|
கலியுக வரதனாகவும், கண்கண்ட தெய்வமாகவும் அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் ஆறுமுகப் பெருமானின் அற்புதமான வரலாற்றைத் தொடர்ந்து படித்த வாசகர்களுக்கும், இனி புத்தக வடிவில் படிக்க இருக்கும் பெருமக்களுக்கும் ஏற்படப் போகும் பலன்கள் என்னென்ன? திருமுருகப் பெருமானைச் சந்ததமும் வந்தனை செய்யும் பக்தர்களுக்கு என்னென்ன கிடைக்கும் என்று ஒரு பட்டியலை தருகிறது ஏழுவயதுக் குழந்தை ஒன்று. ஏழே வயதுக் குழந்தையா... அக்குழந்தையால் எப்படி பாட முடிந்தது என எண்ணுகிறீர்களா? ‘அருள்பெறில் ஒரு துரும்பும் ஐந்தொழில் புரியும்’ என்று சொன்ன ராமலிங்க அடிகள் தான் அக்குழந்தை. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கந்தகோட்டத்தில் எழுந்தருளியிருக்கும் பாலசுப்பிரமணியரின் அருள் பெற்று ராமலிங்கக்குழந்தை ஏழு வயதில் தெய்வமணிமாலை பாடியருளினார். முப்பது பாடல்கள் கொண்ட அத்தெய்வமணி மாலையில் ‘வள்ளலார்’ மொழிகின்றார். நீர் உண்டு! பொழிகின்ற கார் உண்டு! விளைகின்ற நிலன் உண்டு! பலனும் உண்டு! நிதி உண்டு! துதி உண்டு! மதி உண்டு! கதி கொண்ட நெறி உண்டு! நிலையும் உண்டு! ஊர்உண்டு! பேர் உண்டு! மணி உண்டு! பணிஉண்டு! உடைஉண்டு! கொடையும் உண்டு! உண்டுண்டு மகிழவே உணவுண்டு! சாந்தம்உறும் உளம் உண்டு! வளமும் உண்டு! தேர் உண்டு! பரி உண்டு! கரி உண்டு! மற்றுள்ள செல்வங்கள் யாவும் உண்டு! முருகப்பெருமானை வழிபடுபவர்கள், அவரின் சரித்திரத்தைப் படிப்பவர்கள் உடல்நலம், செல்வ வளம், ஆன்ம பலம் பெறுவது நிச்சயம் என்று காஞ்சி மகாபெரியவர் உறுதியாகக் கூறுகின்றார். * ஆறுதலை அளிக்கும் ஆறுதலைக்குமரனின் சிறப்புக்கள் பலவும் ஆறு, ஆறு என அமைந்திருப்பது ஒரு ஆச்சர்யம் தானே! * வைகாசி விசாகம் ஆறுமுகனின் அவதார நன்னாளாக அனுசரிக்கப்படுகிறது. விசாகம் என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது. * சிவபெருமான் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய ஆறு நெருப்பு பொறிகள் சரவணப்பொய்கையில் ஆறு தாமரை மலர்கள் மீது ஆறு குழந்தைகளாகத் தவழ்ந்தன. கார்த்திகை மாதர்கள் ஆறுபேர் எடுத்து வளர்த்தனர். * அருள்வழங்கும் முருகனின் தலங்கள் ஆறாகவே அமைந்துள்ளன. தெய்வானையைத் திருமணம் புரிந்த திருப்பரங்குன்றம் சூரபத்மனை வெற்றி கண்டபின் எழுந்தருளிய திருச்செந்துார் உலகையே மயிலேறி வலம் வந்த பின் காட்சி தரும் பழநி பிரணவப் பொருளைத் தந்தைக்கே உபதேசித்த சுவாமிமலை வள்ளிநாயகியைத் தேடிச் சென்று மணம் புரிந்த திருத்தணிகை அவ்வை மூதாட்டிக்கு சுட்டபழம் தந்த சோலைமலை * முருகனின் மூலமந்திரமும் ‘சரவணபவ’ என்னும் ஆறெழுத்தாகவே அமைந்துள்ளது. * முருகப்பெருமானுக்கு உகந்தது ஆறாவது திதியான சஷ்டி. ‘சஷ்டியை நோக்கச் சரவண பவனார்’ என்றே தேவராய சுவாமிகள் கந்தசஷ்டிக் கவசத்தைத் தொடங்கியுள்ளார். * ஆறாவது கிழமையான