|
விவசாயி ஒருவர் தன் மகனுக்கு தினமும் கதை மூலம் போதனை செய்வார். அவனும் ஆர்வமுடன் கேட்பான். ஒருநாள் கதை சொல்லி முடித்ததும், ‘‘கடவுள் எங்கும் இருக்கிறார். நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவர் பார்த்தபடி இருக்கிறார். அவர் கண்ணில் இருந்து யாரும் தப்ப முடியாது’’ என்றார். ‘‘அப்பா...கடவுள் எல்லா இடத்துலயும் இருக்கார்னு சொல்றீங்க... ஆனா என்னால பார்க்க முடியலையே’’ என்றான் மகன். ‘‘அது அப்படித்தானப்பா... உன்னால் பார்க்க முடியாது. ஆனால் அவர் நம்மை பார்த்துட்டிருக்கார்’’ இந்த விஷயம் சிறுவனின் மனதில் ஆழமாகப் பதிந்தது. அப்படியே துாக்கத்தில் ஆழ்ந்தான். சில ஆண்டுகள் கழிந்தன. அந்த ஆண்டு மழை பெய்யாததால் பஞ்சம் நிலவியது. கிராமத்தைச் சேர்ந்த பலரும் பிழைப்பு தேடி வெளியூர் புறப்பட்டனர். விவசாயியிக்கு கிராமத்தை விட்டுப் போக மனமில்லை. சேமித்து வைத்த தானியங்களைச் சிக்கனமாகச் செலவழித்து குடும்பத்தை நடத்தினார். ஒரு கட்டத்தில் உணவுக்கு வழி இல்லாமல் போனது. பக்கத்து ஊர் விவசாயி ஒருவரின் வயலில் சோளம் அறுவடைக்கு தயாராக இருப்பதைக் கேள்விப்பட்டார். அன்றிரவு ஊர் அடங்கிய பின் அரிவாள், சாக்குப்பையுடன் புறப்படத் தயாரானார். கண் விழித்திருந்த மகன் ‘‘இந்த நேரத்தில் எங்கேப்பா கிளம்பிட்டீங்க?’’ எனக் கேட்டான். விவசாயி மவுனமாக நின்றார். ஆனால் மகன் விடுவதாக இல்லை. தந்தையுடன் கிளம்பினான். இருவரும் நடந்தே பக்கத்து கிராமத்தை அடைந்தனர். சோளம் விளைந்த வயலை அடைந்தனர். அங்கு வரப்பில் நின்றிருந்த மரத்தில் விவசாயி ஏறினார். மகனையும் கையைப் பிடித்து ஏற்றி ஒரு மரக்கிளையில் அமரச் செய்தார். ‘‘என்னப்பா பண்றீங்க?’’ ‘‘உஷ்’’ என சிறுவனை அடக்கிய விவசாயி சுற்றிலும் நோட்டமிட்டார். ஆள் நடமாட்டமே இல்லை என உறுதிப்படுத்தியபின் மெல்லிய குரலில், ‘‘நான் கீழே இறங்கி சோளத்தை அறுக்கப் போகிறேன்.. எல்லா பக்கமும் கவனித்துக் கொண்டேயிரு. யாராவது வந்தா உடனே என்னை உஷார்படுத்து’’ என சொல்லிவிட்டு இறங்கினார். சோளத்தை அறுக்க விவசாயி அரிவாளை ஓங்கிய போது, ‘‘ உஷாரையா உஷாரு’’ என உரக்கக் கத்தினான். பதட்டமுடன் ‘‘என்னாச்சு?’’ என்றார் விவசாயி. ‘‘ஒருத்தர் பாக்குறாருப்பா...’’ பதட்டமுடன் மரத்தின் மீது ஏறிய விவசாயி நாலாபுறமும் பார்த்தார். யாருமில்லை. ‘‘யாருப்பா உன்னைப் பார்த்தா... கண்ணுக்கு யாரையும் தெரியலையே.’’ ‘‘கடவுள் தானப்பா... அன்றைக்கு நீங்க எனக்கு சொன்னீங்கல்ல? கடவுள் எங்கும் இருக்காரு. எப்போதும் நம்மை பாத்துக்கிட்டே இருக்கார்னு. அப்படின்னா, இப்ப நீங்க திருடறதையும் பார்த்துக்கிட்டுதானே இருப்பார்’’ விவசாயி பதில் சொல்ல முடியவில்லை. தலைகுனிந்தபடி வீட்டுக்குப் புறப்பட்டார் சிறுவனுடன்.
|
|
|
|