Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பிராயசித்தம்
 
பக்தி கதைகள்
பிராயசித்தம்


சந்திரமதிக்கு சுயம்வரம் நடத்த அவளுடைய தந்தையான மன்னர் மதிதயன் ஏற்பாடுகள் செய்தார். காத்திருந்த மணமகன்கள் முன்னிலையில் அவள் நடைபயின்ற போது அவர்களில் ஒருவனாக வீற்றிருந்த அரிச்சந்திரன், சட்டென்று துள்ளியெழுந்தான். ‘‘என்ன அநியாயம் நடக்கிறது இங்கே? ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுக்கு இப்போது திருமண சுயம்வரமா?’’ என்று மன்னர் மதிதயனை சாடினான்.
அனைவரும் திடுக்கிட்டு நிற்க, மதிதயன் ஓடோடி வந்தான். ‘‘இவளுக்கான கணவர் தேர்வு அல்ல, இந்த சுயம்வரம். ஏற்கனவே கடவுளால் நிச்சயிக்கப்பட்ட இவளுடைய கணவன் யார் என்று கண்டுபிடிப்பதற்காக நடத்தப்பட்டது தான் இது. பிறவியிலிருந்தே இவள் கழுத்தில் துலங்கும் இந்தத் தாலி எந்த ஆடவன் கண்களுக்கு படுகிறதோ, அவன் தான் இவளுடைய கணவன் என்பது இவளுக்கு கிடைத்திருக்கும் வரம். அந்த வகையில் இங்கே கூடியிருக்கும் இத்தனை மன்னர்களில் உங்களுக்கு மட்டும் அந்தத் தாலி தெரிகிறது என்றால், நீங்கள் தான் இவளுடைய கணவன். ஏற்றுக்கொள்ளுங்கள் என் மகளை‘‘ என்று அரிச்சந்திரனிடம் அகமகிழ்ந்து சொன்னான்.
அத்தகைய வரம் பெற்றிருந்த சந்திரமதி இப்போதும் தன் தாலியை காண முடிந்த தன் கணவரின் பாதங்களில் அப்படியே விழுந்தாள். தன் அன்பு மனைவியை நிரந்தரமாக பிரிந்து விட்டோமோ என்று தவித்து ஏங்கியிருந்த அரிச்சந்திரனும் கண்ணீர் பொங்க நோக்கினான். அள்ளித் துாக்கிக் கொள்ள தன் கரங்களை நீட்டினான். உடனே கடமை உணர்வு அவனுடைய கரங்களை மடக்கிப் பின்னுக்கிழுத்தது. ‘‘சரி, சரி, எழுந்திரு. போய் உரிய கட்டணம் கொண்டு வா, அதன் பிறகு தகன வேலைகளை பார்த்துக் கொள்ளலாம்’’ என்று மனதை கல்லாக்கிக் கொண்டு அவளை அங்கிருந்து விரட்டும் சாக்கில் முகத்தை திருப்பிக் கொண்டான்.
வேறு வழியின்றி மகனை அங்கேயே கிடத்தி விட்டுப் புறப்பட்டாள் சந்திரமதி. மகன் போய் விட்டான்; பரவாயில்லை, மணாளன் கிடைத்து விட்டான். இதைவிட பத்தினி ஒருத்திக்குப் பேறு வேறு என்ன வேண்டும்? எப்படியும் கட்டண பணத்தை தன் எஜமானரிடம் கேட்டுப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் மயானத்தை விட்டு வெளியேறினாள். வெகுதுாரத்திலிருந்து விஸ்வாமித்திரர் சூழ்நிலைகளை இயக்கிக் கொண்டிருந்தார். மாயையால் பல துன்பங்களை தந்தும் அரிச்சந்திரன் துவளாமல் இருப்பதைக் கண்டு எரிமலை கோபம் அவரை தகித்துக் கொண்டிருந்தது. இப்போது ஒரு வாய்ப்பு. இதையே இறுதி வாய்ப்பாக கொள்ளலாம். அன்பு மனைவியை கண்டு கொண்ட அரிச்சந்திரன் அவளுக்காக சில சலுகைகளை தர முடியும். அவள் கட்டண பணத்தை கொண்டு வர முடியாவிட்டால் அவளுக்காக அவன் விதிகளை சற்று தளர்த்த முடியும். அப்போது மடக்கி விடலாம்’ என விஸ்வாமித்திரர் மேலும் கூர்மையாக சிந்தித்தார். பணம் பெற்று வர புறப்பட்ட சந்திரமதியை காவலர்கள் பிடித்தார்கள். காசி மன்னரின் மகனுடைய கொலைக்கு அவளை பொறுப்பாக்கினார்கள். கள்வர்கள் செய்த அந்தக் கொலையை உணராத அவர்கள், மயானத்துக்கு அவள் எடுத்துச் சென்றது மன்னரின் மகனுடைய சடலத்தை தான் என்று புனைந்து கூறினார்கள். மன்னனும் ஆராய விரும்பாதவனாக அவளுக்கு மரண தண்டனை விதித்தான்.
