|
அசுர வேந்தனின் ஆணைப்படி துாதர்கள் அனைத்து அண்டங்களின் சேனைகளையும் ஒருசேர வரவழைத்தனர். பார்வையை மீறியபடி பெருத்திருந்த படை பலத்தையும், எண்ணற்ற அஸ்திரங்களுடன், ‘இன்று வென்றே தீருவது’ என்ற வீராவேசத்துடன் வந்த சூரபத்மனையும் கண்டு தேவேந்திரன் நடுங்கினான். கந்தப்பெருமானின் படை வீரர்களும் பதைபதைத்தனர். இந்திரன் திருமாலிடம் கேட்டான். ‘சூரபத்மனின் படைபெருக்கத்தைப் பார்த்தால் இத்தனை சேனைகளையும் மொத்தமாய் அழிக்கவே யுகங்கள் பல சென்று ஊழிக்காலமே வந்து விடும் போலிருக்கிறதே! இனி இந்திர உலகம் அடைவது தான் எப்போது? சூரன் அழிவதுதான் எக்காலம்? ‘நம்பிக்கை இழந்து ஏன் நடுங்குகிறீர்கள்?’ என்ற திருமால் முருகப்பெருமானின் அளவற்ற ஆற்றலைப் பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடியுமா? சரவணத்தில் தோன்றி கயிலாயத்திற்கு வந்த போதே அவரின் பிள்ளைத் திருவிளையாடல்களைப் பார்த்து நாமெல்லாம் பிரமித்துப் போனதை மறந்து விட்டீர்களா? நானும், நான்முகனும் பலகாலும் தேடி அடிமுடி காணாத ஆதிசிவனின் மறுவடிவான முருகப்பெருமானை நம் புத்திநுட்பத்தால் புரிந்து கொள்ள முடியுமா? ஓல மறைகள் அறைகின்ற ஒன்றது மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர் ஓது சரியை கிரியை புணர்ந்தவர் எவராலும் ஓத அரிய துரியம் கடந்தது போத அருவசொரூபம் பிரபஞ்சமும் ஊனும் உயிரும் முழுதும் கலந்தது சிவஞானம் சால உடையதவர் கண்டு கொண்டது மூல நிறைவு குறைவின்றி நடந்தது. மகாவிஷ்ணுவின் விளக்கத்தால் தேவேந்திரனின் சஞ்சலம் நீங்கியது. போர்க்களத்தில் வாயுதேவன் திசைகள் நான்கிலும் மாறிமாறித் தேரைத் செலு்த்த, தேரில் நின்றபடியே அம்பு மழையைப் பொழிந்தார் முருகப்பெருமான் .அவுணர்கள் கூட்டம் அழிவதைக் கண்ட சூரபத்மன் தனது தாயான மாயாதேவியை வணங்கினான். ‘அம்மா’ முருகவேளின் கணைகளால் முழுதும் அழிந்து விட்டன என் படைகள். தாங்கள் தான் தக்க வழிகாட்ட வேண்டும். ‘மகனே! சண்முகப் பெருமானோடு சமாதானமாகப் போவதே உயிர் பிழைப்பதற்கான வழி! அவ்வளவு பேரும் அறிவுரை வழங்கியும் உன் ஆணவமலம் உன்னை அழித்தே தீருமோ என்று மிக கவலைப்படுகிறேன். ‘புதல்வனே! இறந்த அனைவரும் புத்துயிர் பெற ஒருவழி சொல்கிறேன். கேள். ‘அமுதசீக மந்திர கூடம்’ என்னும் மலை அலை கடல் ஏழிற்கும் அப்பால் உள்ளது. உன் இந்திர ஞாலத்தேரை அனுப்பி அதை யுத்த களத்திற்கு பெயர்த்து எடுத்து வந்தால் இறந்து போன உன் தம்பியர்கள், உறவினர்கள், படைவீரர்கள் யாவரும் உயிர் பெறுவார்கள். தாய் சொல்லைத் தட்டாமல் மறுவினாடியே மலையை எடுத்து வர இந்திர ஞாலத்தேரை அனுப்பினான். மலையை எடுத்து தேர் வந்ததும் தாரகன், சிங்கமுகன், வச்சிரவாகு, பானுகோபன் என அனைவரும் உயிர் பிழைத்தனர். ‘அழிந்த அனைவரும் எழுந்து விட்டார்களே! மாய மந்திரங்களுக்கு இவ்வளவு மகிமையா?’ என தேவர்கள் கலங்கினர். புன்னகை புரிந்தபடியே முருகப்பெருமான் சர்வ சங்காரப்படையை ஏவினார். வீறு கொண்டு தன் வேலாயுதத்தை எடுத்து வீசினார். பலப்பல உருவங்கள் எடுத்து சூரபத்மன் விண்ணிலும், கடலிலும், மண்ணிலும் மாறி மாறிப் போர் புரிந்தான். விண்ணகத்தில் போர் புரிந்த இடம் ‘திருப்போரூர்’ மண்ணில் போர் புரிந்த இடம் ‘திருப்பரங்குன்றம்’ கடலில் போர் புரிந்த இடம் ‘திருச்செந்துார்’ பாரதத்தில் கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே 18 நாட்கள் போர் நடந்தது. ராமாயணத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் இடையே 18 மாதங்கள் போர் நடந்தது. தேவாசுரப்போர் எனக் குறிப்பிடப்படும் முருகப்பெருமானுக்கும், சூரபத்மனுக்கும் இடையே நடந்த போரோ 18 ஆண்டுகள் நடந்தது. விதவிதமான வடிவங்கள் எடுத்து வானம், நீர், பூமி என யுத்த களங்களை மாற்றி, இறந்து போனவர்கள் அனைவரையும் மந்திர மலையால் எழுப்பி சூரபத்மன் விடாது போர் புரிந்தாலும் வெற்றி வடிவேலனின் ஆயுதமழையில் அவன் நிலைகுலைந்து போனான். அப்போது முருகப்பெருமான் தன் தனிப்பெரும் வடிவத்தை எடுத்து பகைவனுக்கும் அதைக் காணும் பார்வைத் திறனையும் வழங்கினார். ‘ஏதேதோ உருவங்களில் தோன்றிய நீ என் உண்மை சொரூபத்தை இதுவரை அறியவில்லை! இப்போது பார் என் விசுவரூபத்தை!’ என்ற முருகப்பெருமான் விண்ணுக்கும், பாதாளத்திற்குமாக விரிந்தார். கடல், மலை, வானம், நட்சத்திரங்கள் எல்லாம் கந்தனின் காலடி விரல்களில் காட்சி அளித்தன. உயிர்க்கூட்டங்கள் எல்லாம் அவரின் உந்திக் கமலத்தில் ஒடுங்கி இருந்தன. அசுரர்கள் இடுப்பிலும், தேவர்கள் விலாப்புறங்களிலும் விளங்கினர். திருமாலும், நான்முகனும் தோள்கள் இரண்டிலும் தோற்றம் அளிக்க, தேவலோக மாதர்கள் அவரின் விரல்களிலேயே விளங்கினர். சூரியனும், சந்திரனும் கண்களில் காணப்பட்டனர். திசைகள் அனைத்தையும் அளாவியிருந்த திருமுருகனின் விசுவரூபம் கண்டு திடுக்கிட்டான் சூரபத்மன். துாதனாக வந்த வீரவாகு சொல்லிய அனைத்தும் உண்மை தான் போலும். கோலமா மஞ்ஞைதன்னில் குலவிய குமரன் தன்னைப் பாலன் என்று இருந்தேன் அந்நாள் பரிசிவை உணர்ந்திலேனால் மால் அயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும் மூலகாரணமாய் நின்ற மூர்த்தி இம்மூர்த்தி அன்றோ! ‘நாம் ஆட்சி செய்த ஆயிரத்தெட்டு அண்டங்களையும், இந்த ஆறுமுகனாரின் பாத விரல்களுக்குள் பார்க்கின்றேனே!’ வியப்பின் விளிம்புக்கே சென்ற சூரபத்மன், ‘என் கீழ்மை குணங்கள் நீங்கி இவரின் அடிமலர்களுக்கு கீழேயே நான் அடங்கி வாழ வேண்டும்’ என்று ஒருகணம் எண்ணினான். ஆனால் மறுகணமே அவனை மமதைப் பற்றிக் கொண்டது. ‘போயின அகந்தை! போதம் புகுந்தன! சூழுதல் வேண்டும்! தாள்கள் தொழுதிடல் வேண்டும்! அங்கை தாழுதல் வேண்டும்! தீமை அகன்று நான் இவற்கு ஆளாகி வாழுதல் வேண்டும்! நெஞ்சம் தடுத்தது மானம் ஒன்றே! ஒரு கண ஞானோதயம் ஒடுங்கி மீண்டும் பழைய புத்தியே சூரனுக்கு வந்தது. ‘மாய வடிவம் காட்டி என்னை மயக்கி விட்டான் இந்த சிறுவன்’ என்று எண்ணி மீண்டும் ஆக்ரோஷமாக அமரில் ஈடுபட்டான். அமரர்கள் நடுங்கினர். சூரன் கடல் நடுவே போய் ஒரு மாமரமாக வடிவெடுத்து நின்றான். அந்த மாமரம் ஆகாயத்தில் வேர் பரப்பியும், கிளைகளையும், இலைகளையும் மண்ணுலகத்தில் காட்டியும் தலைகீழாக மாயம் செய்தது. மாமரத்தை இருகூறாகப் பிளந்தது மாமுருகனின் வேலாயுதம். மீண்டும் தன் சுய உருவத்தோடு போரிட்ட சூரன் மார்பிலும் பாய்ந்து அவனை இரு கூறாக்கியது. அப்போதும் விடாது போர் புரிய பறவை வடிவம் எடுத்து சேவலும், மயிலுமாக வந்தான் சூரன். அழிக்கும் நிலையில் இருந்து மாறி ஆறுமுகப்பெருமான் ஆட்கொள்ளும் அருள்நிலையில் இறங்கி வந்தார். ‘சேவலே! நீ என் கொடியில் இருந்து இனி கூவுக!’ ‘மயிலே! நீ என்னைத் தாங்கிச் செல்லும் வாகனமாக ஆகுக’ என்று திருவருள் சுரந்தார். பகைவனுக்கு அருள்வாய்! நன்னஞ்சே! பகைவனுக்கு அருள்வாய்! மோதவரும் கருமேகத்திரளினை – வெண்ணிலாவே! நீ முத்தின் ஒளி தந்து அழகுறச் செய்குவை – வெண்ணிலாவே! என்று பாரதியார் பாடுகிறார். எதிர்த்த சூரபத்மனையே தன் கொடியாகவும், வாகனமாகவும் மாற்றி ‘மறக்கருணை’ புரிந்த முருகப்பெருமானை வாழ்த்தி தேவர்கள் மலர்மழை பொழிந்தனர். தீயவனையும் துாயவனாக்கும் திருமுருகனின் கருணை! மாயையின் மகனான அசுர வேந்தனுக்கே எல்லையற்ற அருள் வழங்கியவர் பக்தர்களான நமக்கெல்லாம் எவ்வாறு வரங்கள் அளித்து வாழ வைப்பார் என்று எண்ணிப் பார்த்து இன்பம் அடையுங்கள் என்கிறார் கந்த புராண ஆசிரியர் கச்சியப்பர்! தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால் துாயவர்ஆகி மேலைத்தொல்கதி அடைவார் என்கை ஆயவும் வேண்டும் கொல்லோ! அடுசமர் அந்நாட் செய்க மாயையின் மகனும் அன்றோ வரம்பிலா அருள் பெற்று உய்ந்தான்! |
|
|
|