Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அதிகாரியின் வலிப்பு நோய்
 
பக்தி கதைகள்
அதிகாரியின் வலிப்பு நோய்

‘‘நான் அசிஸ்டண்ட் கமிஷனர் ராமமூர்த்தியோட சம்சாரம், விஜயா. அவரு ரிட்டயராகி ஆறு மாசம் ஆகுது. அவருக்கு அடிக்கடி வலிப்பு வருது.  துாக்கித் துாக்கிப் போடுது. எல்லா டெஸ்ட்டும் எடுத்துட்டாங்க.  பெரிய டாக்டருங்க எல்லாம் பாத்துட்டாங்க. என்ன காரணம்னே கண்டுபிடிக்க முடியல. ஆஸ்பத்திரிலதான் இருக்காரு. செலவச் சமாளிக்கவே முடியல..
‘‘அவரு ஒரு பைசா தப்பா சம்பாதிக்கல.. அவர்கூட வேல பாத்தவங்க எல்லாம் கோடிக்கணக்குல சொத்து சேத்துட்டாங்க. எங்களுக்கு அவருடைய பென்ஷன் மட்டும்தான் வருமானம். வாடகை வீட்டுலதான் இருக்கோம். நாள் தவறாம பச்சைப்புடவைக்காரியக் கும்பிடறேன். மனசறிஞ்சி எந்தத் தப்பும் செஞ்சதில்ல. எங்களுக்கு ஏன் சார் இப்படி நடக்கணும்?’’
ராமமூர்த்தி எந்த மருத்துவமனையில் இருக்கிறார் என்று அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு மேம்போக்காக ஆறுதல் சொல்லி அனுப்பிவைத்தேன்.
அந்த மருத்துவமனையின் நரம்பியல் துறைத் தலைவரை நேரில் சந்தித்து விபரம் கேட்டேன். ‘எங்களுக்கே புரியவில்லை’ என்றார்.  
தொய்வாக வெளியேறினேன். ஒரு ஊழியை தாழ்வாரத்தைக் கூட்டிக்கொண்டிருந்தாள். நான் வந்ததைக் கவனிக்காததால் துடைப்பம் என் காலில் பட்டுவிட்டது. நான் அவளை முறைத்துப் பார்த்தேன்.
‘‘அந்த மனிதருக்காக உருகித் தவிக்கும் உனக்கு ஒரு நல்வழி காட்டலாம் என்றால் முறைக்கிறாயே!’’
அன்னையை விழுந்து வணங்கினேன்.
‘‘ராமமூர்த்தியின்  கர்மக்கணக்கு..’’
‘‘கர்மக்கணக்கும் இல்லை, கத்திரிக்காயும் இல்லை. உள்ளே போ. இதே நரம்பியல் துறையில் சாரதா என்ற பயிற்சி மருத்துவர் இருக்கிறாள். அவள் என் பக்தை. அவள் உனக்கு வழிகாட்டுவாள்.’’
நரம்பியல் துறை வாசலில் வெள்ளைக் கோட் அணிந்திருந்த ஒரு அழகுத் தேவதையின்முன் நின்று கைகூப்பினேன். பச்சைப்புடவைக்காரியே இவளைத் தன் பக்தை என்று சொல்லியிருக்கிறாளே!
‘‘டாக்டர் சாரதா.’’.
 ‘‘நான்தான். நீங்கள்...’’
என்னைப் பற்றியும்  ராமமூர்த்தியைப் பற்றியும் சொன்னேன். என் கையைப் பிடித்துத் தன் அறையில் இருந்த பெரிய பச்சைப்புடவைக்காரியின் படத்தின் முன் நிறுத்தினாள்.
 ‘‘பச்சைப்புடவைக்காரிக்கு முன்னால என் கையில அடிச்சி சத்தியம் செய்யுங்க.’’
‘‘என்னன்னு?’’
‘‘நான் சொல்லப்போற விஷயத்த ராமமூர்த்திகிட்டயோ அவரச் சேந்தவங்ககிட்டயோ சொல்லமாட்டேன்னு சத்தியம் செய்யுங்க.’’
‘‘அப்படி என்ன சொல்லப்போறீங்க?’’
‘‘சத்தியம் செஞ்சாத்தானே சொல்லமுடியும்?’’
சத்தியம் செய்துகொடுத்தேன்.
‘‘ராமமூர்த்திக்கு ஒரு பிரச்னையும் இல்ல, சார்.’’