விஸ்வாமித்திரர் வெற்றிப் புன்னகை புரிந்தார். அவளுடைய மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டியவன் அரிச்சந்திரன்தான். என்ன செய்யப் போகிறான் அவன்? பிரிந்த மனைவியுடன் மீண்டும் ஒன்று சேரும் இந்த நல்ல தருணத்தில் அவனால் தண்டனையை நிறைவேற்ற முடியுமா? அவ்வளவு கடின மனதுடையவனா அவன்? மாட்டான். இறங்கி வருவான். ஏதாவது சொல்லி அந்தக் கொடுமையை தவிர்க்க முயற்சிப்பான். ஆக அவன் பொய் சொல்லக் கூடியவன் தான் என்பதை இந்திர சபைக்கு முக்கியமாக வசிஷ்டருக்கு நிரூபிக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டார் அவர்.
காவலர்களால் அழைத்து வரப்பட்ட சந்திரமதியை பார்த்தான் அரிச்சந்திரன். கண்களின் காதல் பளபளப்பையும் மீறி மனம் கல்லாகியது. ‘‘கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு தலையை குனிந்து கொள், பெண்ணே‘‘ என்றான் அவன். இத்தகைய தண்டனைகளை நிறைவேற்றுவதற்காக என்றே கூர் தீட்டப்பட்டிருந்த வாளை எடுத்தான். சந்தோஷமாக குனிந்து கொண்டாள் சந்திரமதி. வீண்பழி காரணமாக தனக்கு தண்டனை தரப்பட்டதில் அவளுக்கு முதலில் வருத்தம் இருக்கத் தான் செய்தது. ஆனால் சந்தர்ப்ப சாட்சியங்கள் தனக்கு எதிரானதில் தன்னால் எதுவும் செய்ய இயலாத நிலைமைக்கு அவள் அடிபணிந்தாள். அதே சமயம் தனக்கான மரணதண்டனையை நிறைவேற்றுபவன் தன் கணவனே என்ற உண்மை தெரிந்து பெரிதும் மகிழ்ந்தாள். ‘என் கணவன் சத்தியவான். அவனுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். என் மீது சுமத்தப்பட்டது அபாண்டமான பழி தான் என்பதை அவன் நிச்சயம் உணர்வான். ஏனென்றால் அவன் எனக்கானவன், நான் அவனுக்கானவள் என்பது என் பிறப்பின் போதே ஏற்பட்டிருக்கும் தேவவிதி. அவன் கையாலேயே மரணத்தை சந்திப்பதும் தான் எத்தனை பாக்கியம். நான் குற்றவாளியில்லை என்பது அவனுக்கு தெரியும். ஆகவே அவன் வாளை வீசுவதில் இருக்கும் வேகத்துக்கு கடமை என்பதைத் தவிர வேறு எந்த சந்தேக உணர்வும் இருக்காது. நல்லதுதான், நன்றி தெய்வமே’ என வேண்டிக் கொண்டு அகமும், முகமும் மலர கண் மூடினாள்.
கடமையால் வெறித்தப் பார்வை, வாளை உறுதியாக பற்றிய கரங்கள், தீர்க்கமாகத் தரையில் ஊன்றியிருந்த கால்கள், தன் முன்னே குனிந்து தண்டனையை ஏற்கக் காத்திருக்கும் மனைவியை வெறும் ஒரு மரக்கட்டையாகவே பாவித்த மனோபாவம்... அரிச்சந்திரன் வாளை ஓங்கினான்.
