|
தன்னுடைய நான்கு புதல்வர்களில் மூத்தவனான ராமன் மீது தனிப் பாசமும், அக்கறையும் கொண்டிருந்தார் தசரதன். இதனால் பிற மூவர் மீதும் பாசம் குறைவு என்று அர்த்தமல்ல; தனக்குப் பிறகு சிம்மாசனத்தில் அமர வேண்டியவன் என்ற தகுதியில் ராமனுக்கு அவர் தரும் கூடுதல் பாசம் என்றும் அதைக் கருதலாம். நால்வரும் நந்தவனத்துக்கு விளையாடப் போனார்கள் என்றால், ராமன்- லட்சுமணன்; பரதன் – சத்ருக்னன் என்ற வரிசையிலேயே அவர்கள் போய் வருவதை ஆச்சரியமுடன் கவனித்திருக்கிறார் தசரதன். பிறவியிலேயே தலைமைப் பண்பு ராமனிடம் குடிகொண்டதையும், பிற மூவரும் அவரிடம் மரியாதை கலந்த பாசம் கொண்டிருப்பதையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தார். அந்தத் தலைமைப் பண்பில் அதிகாரம் இல்லாததையும், அன்பும், கருணையும் மட்டும் நிறைந்திருந்ததையும் மன நிறைவோடு நோக்கினார். இந்த வகையிலும் அவர் ராமன் மீது தனி அபிமானம் கொண்டிருந்தான். நான்கு குழந்தைகளையும் கொஞ்சும்போது ராமனிடம் மட்டும் அவன் அதிகப் பரிவைக் காட்டுவார். அப்படிக் காட்டும்போது அவருடைய உள்ளுணர்வு, ‘பிற மூன்று குழந்தைகள் இதனால் வருந்தப் போகிறார்கள்!‘ என்று அவ்வப்போது எச்சரிக்கும். உடனே பளிச்சென்று அந்த மூவரையும் அவர் கவனிப்பார். ஆனால் அவர்களோ எந்த சலனமும் காட்டாமல், தசரதனின் பாசத்தில் திளைத்திருக்கும் தங்கள் அண்ணன் ராமனின் சந்தோஷத்தைக் கண்டு அதுவே தங்களுக்கும் சந்தோஷம் என்பதாகிய நிறைவில் முகம் மலர்ந்திருப்பார்கள். பிள்ளைகளின் இந்த குணம் தசரதனுக்கு மட்டுமல்லாமல், அவனுடைய மனைவியர் மற்றும் அரண்மனையில் நடமாடும் பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. சராசரியாக நான்கு வயதாகியிருந்த அந்த சகோதரர்கள் இன்று போலவே என்றென்றும், இதே பாசப் பிணைப்போடு திகழ வேண்டுமே என பிரார்த்தனை செய்து கொண்டனர். குழந்தைகளைப் பலவகைகளிலும் சந்தோஷப்படுத்துவார் தசரதன். தாயார்களைத் தவிர குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள அனுபவம் மிக்க செவிலியர்கள் இருந்தாலும், தசரதனுக்கு என்னவோ, தனிப்பட்ட முறையில் அவர்களை கவனித்துக் கொள்வதில் அலாதி பெருமை! ராஜாங்கப் பணியில் ஈடுபட்டிருந்தாலும், அந்த நேரத்திலும் திடீர் திடீரென அவர்களின் நினைவால் தடுமாறுவார். பணியில் குறுக்கிடும் பாசத்தை அவரால் தடுக்க முடியவில்லை. குறிப்பாக அவன் எப்போதுமே ராமன் நினைவாகத்தான் இருந்தான். ஒரே அரண்மனைக்குள் வாழ்ந்தாலும் அவனைப் பார்க்காத நேரங்களில் அவர் என்னவோ தொலை தேசத்தில் இருப்பது போன்ற ஏக்க உணர்வை அடைந்தார். ராமனுக்கு எந்தத் துன்பமும் நேர்ந்துவிடக் கூடாது, சற்றும் உடல் நலம் குன்றிவிடக் கூடாது, சிறிதளவும் சோர்வடைந்துவிடக் கூடாது என்றெல்லாம் கவலை கொண்டார். இதற்காகவே அரண்மனை