|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » தேவியர் இருவர் |
|
பக்தி கதைகள்
|
|
முனிவர்களும் தேவர்களும் புடைசூழ முருகப்பெருமான் திருப்பரங்குன்றம் வந்தடைந்தார். சரவணப் பொய்கையில் மீன்களாக இருந்து பின்னர் முனிவர்களாக உருமாறி கந்தப்பெருமானின் உபதேசம் பெற்ற பராசர புத்திரர்கள் ஆறுபேறும் ஆறுமுகப்பெருமானை வணங்கி வரவேற்றனர். திங்களும் செங்கதிரும் மங்குலும் தங்கும்உயர் தென்பரங்குன்றிலுறை பெருமாளே மதியும் கதிரும் தடவும்படி உயர்கின்ற வனங்கள் பொருந்திய வளமொன்று பரங்கிரி வந்தருள் பெருமாளே! மூலாதார ேக்ஷத்திரம் எனப் புகழப்படுகின்ற முதற்படை வீடான பரங்குன்றில் நிறைந்திருந்த அனைவருக்கும் தன் வணக்கத்தைத் தெரியப்படுத்திய பின் இந்திரன் கூறினான். நீண்ட காலமாக நிம்மதியின்றி அரசை இழந்தும், அடிமைப்பட்டும் நாம் இருந்தோம். அதற்குக் காரணமான கர்மவினை பற்றி நாம் அனைவருமே அறிவோம். ஈசனுக்கே அவிர்பாகம் தராமல் அகந்தையுடன் தட்சன் செய்த ஆடம்பர வேள்வியில் பங்கு கொள்ளாமல் நாம் அனைவரும் அதைப் புறக்கணித்திருக்க வேண்டும். தட்சன் வேள்வியில் பங்கு பெற்றதால் நன்றி கொன்ற பாவத்திற்கு ஆளாகி அதற்குத் தண்டனையாகத் தான் நெடுங்காலம் சூரபத்மனிடம் அகப்பட்டு அல்லல் உற்றோம். பின்னர் நம் ஒருமித்த பிரார்த்தனையால் வேலவர் தோன்றினார். நமக்கு விடிவுகாலம் தோன்றியது. நம் அனைவரையும் வாழ வைத்த வடிவேலருக்கு நன்றி பாராட்டும் விதமாக திருப்பரங்குன்றத்தில் கந்தப்பெருமானை மாப்பிள்ளையாக்கி என் மகள் தெய்வானையோடு சேர்த்து வைக்க விரும்புகிறேன். உங்கள் எண்ணம் என்ன? அப்போது திருமால் கூறினார். சரியான முடிவு. அனைவரும் மகிழ்கின்றோம். சரவணப் பொய்கையில் தோன்றிய முருகப்பெருமானின் குழந்தை வடிவைக் கண்டு குதுாகலித்த போது என்னிரு கண்களும் ஆனந்தக் கண்ணீரை அருவியாய்ப் பொழிந்தன. ஆனந்ததத் துளிகள் இரண்டு அணங்குகளாக மாறின. அமுதவல்லி தெய்வானையாகி உன்னிடம் வளர்ந்தாள். சுந்தரவல்லி வள்ளியாக மண்ணுலகில் உள்ளாள். இருவருமே முருக நாமத்தை இடையறாது ஜபித்து எந்தவேளையும் கந்தவேளையே சிந்தை செய்து வாழ்ந்தவர்கள். அதற்கான பலனை இருவருமே அடைய உள்ளார்கள். குறுநகை தெய்வானை மலரோடு உந்தன் குலமகளாக வரும் நினைவோடு திருமணக்கோலம் கொண்ட ஒருவீடு வண்ண திருப்பரங்குன்றம் என்னும் படைவீடு சிவபெருமானும் உமையம்மையும் கந்தனின் கல்யாண கோலம் காண கயிலையை விட்டு திருப்பரங்குன்றம் வந்தனர். மங்கல இசை முழங்க, மந்திரம் விளங்க செம்மைச் குங்குமம் துலங்க பூக்கள் கூந்தலில் இலங்க இன்பச் சங்கமத் திருமணத்தை சந்திக்கும் முருகா! என்றும் பங்கம் இல் தெய்வானைப் பாவையைச் சேர்ந்து வாழி! இந்திரனும், இந்திராணியும் புதல்வியின் பொற்கரங்களை கந்தன் கரங்களோடு இணைத்து வைத்தனர். தீவலம் வருதல், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டுதல், ஏழடி எடுத்து வைத்தல் என முறைமையுடன் மணவிழா அனைவர் முன்னிலையிலும் கண்கொள்ளாக் காட்சியாக நிகழ்ந்தது. நீலச்சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன் வருவான்! குறவர் கூட்டத்தில் சென்று கிழவனாய்ப் புக்குநின்று குருவி ஓட்டித் திரிந்த தவமானை குணமதாக்கிச் சிறந்த வடிவு காட்டிப் புணர்ந்த குமர கோட்டத்து அமர்ந்த பெருமாளே! வள்ளி நாயகியாரைத் தேடிச் சென்று காதல் மணம் புரிந்து கொண்டதை மேற்கண்ட வண்ணம் அருணகிரிநாதர் பாடுகிறார். விண்ணுலகம், மண்ணுலகம் என்ற