  ‘‘இப்போதும் ஒன்றும் குறைந்து விடவில்லை, அரிச்சந்திரா’’  அங்கே தோன்றிய விஸ்வாமித்திரர் அவனிடம் சொன்னார். ‘‘ஒரு பொய் சொல் போதும். எனக்கு யாகத்துக்காக பொன் தருவதாக வாக்களிக்கவில்லை என்று மட்டும் சொல்லி விடு, போதும். நீ இழந்தவற்றை நான் உனக்கு மீட்டுத் தருகிறேன். மயானத்திலிருந்து நீ மீண்டும் மாளிகைக்கு போகலாம்; மனைவி, மகனுடன் சுகித்திருக்கலாம். என்ன சொல்கிறாய்?‘‘ கண்களில் வேட்கையுடன், தான் இனியும் தோற்று விடக் கூடாது என்ற கொந்தளிப்புடன் தன் முனித்தன்மையிலிருந்து பெரிதும் இறங்கி வந்து கெஞ்சினார் அவர்.  
அவரை நேருக்கு நேர் பார்த்தான் அரிச்சந்திரன். ‘அத்தனை பலவீனமானவனா நான்? அப்படிப்பட்டவனாக இருந்திருந்தேனானால், என் முதல் வாக்குறுதியே பொய்யாகத் தான் இருந்திருக்கும்’ என கண்களாலேயே அவருக்கு பதில் சொன்னான். அடுத்தகணம் ஓங்கிய வாளை அப்படியே சந்திரமதியின் கழுத்தை குறி பார்த்து இறக்கினான். திடீரென அந்த மயானம் ஜோதி மயமாயிற்று. இரவு கவியும் அந்த நேரத்திலும், அந்த அதிசயத்தை காண சூரியன் தோன்றி விட்டது போன்ற ஒளி பரவியது. வேகமாக, உறுதியாக இறங்கிய வாள், மென்மையான, மணம் மிகுந்த மலர் மாலையாக மாறி சந்திரமதியின் கழுத்தில் விழுந்து அழகு செய்தது.
விஸ்வாமித்திரர் வெட்கித் தலை குனிந்தார். விண்ணிலிருந்து காயத்ரி மந்திரத்தை பறித்து மக்களுக்கு கொடுத்து அவர்களை உய்வடையச் செய்த தன்னுடைய மாண்பு, மரியாதை எல்லாம் இப்போது மண்ணோடு மண்ணாகியதை கண்டு அவமானப்பட்டார். ‘‘இந்தக் கொடுமைகளுக்கு நான் என்ன பிராயசித்தம் செய்யப் போகிறேனோ‘‘ என்று அப்போதே மனசுக்குள் குமைந்தார்.
    அதற்கு அவருக்கு ராமாவதாரம் வாய்ப்பளித்தது. எந்த இக்ஷ்வாகு வம்சத்து மன்னனான அரிச்சந்திரனைப் பாடாய்படுத்தினாரோ, அதே வம்சத்துத் தோன்றலான ராமனை, அவனுடைய பராக்கிரமத்தை உலகறியச் செய்தார்.  ஆமாம், தன் யாகத்தைக் காக்க அவனை அழைத்துச் சென்ற அவர், அரிச்சந்திரன் – சந்திரமதியைப் பிரித்த பாவத்தைப் போக்கிக் கொள்ளும் வகையில், ராமன் – சீதை திருமணத்தை முடித்து வைத்தார். அப்போதுதான் அவர் மனம் ஆறுதலடைந்தது. சரியான பிராயசித்தம் செய்துவிட்ட மனநிறைவில் அப்போதே ராமாயணத்திலிருந்து விடைபெற்றுக் கொண்ட அவர் இந்திரசபையை நோக்கிச் சென்று விட்டார். அதற்குப் பிறகு ராமாயணத்தில் அவர் இடம் பெறவே இல்லை ஆனால் ஸ்ரீராம பட்டாபிஷேகத்தில் கலந்து கொண்டு நெகிழ்ச்சியுடன் தம்பதியை ஆசிர்வதித்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar