|
ஒருமுறை மகாகவி காளிதாசர் வயல் வெளியே வெயிலில் நடந்து சென்றார். நீண்டநேரம் நடந்த களைப்பால் தாகமாக இருந்தது. சற்று துாரத்தில் கிராமத்துப் பெண் ஒருத்தி குடத்துடன் வருவதைக் கண்டார். காளிதாசர் அவளிடம், ‘‘அம்மா கொஞ்சம் தாகமாக இருக்கிறது. தண்ணீர் தருவாயா?’’ எனக் கேட்டார்! ‘‘தருகிறேன். உங்களைப் பார்த்தால் ஊருக்குப் புதியவராக இருக்கிறீரே...நீங்கள் யார்?’’ எனக் கேட்டாள். மனதிற்குள் தான் பெரிய கவிஞர் என்ற உயர்வு மனப்பான்மை உண்டானது. இவளிடம் அதைச் சொல்ல வேண்டுமா என்ன என எண்ணி, ‘‘ ‘‘நான் ஒரு பயணி அம்மா’’ என்றார்! உடனே அவள், ‘‘உலகில் இரண்டு பயணிகள் தான்...சூரியனும், சந்திரனும். இவர்கள் தான் இரவும், பகலுமாக உலகில் பயணிப்பவர்கள்’’ என்றாள். ‘‘
சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள்’’ என்றார் காளிதாசர். அதற்கு, ‘‘ உலகில் இரண்டு விருந்தினர் தான்! செல்வம், இளமை இரண்டும் நம் வாழ்வில் விருந்தினராக வந்து போய் விடும்’’ என மறுத்தாள். எரிச்சல்பட்ட காளிதாசர் ‘‘நான் ஒரு பொறுமைசாலி’’ என்றார். அதற்கும் அவள், ‘‘அதுவும் இருவர் தான்! ஒன்று பூமி. யார் மிதித்தாலும், எவ்வளவு மிதித்தாலும் தாங்கும். மற்றொன்று மரம். யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக்கொண்டு பழங்கள் கொடுக்கும்’’ என்றாள்.
கோபம் அடைந்த காளிதாசர், ‘‘நான் ஒரு பிடிவாதக்காரன்’’ என்றார். அதற்கும் அவள், ‘‘உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இருவரே. ஒன்று முடி. மற்றொன்று நகம். இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும் பிடிவாதமாக வளரும்’’ என்றாள் காளிதாசருக்கு .
தாகம் அதிகமாக இருந்தது. உன்னிடம் போய் தாகத்திற்கு தண்ணீர் கேட்டேனே என நினைத்தவராக, ‘‘நான் ஒரு முட்டாள்’’ என தனக்குத் தானே மெதுவாக கூறிக் கொண்டார். ஆனாலும் அவள் விடுவதாக இல்லை. அதற்கும் பதில் கொடுத்தாள். ‘‘உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான்! நாட்டை ஆளத் தெரியாத மன்னன் ஒருவன். அவனுக்கு துதிபாடும் அமைச்சன் மற்றொருவன்’’ என்றாள்! மகாகாளிதாசராக செய்வதறியாமல் திகைத்தார். அவளின் காலில் விழுந்து வணங்கினார். ‘‘மகனே எழுந்திரு’’ என்றாள் அவள். நிமிர்ந்து பார்த்த காளிதாசர் மலைத்துப் போனார். சாட்சாத் சரஸ்வதி தேவியாக காட்சியளித்தாள். கைகூப்பி நின்றார். ‘‘காளிதாசா! எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கிறானோ அவனே பிறவியின் உச்சத்தை அடைகிறான். எப்போதும் நீ மனிதனாகவே இரு’’ என்று சொல்லி தண்ணீர் குடத்தை கையில் கொடுத்து மறைந்தாள். காளிதாசரைப் போலத்தான் எல்லாம் தெரியும் என்ற மனநிலையில் நாம் இருக்கிறோம். நம் குழந்தைகள் எதிர் காலத்தில் பணம் சம்பாதிக்கவும், வசதியாக வாழவும் மட்டும் கற்றுக் கொடுக்கிறோம். ஆனால் மனிதனாக, தாய், தந்தை, மனைவி, மக்கள், உற்றார் உறவினருக்கு, தாய் நாட்டிற்கு, வாழ்வளிக்கும் பூமிக்கு நம் பங்களிப்பு என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுத் தருவதில்லை. பெற்றோரை, தாய்நாட்டை, உறவினரை விட்டு விலகியதோடு ஏசி அறையே உலகம், தொலைபேசியே உறவு, பணம் சம்பாதிப்பதே வாழ்க்கை என இளைய தலைமுறையினரை இயந்திரமயமாக்கி விட்டோம். அவர்களை மனிதநேயத்துடன் வாழச் செய்வோம். ‘நீ நீயாகவே இரு. அதாவது மனிதனாகவே இரு. அப்போது தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்’ என்ற நற்பண்பை கற்றுக் கொடுப்போம்.
|
|
|
|