|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » நாடக நடிகையின் பக்தி |
|
பக்தி கதைகள்
|
|
அன்று எப்படியாவது அன்னையின் கோயிலுக்குச் சென்றுவிட வேண்டும் என்ற உறுதியுடன் நடக்கத் தொடங்கினேன். வீட்டிற்கு அருகில் ஒரு பரபரப்பான பகுதியில் ஒருத்தி நோட்டீஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவளை உதாசீனப்படுத்தி விட்டு மேலே நடந்த போது என்னைத் தடுத்தாள். கோபத்துடன் திரும்பிய போது, “இந்த நாடகம் நன்றாக இருக்கும்” “நான் எங்க போயிக்கிட்டு இருக்கேன்னு தெரியுமா?” “தெரியுமே! நீ செல்லும் அந்தக் கோயிலில் இருப்பவளே சொல்கிறேன். கோயிலுக்குப் போகாதே. இந்த நாடகத்திற்குப் போ என்று” “தாயே” “நாடகத்தில் முக்கிய வேடமேற்று நடிப்பவள் என் பரம பக்தை. ஒரு குழப்பத்தில் இருக்கிறாள்” “நான் என்ன செய்ய…” “அங்கே போ. மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்” “இந்த ஆடையை மாற்றிக்கொண்டு நல்ல ஆடையாக’’ “என்னைப் பார்க்கக் கோயிலுக்கு இந்த ஆடையில் வரலாமாம். நடிகையைப் பார்க்க ஐயாவிற்கு நல்ல ஆடை தேவைப்படுகிறதோ?” குனிந்து அவள் காலைத் வணங்கி விட்டுக் கிளம்பினேன். நாடகத்திற்கு அனுமதிச் சீட்டு வாங்கும் இடத்தில் நீண்ட வரிசை இருந்தது. கையில் காசும் அவ்வளவாக இல்லை. நான் சீட்டு வாங்கி உள்ளே போய் அமர்வதற்குள் நாடகம் ஆரம்பித்துவிடுமே! முதல் மணி அடித்துவிட்டார்கள். எங்கிருந்தோ ஒரு போலீஸ்காரி தோன்றினாள்.. “இங்கே ஏன் நின்னுக்கிட்டு இருக்கீங்க? வாங்க என்னோட” அவளைப் பின்தொடர்ந்தேன். ஆயிரம் பேர் அமரக்கூடிய அரங்கம் நிறைந்திருந்தது. முதல் வரிசையில் நடுநாயகமாக இருந்த இருக்கையில் என்னை அமரவைத்தாள். சில நிமிடங்களில் நாடகம் தொடங்கியது. ஒரு இளவரசிக்கும், ஏழைக் கவிஞனுக்கும் காதல் என்ற அம்பிகாபதி காலத்துக் கதை. இளவரசியாக நடித்தவள் அற்புதமாக நடித்தாள். அவள் காதல் வசனம் பேசியபோது எல்லோரும் அவளைக் காதலித்தார்கள். அவள் அழுதபோது எல்லோரையும் அழ வைத்தாள். இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. திரை போட்டபின் அனைவரும் வெளியேறத் தொடங்கினார்கள். அரங்கம் ஏறக்குறைய காலியான சமயத்தில் அரிதாரம் பூசிய ஒரு நடிகன் என்னிடம் வந்தான். “உங்கள எங்க தலைவி கூட்டிக்கிட்டு வரச் சொன்னாங்க” அவனைப் பின் தொடர்ந்து திரைக்குப் பின்னால் இருந்த ஒப்பனை அறைக்குச் சென்றேன். இளவரசியாக நடித்தவள் என்னைப் பார்த்து கைகூப்பினாள். அமர்ந்துகொண்டோம். “ஐயா நான் பாரதி. பச்சைப்புடவைக்காரி எனக்கு நிறையக் கொடுத்திருக்காய்யா. நல்ல கணவர், அருமையான குழந்தைங்க. அவருக்கு