்த்துவது தங்களால் ஆகாத காரியம் என எண்ணினர். அப்போது வீர வேலாயுதத்துடன் வீறு கொண்டு முருகப்பெருமான் சின்னங்கள் ஒலிக்க யுத்தகளம் வந்தார்.
மூவர்கள் முதல்வன் வந்தான்! முக்கணான் குமரன் வந்தான்! மேலவர் மடங்கல் வந்தான்! வேற்படைவீரன் வந்தான்! ஏவரும் தெரிதல் தேற்றாது இருந்திடும் ஒருவன் வந்தான்! தேவர்கள் தேவன் வந்தான்! என்றன சின்னம் எல்லாம்!
இருவருக்கும் இடையே பெரும்போர் நெடுநேரம் நடந்தது. தான் செலுத்திய படைக்கலங்கள் யாவும் பயனற்று போகிறதே என எண்ணிய சிங்கமுகன் தன் இரண்டாயிரம் கரங்களாலும் கந்தவேளை அழுத்திப்பிடித்து அழித்து விடலாம் என நினைத்து அருகே வந்தான். சிவகுமாரன் ‘விர்’ ரென்று செலுத்திய வீரக்கணைகளால் ஒவ்வொருகரமும் அறுந்து வீழ்ந்தன. ஆனால் அடுத்த கணமே அவை மீண்டும் மீண்டும் முளைத்தன. இக்காட்சியைக் கண்டு அமரர்கள் யாவரும் அலமந்தனர். ஆச்சர்யமும் கொண்டனர். முருகப்பெருமானை நோக்கி சிங்கமுகன் ‘பார்த்தாயா! என்னை உன்னால் அழிக்கவே முடியாது’ என்று கூறி சிரித்தான். புன்னகை பூத்த கந்தப்பெருமான் ‘என் தந்தையார் கொடுத்த வரங்கள் எவ்வளவு சிறப்பானவை என்று அனைவரும் அறியவே உன் அங்கங்களை அறுத்து விளையாடினேன். அவ்வளவுதான். இப்போது பார் என் ஆயுதத்தின் ஆற்றலை’ என்றார். எதிர்அணியை நோக்கி ஏராளமான படைக்கலன்கள் ஒன்றன்பின் ஒன்றாய்ப் பாய்ந்தன.
கார் பிளந்திடும்; அளக்கரை உண்டிடும்; கதிரோன் தேர் பிளந்திடும்; வடவையை விழுங்குறும்; தேவர் ஊர் பிளந்திடும்; மேருவைப் பிளந்திடும்; உலவாப் பார் பிளந்திடும்; ஞான நாயகன் விடும் பகழி!
ஆயிரம் அம்புகள் ஆயிரம் சிரங்களில் பாய, வேலாயுதம் மார்பைப் பிளக்க விசுவரூப ஆலமரம் ஒன்று வேரோடு பெயர்ந்தது போல் வீழ்ந்தான் சிங்கமுகாசுரன். துாதர்கள் மூலம் செய்தி அறிந்த சூரபத்மன் ஆறாத் துயரம் அடைந்தான். ஆறாகக் கண்ணீர் பெருக்கினான். ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’ என்பார்களே.. தம்பியர் இருவரையும் இழந்து தவிக்கின்றேனே. தாரகன் ஒரு சிறகு, சிங்கமுகன் ஒரு சிறகு என இருந்தார்கள். இரண்டு சிறகும் இழந்த பறவை நான். இனி எவ்வாறு வாழ்வேன். செல்வ வளங்களை இழந்தால் சேகரித்துக் கொண்டு விடலாம். புதல்வனை இழந்தாலும் மீண்டும் பெற்றுக் கொண்டுவிட முடியும். மனைவி மறைந்தாலும் மறுமணம் புரிந்து கொள்ளலாம். தம்பியின் மறைவுக்கு இட்டு நிரப்ப எதுவும் இல்லையே.
பொன்னை, நிலம்தன்னை, புதல்வர்களை மங்கையரைப் பின்னை உளபொருளை எல்லாம் பெறலாகும் என்னை உடைய இளங்கோவே! இப்பிறப்பில் உன்னை இனிப்பெறுவது உண்டோ! உரையாயே!
வெந்துயரில் வீழ்ந்த சூரபத்மன் ‘இனி வெற்றிக்காக நான் போராட வேண்டியதில்லை. போர்க்களத்தில் மடிந்து உன்னோடு சேரவேதான் சண்டையிட வேண்டும்’ விரக்தியில் புலம்பினான் சூரபத்மன். இனியும் புலம்பிக் கதறுவதில் பொழுதைக் கழிக்காது போரில் வீரத்துடன் இறங்குவதே விவேகமானது என முடிவு செய்த சூரபத்மன் ஒற்றர்கள் அனைவரையும் ஒருங்கே வரச் செய்தான். ‘ஆயிரத்தெட்டு அண்டங்களிலும் உள்ள நம் சேனைகள் யாவற்றையும் திரட்டி வாருங்கள்’ என்று ஆணையிட்டான்.
|
|
|
|
|