‘‘அப்பறம் வலிப்பு ஏன் வரணும்?‘‘
‘‘தெனமும் நாலு மணிக்குச் சரியா வலிப்பு வருது. ரெண்டு நாளைக்கு முன்னால சரியா  அந்த நேரத்துக்கு ஒரு ஈஈஜி மெஷினோட அவரக் கனெக்ட் பண்ணேன். சிசிடிவி கேமராவ அவர் முகத்த நோக்கித் திருப்பி வச்சேன்.’’
‘‘என்ன தெரிஞ்சது?’’
‘‘அத எப்படிச் சொல்றது? சாதாரணமா வலிப்பு வந்தா மூளையில ஒரு பகுதியில மின்சாரம் பாயறது  அந்த மெஷின்ல தெரியும். அதுக்கப்பறம்தான் கை கால் எல்லாம் இழுத்துக்கும். இவருக்கு மூளையில எந்த மாற்றமும் இல்ல. அமைதியா  இருக்கு.’’
‘‘அப்படின்னா.. ‘‘
‘‘வலிப்பு வந்த மாதிரி நடிக்கறாரு.’’
‘‘இதச் சொன்னா நிம்மதியா இருப்பாங்கள்ல?’’
‘‘ரிட்டயரானதுக்கப்பறம்  தன்ன யாருமே கண்டுக்க மாட்டேங்கறாங்கன்னு அப்படி ஒரு நாடகத்த நடத்தியிருக்கலாம். அவரு நடிக்கறாருன்னு தெரிஞ்சா கெடைக்கற கொஞ்ச நஞ்ச அன்பும் கெடைக்காமப் போயிரும். அதான் சொல்லல.’’
‘‘இப்ப நான் என்ன செய்யறது?’’
‘‘என்னக் கேட்டா? பச்சைப்புடவைக்காரிகிட்ட கேளுங்க. அவதானே உங்கள என்கிட்ட அனுப்பிவச்சா?’’
சாரதாவைப் பார்த்து மீண்டும் ஒருமுறை கைகூப்பிவிட்டுக் கிளம்பினேன்.
மருத்துவமனை வாயிலில் கூட்டுப்பவள் வடிவில் கூடல்நகரின் அரசி நின்றுகொண்டிருந்தாள்.
கையில் இருந்த மொத்தப் பொருட்களையும் அவள் காலடியில் போட்டு அவற்றை எடுப்பதுபோல் குனிந்து அவள் கால்களைத் தொட்டேன்.
‘‘விஷயம் தெரிந்ததும் ராமமூர்த்தி மீது கோபம் வருகிறதோ?’’
‘‘இல்லை, தாயே! தீமையை ஒரு நோயாகப் பார்க்கவேண்டும் என்று எனக்கு உருவேற்றியிருக்கிறீர்களே! இவருக்கு எப்படி உதவுவது என்றுதான் புரியவில்லை ‘‘
‘‘திங்கட்கிழமை மாலை மீனாட்சி கோயிலுக்கு வா.’’
அன்னை மறைந்துவிட்டாள்.
திங்களன்று கோயிலில் நல்ல கூட்டம். சிறப்பு நுழைவுச் சீட்டு வாங்கினாலே ஒரு மணி நேரம் ஆகிவிடும் போல் இருந்தது. திரும்பிவிடலாமா என்று யோசித்தபோது யாரோ என் பெயரைச் சொல்லி அழைத்தார்கள்.
எனக்குத் தெரிந்தவர். பெரிய தொழிலதிபர். ஐநுாறு கோடிக்கு வர்த்தகம் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருடன் சென்றதால் அற்புதமான தரிசனம் கிடைத்தது. கர்ப்ப கிரஹத்தில் என்னை ஒட்டி ஒரு பெண் நின்றிருந்தாள். தீபாராதனையின் ஒளி அவள் முகத்தில் பட்டவுடன் அவள் யாரென்று தெரிந்துவிட்டது. அவள் பக்கம் திரும்பி கையைக் கூப்பினேன்.
‘‘உன்னை இங்கே அழைத்துக்கொண்டு வந்தவன் உன்னிடம் ஒரு உதவி கேட்பான். அதுதான் ராமமூர்த்திக்குச் சரியான தீர்வு.’’
அன்னையை வணங்கிவிட்டு தொழிலதிபரின் குடும்பத்துடன் வெளியே வந்தேன். சுவாமி சன்னிதியில் தரிசனம் முடித்துவிட்டு பொற்றாமரைக் குளத்தின் படிகளில் அமர்ந்து கொண்டோம்.
