|
மாற்றுத் திறனாளி ஒருவர் இருந்தார். அவருக்கு காது கேட்காது. கடவுள் மீது கோபம் கொண்டு கோயிலில் முறையிட வந்தார். பிரகாரத்தைச் சுற்றும் போது இடதுகை இல்லாத ஒருவர் நந்தவனத்தில் பூப்பறிப்பதைக் கண்டார். ‘‘ எனக்கு காது கேட்கவில்லை; உங்களுக்கு ஒரு கை இல்லை. நம்மை மட்டும் கடவுள் இப்படி வஞ்சித்தது ஏன்?’’ என வருந்தினார். அதற்கு ஒருகை மனிதர், ‘‘ உங்களால் பூ பறிக்க முடியும். உங்கள் குரலை என்னால் கேட்க முடியும். அதோ...வாசலில் பிச்சை எடுப்பவருக்கு பார்வையும் கிடையாது. காதும் கேட்காது. நமக்கும் கீழே கோடிபேர் இருக்கிறார்கள். நம் பாடு எவ்வளவோ தேவலை’’ என்றார். ‘‘ நன்றாய் இருப்பவர்கள் பலர் இருக்க, நம்மை குறை உள்ளவர்களோடு நாம் ஏன் ஒப்பிட வேண்டும். நாமும் நல்லபடியாக பிறந்திருக்கலாமே...’’ என்றார் காது கேளாதவர். ஒருகை மனிதர் சிரித்தபடி, ‘‘ இந்தக் கோயில் மடப்பள்ளியின் சர்க்கரை பொங்கல் வெகுபிரசித்தம். அதை தயாரிப்பவர் பார்ப்பதற்கு அழகாக இருப்பார். பார்ப்பதற்கு குறையேதும் தெரியாது. ஆனால் சர்க்கரை நோயாளி என்பதால் ஒரு வாய் பொங்கலைக் கூட சாப்பிட மாட்டார். நாம் கொடுத்து வைத்தவர்கள். எவ்வளவு வேண்டுமானாலும் இனிப்பை ருசிக்கலாம். குறையே இல்லாத மனிதன் என ஒருவன் உலகிலேயே கிடையாது. இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்பவனே நிம்மதியாக வாழ முடியும்’’ எனத் தெளிவுபடுத்தினார்.
|
|
|
|