வேறுபாடு இன்றி தேவர் உலகத்தின் கற்பகச்சோலைக்குச் சொந்தக்காரியான தெய்வானை ஒருபுறமும், மண்ணுலகத்தில் தினைப்புனத்தின் காவற்காரியான வள்ளிநாயகியை மறுபுறமும் தன்னுடன் விளங்க வைத்தார் முருகப்பெருமான். வேந்தர் மகள், வேடுவர் மகள் என்ற வேறுபாடின்றி அன்போடு உருகுபவர் எவராயிருந்தாலும் அவர்கட்கு அருள்பொழியும் கருணைத்தெய்வம் கந்தன் என்பதை தெய்வானை – வள்ளி திருமணம் மூலம் தெரிய வைக்கிறார் கச்சியப்பர். ஆராத காதல் வேடர் மடமகள் ஜீமூதம் ஊர் வலாரி மடமகள் ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும் ஆராயும் நீதிவேலும் மயிலும் எனப் போற்றுகிறது திருப்புகழ்! தொண்டை நன்னாட்டில் வள்ளிமலை சிற்றுாரில் நம்பிராஜன் என்னும் வேடர் தலைவரின் வளர்ப்பு மகளாக வளர்கின்றாள் வள்ளிநாயகி. தோழியருடன் மலைச்சாரலில் தினைப்புனம் காத்து பறவைகள் வராதபடி ஆலோலம் பாடுகிறாள் வள்ளி. நாரதர் மூலம் செய்தி அறிந்த வேலவர் வேடுவர் வடிவில் வள்ளிநாயகியிடம் சென்றார். ‘பெண்ணே! தினைப்புனம் காப்பதற்கு நீயோ? உன் பெருமை வேடுவர்களுக்குத் தெரியவில்லையே! காற்றில் தாள்கள் பறக்காமல் இருக்கக் கல் ஒன்று போதுமே... கனகக் கட்டியையா வைப்பார்கள்? என்னை ஏறிட்டும் பார்க்கக் கூடாதா.. ஒரு வார்த்தை பகரக் கூடாதா... என்னோடு பழகக் கூடாதா! மொழி ஒன்று புகலாய் ஆயின் முறுவலும் புரியாய் ஆயின் விழியொன்று நோக்காய் ஆயின் விரக மிக்கு உழல்வேன்! உய்யும் வழி ஒன்று காட்டாய் ஆயின் மனமும் சற்று உருகாய் ஆயின் பழி ஒன்று நின்பால் சாரும் பராமுகம் தவிர்தி என்றான்! வள்ளிநாயகி சினம் கொண்டாள். அப்போது யாரோ சிலர் அங்கு வருவதை அறிந்து வேலவர் வேங்கை மரமாக உருமாறினார். அடுத்தநாள் முதியவர் வடிவிலே வந்து இங்கித மொழிகளைக் கூறினார். வள்ளி சீறினாள். அப்போது விநாயகர் யானையாக வர குறவள்ளி பயந்து முதியவரைக் கட்டிக் கொள்ள, முதியவர் முருகனாகத் தோற்றமளித்தார். தான் சுந்தரவல்லி – அமுதவல்லியோடு தோன்றியவள் என்றும் சுய உணர்வு பெற்றாள் வள்ளி. நாவலர் பாடிய நுாலிசையால்வரு நாரதனார் புகல் குறமாதை நாடியே கானிடை கூடிய சேவக! நாயக மாமயில் உடையோனே! வேடுவர் குலத்தினர் மகிழ் ‘வள்ளி வடிவேலன்’ திருமணம் விமரிசையாக நடைபெற்றபின் திருத்தணிகையில் திருமணக் கோலத்தை அனைவரும் கண்டு ஆனந்தித்தனர். சேவற்கொடி தாங்கி, மயில் வாகனத்தில் அமர்ந்து, வேலாயுதம் ஏந்தி தேவியர் இருவருடன் கயிலை மலையை அடுத்த கந்தகிரியிலே முருகப்பெருமானின் திவ்ய தரிசனம் கண்டு தேவாதி தேவர்கள் வணங்கினர். ஆதிசிவனும், அம்பிகையும், அனைத்து அண்டங்களிலும் நிறைந்தவர்களும் ஆனந்தம் கொள்ள ஞான முருகன் நடனம் புரிந்தார். ஆஹா! முருகன் ஆடுகிறான்! – அவன் அற்புதமாக ஆடுகிறான்! போகா வினையும் துாளாகும்படி பூங்கையினிலே வேலாடும்படி ‘கூகா’ என்றே கூற்றுவன் அலற மாகாளியும் அவன் மாண்பினை உணர கோழிக்கொடியும் ஆட – ஒரு குறுமுனி தாளம் போட ‘வாழி இவ்வேலன் நடனம்’ எனவே வானவர் கூட்டம் பாட பாம்பு நெளிந்து துடிக்க – மயில் பாதம் அதன்மேல் நடிக்க ‘ஓம்’ பிரணவம் போல் மயிலின் தோகை ஒளி வட்டத்தை விரிக்க கருத்த நிறத்த குறத்தி வள்ளி களித்து ஒருபுறம் மகிழ சிரித்த பூக்கள் நிறைத்த கூந்தல் தேவானையுமே திகழ ‘நெற்றிக் கண்விழி பெற்றவனே’ என சுற்றிப் பல்லோர் புகழ முற்றும் நடுவும் முதலும் ஆகி முழுமைத் தத்துவம் நிகழ ஆஹா! முருகன் ஆடுகிறான்! – அவன் அற்புதமாக ஆடுகிறான்!
|
|
|
|
|