வெள்ளிக்கிழமையில் விரதமிருந்து முருகனை வழிபடுவதை சுக்கிரவார விரதம் எனச் சிறப்பிக்கின்றன சாஸ்திரங்கள். * சிவபெருமான் கல்லால மரத்தடியில் சனகாதி முனிவர்கள் நால்வருக்கு பராசர முனிவர்களின் புத்திரர்களான தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி என அறுவருக்கு கந்தர் உபதேசித்துள்ளதைக் கந்தபுராணம் காட்டுகிறது. * திருச்செந்துாரில் ஞானமுருகனின் நடனம் கண்டு அருணகிரிநாதர் பாடியுள்ள ‘தண்டையணி வெண்டையம்’ எனத் தொடங்கும் பாடலில் முருகப்பெருமான் சரணாரவிந்தங்களில் சப்திக்கும் அணிவகைகள் ஆறு என்றே குறிப்பிடுகின்றார். தண்டை, வெண்டையம், கிண்கிணி, சதங்கை, கழல், சிலம்பு என்பன அவை. * ஆதிசங்கரர் வகுத்த சைவம், வைணவம், காணாபத்யம், கவுமாரம், சாக்தம், சவுரம் என்ற ஆறுசமய நெறியினரும் போற்றும் தெய்வமாக முருகப்பெருமான் விளங்குகிறார். ‘அறுசமய சாத்திரப் பெருளோனே’ ‘சமய நாயக’ என்றே கந்தவேளைப் போற்றிப் புகழ்கிறது திருப்புகழ். * முருகப்பெருமானைத் தொழுதால் ஆறு கடவுளர்களின் திருவருள் ஒருசேரக் கிடைக்கிறது. எப்படி எனக் கேட்கிறீர்களா? ‘முருக’ என்பதில் முகுந்தன், ருத்ரன், கமலன் இணைந்துள்ளனர். முகுந்தனின் மார்பில் லட்சுமி, ருத்ரனின் இடபாகத்தில் பார்வதி, கமலனின் நாவில் சரஸ்வதி எனவே தான் கவியரசர் கண்ணதாசன் பாடுகிறார். கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே. * குமரவேளைக் கொண்டாடி மகிழும் பண்டிகைகளும் ஆறு! தமிழ் மாதங்களின் வரிசைப்படி பார்த்தால் முருகனின் அவதார நாள் வைகாசி விசாகம் முதலில் வருகிறது. தொடர்ந்து ஆடிக்கார்த்திகை, கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம் * வடிவேலன் புகழ் பாடுவதற்கென்றே வந்த வாக்கிற்கு அருணகிரியாரும் வழங்கிய நுால்களின் எண்ணிக்கையும் ஆறுதான்! திருப்புகழ், திருவகுப்பு, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, வேல் மயில் சேவல் விருத்தம் * அருணகிரியாரையே தம் ஆசானாகப் பாவித்து பாம்பன் சுவாமிகள் பாடிய பாடல்கள் 6666 * முருகப்பெருமானின் சீர்த்தியும், கீர்த்தியும், நேர்த்தியும் பூர்த்தியாகப் பொருந்தியுள்ள இக்கந்த புராணமும் ஆறு காண்டங்களாகவே அமைந்துள்ளன. பூமிக்கோர் ஆறுதலையாய் வந்து சரவணப் பொய்கைதனில் விளையாடியும் புனிதர்க்கு மந்திர உபதேச மொழி சொல்லியும் போதனைச் சிறையில் வைத்தும் தேமிக்க அரிஹர பிரம்மாதிகட்கும் செருக்கு முடியா அசுரனைத் தேகம் கிழித்து வடிவேலினால் இருகூறு செய்து அமரர் சிறை தவிர்த்தும் நேமிக்கும் அன்பர் இடர்உற்ற பொழுதினில் நினைக்கும் முன் வந்து உதவியும் நிதமும் மெய்த்துணையாய் விளங்கலால் உன்னை நிகரான தெய்வம் உண்டோ? என வாயார வாழ்த்துவோம். மனதார வணங்குவோம்.
பொன்னும் பொருளும் போகமும் அன்பும் அருளும் அறனும் ஆகிய அரிய வகை நலங்கள் ஆறினையும் நம் அனைவர்க்கும் அவர் வழங்குவார்! |
|
|
|