அரசு உத்தியோகம். பசங்க நல்லாப் படிக்கறாங்க. எங்க மாமியார் அம்மா மாதிரி என்னப் பாத்துக்கறாங்க. நாடக நடிகையா எனக்கு நல்ல பேரு. ஊரு ஊராப் போய் நாடகம் போடறோம்யா. நல்ல வருமானம் வருது. சொந்த வீடு இருக்கு. எந்தக் கஷ்டமும் இல்ல. நான் உள்ள வரும்போது நீங்க வரிசைல நிக்கறதப் பாத்தேன். உடனே ஆள் அனுப்பி உங்கள முன்னால உக்காரவச்சேன். என் கதையக் கேளுங்கய்யா. முதல்ல மீனாட்சிய தெனமும் பத்து நிமிஷம் கும்பிட ஆரம்பிச்சேன். இப்போ பத்து நிமிஷம்கூட அவ நெனைப்பு இல்லாம இருக்கமுடியல. மனசு வேற எதுலயும் ஒட்ட மாட்டேங்குது. எல்லாத்தையும் விட்டுட்டு மீனாட்சியையே நெனச்சிக்கிட்டு பொழுதக் கழிக்கலாம்னு தோணுதுங்கய்யா. உங்க முன்னால விரதம் எடுத்துக்கிட்டு சொந்த பந்தங்கள், தொழில் எல்லாத்துக்கும் மொத்தமா முழுக்குப் போட்டுட்டு தவ வாழ்க்கையத் தொடங்கலாம்னு இருக்கேன்யா.” சுவரில் மாட்டப்பட்டிருந்த மீனாட்சி படத்தைப் பார்த்தேன். “மனுஷங்களோட வாழணுங்கறதுக்காகத்தான் பச்சைப்புடவைக்காரி நமக்கு மனுஷப் பிறவியக் கொடுத்திருக்கா. கூட வாழற மனுஷங்க மீது அன்பு காட்டறதுதான் இருக்கறதுலேயே பெரிய தபசும்மா. மனித உறவுகள் இல்லாத தவ வாழ்க்கைய அந்த மகமாயி விரும்ப மாட்டாம்மா” “நான் என்னதான் செய்யறது” “ரெண்டு விஷயங்கள்ல கவனமா இருங்க. ஒண்ணு உடமைகள். இன்னொன்று உறவுகள். உடமை மீது எந்த பற்றுதலும் வைக்காதீங்க. நீங்க நியாயமாச் சம்பாதிச்ச எல்லா உடைமைகளையும் நல்லா ஆண்டு அனுபவியுங்க. ஆனா எது மீதும் அளவுக்கதிகமா ஆசை வைக்காதீங்க” “உறவுகள்?” “நீங்க முந்தின பிறவிகள்ல செஞ்ச புண்ணியம் உங்களுக்கு இந்தப் பிறவியில அருமையான உறவுகள் கெடச்சிருக்கு – அன்பான கணவர், அருமையான குழந்தைகள், நல்ல மாமியார், உங்களப் பெத்தவங்க, உங்க கூடப் பொறந்தவங்க, எல்லாத்துக்கும் மேல உங்கமேல உயிரையே வச்சிருக்கற உங்க ரசிகர்கள்.. “எல்லாரயும் நேசிங்க.. உங்க உயிரக் கொடுத்து நடிங்க. உங்க குடும்பத்துமேல பாசத்தைக் கொட்டுங்க. பதிலுக்கு யார்கிட்டயும் எதையும் எதிர்பாக்காதீங்க. ஆன்மிகத்தின் சாரமே மனித உறவுகள்தான். உரிய காலத்துல அந்த உமா மகேஸ்வரி உங்களத் தன்னோட இணைச்சிப்பா. அதுக்கு என் உயிரப் பணயம் வச்சி உத்தரவாதம் தரேன்” “மனித உறவுகள்ல சில சமயம் சலிப்பு வந்துருது” “ரெண்டு மணி நேரம் நாடகம் நடந்தது. பிரமாதமா நடிச்சீங்க. நடுவுல களைப்பு வந்தா என்ன செய்வீங்க? இந்த ஒப்பனை அறைக்கு வருவீங்க. ஒரு காபி சாப்பிடுவீங்க. கொஞ்சம் டச்சப் செஞ்சிக்கிட்டு அடுத்த காட்சிக்குத் தயாராயிருவீங்க இல்லையா அதுபோல மனித உறவுகள்ல சலிப்புத் தட்டினா அவ கோயிலுக்குப் போங்க. இல்ல அவ படத்தைப் பாத்துக்கிட்டுப் பத்து நிமிஷம் உக்காந்திருங்க. உங்களுக்குப் புதுத் தெம்பு வந்துரும். அப்பறம் திரும்பப் போய் மனித உறவு நாடகத்துல உணர்ச்சி பூர்வமா நடிங்க. மனித உறவுகள்ங்கறது நீங்க நடிச்சேயாக வேண்டிய நாடகம். கடைசி மூச்சு உள்ளவரைக்கும் உறவு நாடகம் தொடரும்.. ஒரு கட்டத்துல நாடகம் முடிஞ்சிரும். திரை போட்ருவாங்க. அதுக்கப்பறம் நீங்க நடிக்க வேண்டாம். வீட்டுக்குப் போய் உங்க தாய்மடியில நிம்மதியா ஓய்வெடுக்கலாம்” அவள் கண்கள் நிரம்பிவிட்டன. “நெஜமாவா சொல்றீங்க? பச்சைப்புடவைக்காரிக்கு உண்மையிலேயே என் மீது அவ்வளவு ஆசையா?” “ரெண்டு மாசம் கழிச்சி கோயிலுக்குப் போகலாம்னு கெளம்பினவன நீ கோயிலுக்கு வரவேண்டாம்னு சொல்லி உங்களப் பாக்க அனுப்பி வச்சவ அன்ப என்னன்னு சொல்றது?” “அம்மா” என்று அலறியபடி மீனாட்சியின் படத்தை நோக்கி ஓடினாள் பாரதி. அந்த இடத்தைவிட்டு வெளியேறினேன். வாசல் அருகில் என்னை உள்ளே அழைத்துக்கொண்டு போன போலீஸ்காரி இருந்தாள். “அழகாக வழிகாட்டிவிட்டாயே” “உங்களை நீங்களே புகழ்ந்துகொள்ளாதீர்கள். வழிகாட்டியது நீங்கள்” “நடிகைக்கு இளம் வயது. நிறைய மனித உறவுகள். நிறைய பொறுப்புகள். உனக்கோ வயதாகிவிட்டது. பொறுப்புக்கள் என்று பெரிதாக எதுவும் இல்லை. என்னை நினைத்துத் தவம் செய்யாமல் இன்னும் ஏன் மனித உறவுகளின் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறாய்” “இந்தக் கொத்தடிமையோடு வார்த்தை விளையாட்டு தேவையா தாயே” “என்னப்பா சொல்கிறாய்” “உங்களையே நினைத்தபடி உங்கள் கோயிலுக்கு நடக்கத் தொடங்கியவனை ‘நீ என்னை வணங்குவதைவிட அந்தப் பெண்ணிற்கு வழிகாட்டுவதுதான் முக்கியம்’ என்று பாரதியிடம் அனுப்பிவைத்தீர்கள். மகேஸ்வரியை வணங்குவதைவிட மனிதர்களிடம் அன்புகாட்டுவதுதான் உச்சகட்ட ஆன்மிகம் என பாடம் கற்றுக்கொடுத்தீர்கள். என்னை மனிதர்களுக்கு நடுவில் மனிதனாகப் படைத்தது மனிதர்களிடம் அன்புகாட்டத்தானே. உங்கள் கொத்தடிமை என்ற நிலை பிசகாமல் மனிதர்களை நேசிக்கத்தானே என்னை ஆளாக்கினீர்கள்” “வென்றுவிட்டாய் மகனே” “விளையாட்டிற்குக்கூட அப்படிச் சொல்லாதீர்கள், தாயே! வெற்றி என்றென்றும் உங்களுக்குத்தான். உங்களிடம் தோற்பதுதான் இந்த அடிமை நாய்க்குக் கிடைக்கும் மிகப் பெரிய வெற்றி. அது போக வெற்றி, தோல்வி என்ற பேச்சு வர குறைந்தபட்சம் இரண்டு போட்டியாளர்களாவது வேண்டுமல்லவா? இருப்பதெல்லாம் நீங்கள் மட்டும்தான் என்னும்போது வெற்றியும் தோல்வியும் எங்கிருந்து வரும்” கலகலவென்று சிரித்தபடி காற்றோடு கலந்தாள் என்னைக் கொத்தடிமையாகக் கொண்டவள்.
|
|
|
|
|