நந்தவனத்திற்கு அழைத்துச் செல்வது, ஊஞ்சல் ஆட்டுவது, கண்ணாமூச்சி ஆடுவது, பட்டாம்பூச்சிகளைப் பிடிக்க ஓடுவது, பறவைகளின் இனிய ஓசையைப் போல ஒலிஎழுப்புவது, தோகை விரித்தாடும் மயில்களை வியப்புடன் நோக்குவது, அணில்கள், முயல்கள், மான்குட்டிகளை தோழர்களாக்கி விளையாடுவது…… அடடா, பொழுது போக்கத்தான் குழந்தைகளுக்கு எத்தனை வாய்ப்புகள், வசதிகள்! இருந்தாலும், தசரதன் மனம் அமைதியடையவில்லை. சிந்தித்துக் கொண்டே வந்த தசரதனுக்கு பளிச்சென ஒரு யோசனை. குதிரை ஏற்றம், யானை ஏற்றம் போன்ற போர்ப் பயிற்சிகள் நினைவுக்கு வந்தன. ராஜகுல சம்பிரதாயப்படி 16 வயதுக்குப் பிறகே இப்பயிற்சிகளில் அரச குமாரர்களை ஈடுபடுத்துவது மரபு. ஆனாலும் குழந்தைகளை யானை மீது ஏற்றி ஊர்வலம் செல்லலாமே எனத் தோன்றியது. பட்டத்து யானையை அலங்கரித்து அழைத்து வருமாறு உத்தரவிட்டார் தசரதன். பெரிதான நெற்றிப் பட்டை, கழுத்தில் மிக நீண்ட பூமாலை, முதுகிலிருந்து அடிவயிறு வரை படர்ந்திருக்கும் பட்டுப் போர்வை, வால் நுனி, கால்களில் வெள்ளி கொலுசுகள், சவாரி செய்பவர் வசதியாக அமர்ந்து கொள்ள முதுகில் அம்பாரி… இவ்வாறு பேரழகுடன் அலங்காரம் செய்யப்பட்ட சத்ருசேனன் என்னும் பட்டத்து யானை மெல்ல அசைந்து வந்தது. அதன் கம்பீரம், உயரம், பருமன், கண்களில் தீட்சண்யம் எல்லாம் அதன் விருப்பமின்றி யாரும் அதன் முதுகில் அமர்ந்து சவாரி செய்ய முடியாது என்பதை மிரட்டலாக வெளிப்படுத்தின. நான்கு குழந்தைகளையும் அழைத்துச் சென்றார் தசரதன். ராமனைப் பார்த்ததும் அவன் முன் மண்டியிட முயன்றது யானை. உடனே தசரதன் யானைப்பாகனைப் பார்க்க, அவன் சமிக்ஞை கொடுத்தான். யானை வலது முன்னங்காலை மடக்கியபடி முன் வைத்தது. தந்தையார் தன்னைத் தட்டிக் கொடுத்தும், தலையசைத்து அனுமதி அளிக்க, ராமன் யானையை நெருங்கினான். அதன் மடித்த காலைத் தன் கரங்களால் தொட்டு வணங்கினான். பிறகு தன் வலது பாதத்தை அதன் மீது பதித்தான். இரு கைகளையும் உயரே துாக்கி அதன் காதைப் பற்றிக் கொள்ள, யானை வெகு லாவகமாக ராமனைத் தாங்கிய பாதத்தை மெல்ல உயர்த்தியது. மேலெழுந்த ராமன் அதன் காதை விட்டுவிட்டு அதன் முதுகில் ஏறி அம்பாரியில் அமர்ந்தான். பகவானின் பாதத்தைப் பற்றினால் ஒரு பக்தன் மேலே துாக்கி விடுவார் என்பதைப் போல இருந்தது. அம்பாரியில் அமர்ந்திருக்கும் ராமனின் தோரணை கண்டு பரவசப்பட்டார் தசரதன். கீழிருந்து அண்ணாந்து பார்த்த தம்பிகளும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிறு குழந்தைகளாக இருந்தாலும் யானை மீது அமர வேண்டும் என அவர்கள் ஏங்காததும், அதற்காகத் தந்தையை வற்புறுத்தாததும் ஆச்சரியமே. அதாவது அப்போதே தசரதனுக்குப் பின் அரசாள வேண்டியவன் ராமனே என அவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர். |
|
|
|