|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » நல்லவரை நோகடித்தவன் |
|
பக்தி கதைகள்
|
|
அன்று காலை உற்சாகமாக அலுவலகத்தில் நுழைந்த எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவர் நாதன் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார். கசங்கிய ஆடை, கலங்கிய கண்கள், வெறித்த பார்வை. ‘‘என்ன செய்யறதுன்னு தெரியலண்ணா. காலையில அஞ்சு மணிக்குக் கார எடுத்துக்கிட்டு நேர உங்களப்பாக்க வந்துட்டேன்.” நாதனைக் காபி அருந்தச் செய்து பின் விவரம் கேட்டேன். ‘‘அரசாங்க ஆஸ்பத்திரில சர்க்கரை நோயால தவிச்சிக்கிட்டிருக்கற குழந்தைங்களுக்காக ஒரு ப்ராஜக்ட் போட்டோம்ணா. 36 ஏழைக் குழந்தைங்களத் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு பிரிட்ஜ் கொடுத்து..’’ ‘‘பிரிட்ஜ் எதுக்கு?” ‘‘இன்சுலின் மருந்த வெளிய வச்சா வெறும் தண்ணியாயிரும்ணா.” ‘‘அப்பறம்?’’ ‘‘அடிக்கடி அந்தக் குழந்தைங்க ரத்தத்துல சர்க்கரை அளவப் பாத்து, சரியான சமயத்துல இன்சுலின் போட்டு, அந்தக் குழந்தைங்களுக்கு முடிஞ்சமட்டுல ஒரு இயல்பான வாழ்க்கையக் கொடுத்து..’’ நாதனின் கண்கள் கலங்கிவிட்டன. ‘‘என்ன பிரச்னை?” ‘‘மொத்தம் 12 லட்சம் செலவாகும்னு கணக்குப் போட்டோம். அஞ்சு லட்சத்தத் தேத்திட்டோம். பாக்கி 7 லட்சத்த ஒரு தன்னார்வ அமைப்பு தரதாச் சொன்னாங்க. நெறைய விபரம் கேட்டாங்க. பத்து நாள் கஷ்டப்பட்டு அவங்க கேட்டதை கொடுத்தோம். நேத்து சாயங்காலம் அஞ்சு மணிக்கு ஏழு லட்ச ரூபாய்க்கு செக் வாங்கிக்கலாம்னு சொன்னாங்க. நாலே முக்கால் மணிக்கு அந்த அமைப்போட தலைவர் வீட்டுக்குப் போயிட்டேண்ணா. கடைசி நிமிஷத்துலகூட எசகுபிசகாக் கேள்வி கேட்டாரு. பதில் சொன்னேன். கடைசியா ஒண்ணு கேட்டாரு பாருங்க..” ‘‘என்ன?” ‘‘பணக்காரனோ, ஏழையோ, நோய்வாய்ப்பட்ட ஒவ்வொருத்தருக்கும் உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை கொடுக்கணுங்கறதுதான் என் கொள்கை.’’ ‘‘ஏழைக் குழந்தைங்களுக்கு எதுக்காகப் புதுபிரிட்ஜ், முதல் தரமான மருந்து, சிகிச்சை எல்லாம் கொடுக்கணும்னு அந்தாளு கேட்டாருண்ணா. எனக்கு உலகமே வெறுத்துப்போச்சு. ‘‘நான் கோடீஸ்வரன், பென்ஸ் கார்ல போறேன். என் அளவு பணம் இல்லாதவன் மாருதி கார்ல போறான். அதுவும் இல்லாதவன் சைக்கிள்ல போறான் இல்ல, நடந்து போறான். ஆனா நீங்க எல்லாருக்கும் பென்ஸ் கார் வாங்கித் தரணும்னு சொல்றீங்க. பிரிஜ்ஜுக்குப் பதிலா பழைய ஐஸ் பெட்டி. குறைஞ்ச தரத்துல மருந்துன்னு பிராஜெக்ட்ட மாத்தினா அஞ்சு லட்சத்துல மொத்த பிராஜக்டே முடிஞ்சிடும்’’ என்றார். எனக்கு அழுகை வந்திருச்சி. பெத்தவங்ககிட்ட காசில்லங்கறதுக்காக குழந்தைங்களுக்குத் தரம்கெட்ட சிகிச்சையத் தரது பாவம்யா. எனக்கு பணமே வேண்டாம். இந்த குழந்தைங்களப் பச்சைப்புடவைக்காரி பாத்துப்பான்னு சொல்லிட்டேண்ணா.’’ ‘பச்சைப்புடவைக்காரி எப்படி இன்சுலினும் பிரிஜ்ஜும் வாங்கித்தரான்னு பார்க்கத்தானே போறேன்’னு கத்திட்டுப் போறான்ணா. நான் ராத்திரி துாங்கல, சாப்பிடல. நாளைக்குக் காலையில அந்த பிராஜெக்ட ஆரம்பிச்சி வைக்க கவர்மெண்ட் ஆஸ்பத்திரி டீன் வராரு. அதுக்குள்ள பாக்கி ஏழு லட்சத்தப் புரட்டலன்னா என் மானமே போயிரும்ணா. உடனடியா ஏதாவது செய்யலேன்னா சில குழந்தைங்க உயிருக்கே ஆபத்தாயிரும்ணா. அத நெனச்சாலே பயமா இருக்குண்ணா. பச்சைப்புடவைக்காரி அந்தக் குழந்தைங்களக் கைவிட்ருவாளா? அவ செஞ்சாலும் செய்வாண்ணா. கர்மக்கணக்கு, கத்திரிக்காய்ன்னு அவளுக்கு ஆதரவா நீங்க கதை கட்டிருவீங்க.’’ ‘‘என்ன நடக்குதுன்னு எனக்குப் புரியல. நான் கோயிலுக்கு இப்பவே போகப்போறேன். நீங்க வரீங்களா?” ‘‘இல்லேண்ணா. நான் ஊருக்குப் போகணும்.” ‘‘சாப்பாடு?” ‘‘மனசிருந்தா வழில பாத்துக்கறேன்.” ‘‘அவசரத்துக்கு யார்கிட்டயாவது 7 லட்சம் ஏற்பாடு பண்ணித் தரட்டுமா?” ‘‘வேண்டாம்ணா. அவளுக்கு மனசிருந்தாக் கொடுக்கட்டும். அவதானே பெத்தவ. பெத்தவதானே குழந்தைங்களப் பாத்துக்கணும்.?” சொல்லிவிட்டு விடுவிடுவென்று கிளம்பினார் நாதன். அவர் சென்றவுடன் நானும் வெளியேறினேன். ‘‘கோயிலுக்குப் போறேன். யாராவது வந்தா நாளைக்கு வரச்சொல்லுங்க.” என்னைப் புதிருடன் பார்த்த உதவியாளரிடம் சொன்னேன். ‘‘12 மணியாச்சே சார்? எந்தக் கோயில் திறந்திருக்கும்?” ‘‘யாருக்குத் தெரியும்? ஆனா அவ மனசு எப்பவும் திறந்தேதான் இருக்கும்.” வெயிலைப் பொருட்படுத்தாமல் வேகமாக நடந்தேன். வேகமாக ஒரு கார் வந்து என்னை ஒட்டினாற்போல் நின்றது. ‘‘மீனாட்சி கோயிலுக்கு எப்படி போகணும்?” வழி சொல்ல ஆரம்பித்தேன். ‘‘நீங்களும் வாங்களேன்.” ‘‘இல்லை நான் நடந்தே...” ‘‘ஏறுய்யா வண்டியில. நடக்கற மூஞ்சியப் பாரு” அந்த அதட்டலில் அவள் யாரென புரிந்தது. நாதனை இப்படி நட்டாற்றில் விட்டு விட்டீர்களே என எண்ணி கண்ணீருடன் கைகூப்பினேன். ‘‘குழந்தைகளுக்காக உருகும் நாதனின் உன்னத அன்பை அனுபவிக்க வேண்டுமென்றே இந்த சோதனை. நாதனை வைத்து அதிரடி மாற்றம் செய்யப்போகிறேன். அதற்கு இதுவே முன்னோடி.” ‘‘நாளைக்கு நடக்கப்போகும் நிகழ்ச்சி...36 குழந்தைகள்...” ‘‘என்னை யாரென்று நினைக்கிறாய்? வண்டியில் ஏறு. ஐந்து நிமிடத்தில் என்ன நடக்கிறது என்று பார்.” அவள் சொன்னதைச் செய்தேன். அவள் முகத்தை பார்த்தபடி கண்ணீர் சிந்தினேன். வண்டி ஓடிக் கொண்டிருந்தது. என் செல்போன் அலறியது. ‘‘நாதன் பேசறேண்ணா. பச்சைப்புடவைக்காரி பச்சைப்புடவைக்காரிதாண்ணா. மதுரை எல்லையத் தாண்டறதுக்குள்ள அஞ்சு போன் வந்துருச்சி. எல்லாம் பெரிய பெரிய ஆளுங்க. ஏழு லட்சம் கெடைச்சா போதும்னு நெனச்சேன். இருபது லட்சம் வந்துருச்சிண்ணா. இன்னும் 50 குழந்தைங்களுக்கு சிகிச்சை தரப்போறோம்ணா. பச்சைப்புடவைக்காரியத் தப்பாப் பேசிட்டேண்ணா. அவ பெரிய கைகாரிண்ணா. முதல்ல கொடுக்காம அழ வச்சா. இப்போ நிறையக் கொடுத்து பெரிசா அழ வச்சிட்டா. சாகறவரைக்கும் நான் அழுதுகிட்டிருந்தாலும் அவ அன்புக்கு ஈடாகாதுண்ணா” செல்போன் கீழே விழுந்தது. வண்டி நின்றது. இறங்கிவந்து அவள் காலில் விழுந்து கதறினேன். ‘‘நாதன் மனதை நோகடித்தவனை என்ன செய்யட்டும்? செல்வத்தை எல்லாம் பறித்து நடுத்தெருவிற்குக் கொண்டுவரட்டுமா?” ‘‘வேண்டாம் தாயே!” ‘‘வேறு என்ன தண்டனை கொடுக்கலாம் என நீயே சொல்.” கைகூப்பியபடி அவள் சொல்லிக்கொடுத்த பிரார்த்தனையைச் சொன்னேன். ‘‘அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்.” ‘‘தப்பாக வேண்டிக் கொள்ளாதே! அல்லல்பட்டவர் நாதன். அல்லல் படுத்தியவன் அந்த அமைப்பின் தலைவன்.” ‘‘அது சரிதான் தாயே! ஆனால் நாதன் போன்ற நல்லவரைப் புண்படுத்தியதால் அவன் அனுபவிக்கப் போகும் வேதனையை நினைத்தால் இப்போதே குலை நடுங்குகிறது. அவன் நிச்சயம் அல்லல்படப் போகிறான். அல்லல்படுவோர் என்பது நிகழ்காலம், எதிர்காலம் என எல்லாக் காலங்களிலும் அல்லல்படுவோரைக் குறிக்கும் அல்லவா? அதனால்தான் இப்போதே அவன் மனதை அன்பால் நிரப்புங்கள் என உங்களிடம் கேட்டேன்.” ‘‘கேட்டதைத் தந்தேன். இனி இது போன்ற விவகாரங்களில் எனக்காகக் காத்திருக்க வேண்டாம். நாதன் போன்றவர்களுக்கு உதவும் சக்தியை அளிக்கிறேன்.” ‘‘வேண்டாம், தாயே. அப்புறம் உங்களை அடிக்கடி பார்க்க முடியாதே! அது போக…” ‘‘அது போக…” ‘‘நான் கொடுத்தால் எனக்கு கர்வம் வந்துவிடும். நீங்களே கொடுங்கள். நான் என்றும் நல்லவர்களுக்காக உங்களிடம் கேட்கும் பிச்சைக்காரனாகவே இருக்கிறேன். அதுதான் இந்தக் கொத்தடிமைக்கு ஏற்ற வேலை.” கலகலவென சிரித்துப் பின் காற்றோடு கலந்தாள் பச்சைப்புடவைக்காரி. |
|
|
|
|