‘‘எனக்கு ஒரு உதவி செய்யணுமே ஆடிட்டர் சார்’’
அந்த வார்த்தையைக் கேட்டதும் சிலிர்த்தேன். அன்னை சொன்னமாதிரியே சொல்கிறாரே! அவள்தானே இவரைப் பேச வைத்துக்கொண்டிருக்கிறாள்!
‘‘எங்க கம்பெனி வருமான வரி வெவகாரங்கள்ல  கொஞ்சம் பிரச்னை இருக்கு. நல்ல ஆடிட்டருங்க இருக்காங்க. அவங்க கேக்கற தகவல எடுத்துக் கொடுத்து, என்கூட இருந்து எனக்கு அறிவுரை சொல்லி, பிரச்னை வராமத் தடுக்க ஒரு நல்ல ஆளு தேவைப்படுது.  கொஞ்சம் வயசானவரா, அனுபவம் உள்ள ஆளாச் சொல்லுங்க. மாசம் அம்பதாயிரம் ரூபாய் சம்பளம். கார் தரேன். என் கூடவேயிருந்து வழிகாட்டணும், சார்.’’
கண்ணில் வழிந்த கண்ணீரை மறைத்துக்கொண்டு மென்மையாகச் சொன்னேன்.
‘‘சரியான ஆளு எங்கிட்ட இருக்காரு. புத்திசாலி. நேர்மையானவரு. தப்பு தண்டாவுக்குப் போக மாட்டாரு..’’
ராமமூர்த்தியைப் பற்றி விரிவாகச் சொன்னேன்.
‘‘எப்போ கூட்டிக்கிட்டு வர்றீங்க?.’’
‘‘அடுத்த வாரம்.’’
மறுநாளே ராமமூர்த்தியை மருத்துவமனையில் பார்த்தேன். அந்த வேலையைப் பற்றி சொன்னேன். அவர் முகம் மலர்ந்தது.
‘‘ஆனா, நீங்க இதுக்குச் சரிப்பட்டு வரமாட்டீங்க. உங்களுக்குத்தான் தினமும் நாலு மணியானா வலிப்பு வந்திருதுல்ல? வேற யாரச் சொல்லட்டும்?’’
‘‘ஆடிட்டர் சார், நீங்க பச்சைப்புடவைக்காரிகிட்ட வேண்டிக்கிட்டு அவ குங்குமத்த என் நெத்தில வையுங்க. வலிப்பு காணாமப் போயிரும். எனக்கே அந்த வேலைய வாங்கிக்கொடுங்க சார்.’’
குறும்புச் சிரிப்புடன் குங்குமத்தை அவர் நெற்றியில் இட்டேன்.
போகும்போது மருத்துவர் சாரதாவைப் பார்த்து நடந்ததைச் சொன்னேன்.
‘‘பச்சைப்புடவைக்காரியால மட்டும்தான் இப்படி அன்பு காட்ட முடியும்.’’
குப்பை கூட்டுபவள் வடிவில் நின்றிருந்த பச்சைப்புடவைக்காரியை வணங்கினேன்.
‘‘ராமமூர்த்தியின் பிரச்னை தீர்ந்தது. ஆனால் உன் கர்மக்கணக்கில் பிரச்னை இருக்கிறதே. உனக்கு நோய் வந்து நீ வலியையும் வேதனையையும் அனுபவிக்கவேண்டிய காலம் இது. நீ என் அடிமை என்பதால் உனக்கு விதிவிலக்கு கொடுக்கிறேன்.’’
 ‘‘தாயே நான் உங்கள் கொத்தடிமை என்பதால் எனக்கு நோயிலிருந்து விடுதலை கொடுத்தால் என் அடிமைத்தனம் வெறும் வியாபாரமாகி விடும். அந்த நிலை நோயைவிடக் கொடியது. வேண்டாம், தாயே! நான் அனுபவிக்கவேண்டிய வலியையும் வேதனையையும் அனுபவித்துவிட்டுப் போகிறேன். எந்த நிலையிலும் உங்கள் பாதங்கள் என் இதயத்தைவிட்டு விலகாமல் இருக்க அருள் தாருங்கள் போதும்.’’
‘‘பலே ஆளப்பா நீ! என் பாதங்கள் உன் இதயத்தில் இருந்தால் நோயும் வேதனையும் எப்படி உன்னை நெருங்கமுடியும்?  உன்னுள் என்னைப் பார்த்தால் அவை நுாறு காத துாரம் ஓடிவிடுமே!’’
அவள் என் அறியாமையை நினைத்துச் சிரித்தாள். நான் அவள் அன்பை நினைத்து அழுதேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar