|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » வியாசனாகிய நான்... |
|
பக்தி கதைகள்
|
|
இதிகாசம் என்றால் ‘சமகாலத்திலேயே எழுதப்படுவது’ என்று பொருள். நான் எழுதிய மகாபாரதத்தை இதிகாசம் என்பதற்குக் காரணம் மகாபாரத நிகழ்வுகள் நான் வாழ்ந்த காலத்தில் நடந்தவை. சொல்லப்போனால் நான் மகாபாரதத்தை எழுதியவன் மட்டுமல்ல, அதன் ஒரு மிக முக்கியமான பாத்திரமும் கூட. மகாபாரதத்தை அதிகம் அறியாதவர்களுக்கு நான்தான் பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் முன்னோடி என்பது வியப்பாக இருக்கலாம். இப்போது ஒரு மகாபாரத பாத்திரத்தைக் குறித்து சில தகவல்களை அளிக்கப் போகிறேன். அந்தப் பாத்திரம் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள். ‘இது ஒரு மகாபாரத நிகழ்வு. அந்த இளம் பெண்ணுக்குத் திருமணமாவதற்கு முன்பாகவே பிறந்தவன் அவன். அவன் தந்தை பெரும்புகழ் பெற்றவர். கன்னியாக இருக்கும் நாளிலேயே பிறந்த குழந்தையை அவள் கைவிட்டாள். பின்னர் அவளுக்கு ஒரு மன்னருடன் திருமணமானது. பின்னாளில் அந்தத் தாய் அவனை இனம் கண்டு கொண்டு வந்து அவனிடம் வரம் வேண்டினாள்’’ யார் அந்தக் கதாபாத்திரம் என்றால் குந்தியின் மகன் கர்ணன் என்பது உங்கள் விடையாக இருக்கலாம். ஆனால் மேற்கூறிய நிகழ்வுக்கு அப்படியே பொருந்தும் மற்றவன் வியாசனாகிய நானும்தான்! வேதங்களைத் தொகுத்து வழங்கியதால் வேதவியாசர் என்றும் என்னை அழைப்பதுண்டு. எனக்கு கிருஷ்ண த்வைபாயனர் என்ற பெயரும் உண்டு. இதன் காரணத்தை அறிய வேண்டுமானால் என் பிறப்பின் பின்னணியைக் கூற வேண்டியிருக்கும். என் தாயின் பெயர் சத்யவதி. அவள் மீனவத் தலைவனான துரைராஜ் என்பவரின் மகள். ஒருநாள் அவள் ஒரு முனிவரைத் தன் படகில் ஏற்றிக் கொண்டு யமுனை ஆற்றைக் கடந்து கொண்டிருந்தாள். அந்த முனிவர் பராசரர். பராசரர் புராணங்களில் முதலாவதாக அறியப்படும் விஷ்ணு புராணத்தை எழுதியவர். அவர் ஒரு பெரும் ஞானி. ஜோதிடத்தில் புலமை பெற்றவர். பராசர ஸ்மிருதி என்று அவர் எழுதிய நுால் இன்றளவும் ஜோதிடர்களால் பெரிதும் மதிக்கப்படுகிறது. அப்படி படகில் அவர் சென்று கொண்டிருந்த போது அவர் மனதில் ஒரு உண்மை உறைத்தது. மிக மிகச் சிறப்பான ஒரு முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் அந்த நேரத்தில் உருவாகும் கரு உலகுக்கு ஒரு மாபெரும் விடிவெள்ளியாக இருக்கும் என்பதும் அது திருமாலின் அம்சமாகவும் இருக்கும் என்பதையும் அவரால் உணர முடிந்தது. கூடவே படகோட்டும் பெண் மீது அவருக்கு ஒரு ஈர்ப்பும் வந்தது. தனக்கு இப்படியொரு மோகம் வந்தது குறித்து அவருக்கு சிறிது வியப்பும் உண்டானது. நெருங்கிக் கொண்டிருக்கும் முகூர்த்தத்தில் பிறக்கவிருக்கும் தெய்வக் குழந்தைக்குத் தான் தந்தையாக வேண்டும் என்பதுதான் கடவுளின் லீலை என்பதைப் புரிந்து கொண்டார். யமுனை நதியின் ஒரு தீவில் படகை நிறுத்தச் சொன்னார். அந்த மீனவப் பெண்ணிடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார். ‘திருமணம் ஆகாத நிலை. ஆனால் எதிரில் இருக்கும் முனிவரோ பெரும் சக்தி படைத்தவராக தோன்றுகிறார். ஒருவேளை தன்னை சபித்து விடுவாரோ’ என யோசித்த சத்தியவதி சம்மதம் தெரிவித்தாள். அடுத்த கணம் பராசரரின் ஞான அம்சம் சத்யவதிக்குள் புகுந்தது. உடனடியாக ஒரு குழந்தை பிறந்தது. ஆம், உடனடியாகத்தான். அந்தக் குழந்தைதான் வியாசனாகிய நான் என்பதை இந்நேரம் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள். துவைபாயனர் என்றால் தீவில் பிறந்தவன் என்று பொருள். ‘கிருஷ்ண’ என்றால் கருத்த நிறம் கொண்டவன் என பொருள். கருத்த நிறம் கொண்டவன். யமுனை நதியின் ஒரு தீவில் பிறந்தவன். எனவே கிருஷ்ண த்வைபாயனர் என்றும் என்னை அழைக்கத் தொடங்கினார்கள். பிறந்த உடனேயே வாழ்வின் தத்துவத்தை என்னால் உணர முடிந்தது. கானகத்துக்குச் சென்று பெரும் தவம் செய்ய விரும்புவதாக நான் கூறியதும் என் அன்னை அனுமதித்தார். ஆனால் ஒரு நிபந்தனையும் விதித்தார். எப்போது தேவைப்பட்டாலும் அவர் முன் நான் தோன்ற வேண்டும் என்றார். ஏற்றுக் கொண்டு வியாச வசுதேவர் என்ற முனிவரிடம் தீட்சை பெற்றுக் கொண்டு தவம் புரியச் சென்றேன். என் தாய் பின்னர் சாந்தனு என்ற மன்னரை மணந்தாள். சாந்தனுவுக்கு ஏற்கவே கங்காதேவியின் மூலம் பீஷ்மர் பிறந்திருந்தார். என் தாய்க்குப் பிறந்த மகனின் பெயர் விசித்திரவீரியன். தொடக்க காலத்திலிருந்தே அவன் பலவீனமானவனாக இருந்தான். ஒரு கட்டத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தும் விட்டான். அவனது மனைவியர் அம்பிகை, அம்பாலிகை இருவரும் விதவை ஆகி விட்டனர். ஆக ‘குரு’ வம்சத்துக்கு வாரிசு என்பதே இல்லாமல் போன நிலைமை. இந்த நிலையை எப்படி மாற்றலாம் என்று யோசித்தாள் என் தாய் சத்யவதி. அக்காலத்தில் ஒரு மரபு நிலவி வந்தது. ராஜ்ஜியத்துக்கு வாரிசு இல்லாத நிலை ஏற்பட்டால் ரிஷிகள் அல்லது அந்தணர்களின் மூலம் ராஜ வம்சத்து விதவைகளைக் கருவுற வைத்து வம்சம் தழைக்கச் செய்வது. என் தாய் முதலில் பீஷ்மரை அணுகி தன் மருமகள்களில் ஒருவருடன் இணையுமாறு கோரினார். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. அப்போது என் தாய்க்கு என் நினைவு வந்தது. என்னை அணுகி குருவம்சம் தழைப்பதற்கு வழிசெய்ய வேண்டும் என்றாள். தாயின் தொடர்ந்த கோரிக்கை காரணமாக இதற்கு ஒத்துக் கொண்டேன். பெரு முயற்சிக்குப் பின் அம்பிகை இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொண்டாள். தனியறையில் அவள் இருக்க அறைக்குள் நான் நுழைந்தேன். நான் ஒரு முனிவர் என்பதால் அழகற்ற தோற்றம் கொண்டிருந்தேன். என் கருத்த நிறம், சுருண்ட முடி, தாடி இவற்றைப் பார்த்து அம்பிகை தன்னுடைய கண்களை மூடிக்கொண்டாள். மூடிக்கொண்ட கண்களை அன்றிரவு முழுவதும் அவள் திறக்கவே இல்லை. அறையிலிருந்து வெளியே வந்ததும் என் தாய் என்னைப் பார்த்து ‘’உன் மூலம் அம்பிகைக்குப் பிறக்கும் குழந்தை ஒரு சிறந்த வாரிசாக இருப்பானா’’ என்று கேட்டாள். அதற்கு நான் ‘’ஆயிரம் யானைகளுக்கு நிகரான பலசாலியாக அவன் இருப்பான். புத்திசாலியாகவும் இருப்பான். ஆனால் அம்பிகை நடந்துகொண்ட விதம் காரணமாக அந்த குழந்தை பார்வையற்றவனாக பிறப்பான்’’ என்றேன். அதே போல திருதராஷ்டிரன் பிறந்தான். இதைக் கண்டு என் தாய் துக்கம் அடைந்தார். மீண்டும் என்னிடம் வந்தார். ‘’பார்வையில்லாத ஒருவன் எப்படி ராஜ்யத்தை ஆள முடியும்? அம்பிகையால் உன்னைக் காண முடியவில்லை என்றால் என்ன? அம்பாலிகை மூலம் குரு வம்சத்தை தழைக்கச் செய்’’ என்றார். அம்பாலிகையை இதற்கு சம்மதிக்க வைத்தார். நான் அம்பாலிகையின் அறைக்குச் சென்றேன். அங்கு என்னைப் பார்த்ததும் அம்பாலிகை கண்களை மூடிக் கொள்ளவில்லை. ஆனால் என்னைப் பார்த்து அஞ்சினாள். வந்திருப்பது மகாமுனிவர் என்பதால் அந்த அச்சம். அச்சத்தில் அவள் முகமும் உடலும் வெளுத்தது. அறையிலிருந்து வெளியே வந்ததும் ஆவலுடன் காத்திருந்த என் அன்னையிடம் ‘’அம்பாலிகை மூலம் ஒரு மகன் பிறப்பான். ஆனால் அவன் உடல் முழுவதும் வெளுத்திருக்கும்’’ என்றேன். அதன்படியே பாண்டு பிறந்தான். என் அன்னையின் ஏக்கம் தீரவில்லை. ‘‘கடைசியாக ஒரு கோரிக்கை. அம்பாலிகையின் அச்சத்தைப் போக்குகிறேன். அவள் மூலம் எந்தக் குறையும் இல்லாத ஒரு வாரிசை இந்த ராஜ்யத்திற்குத் தர வேண்டும்’’என்றாள். ஆனால் அம்பாலிகையின் மனம் இன்னமும் கூட என்னை பயமின்றி ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதேசமயம் தனது மாமியாரின் கட்டளையை அவளால் மறுத்துப் பேச முடியவில்லை. இதன் காரணமாக தன்னுடைய பணிப்பெண் ஒருத்தியை அழகாக அலங்கரித்து அறைக்குள் அனுப்பி விட்டாள். அந்தப் பணிப்பெண் என்னிடம் மிகவும் மரியாதையுடனும். கனிவுடனும் நடந்து கொண்டாள். அவள் மீது எனக்கு கருணை பிறந்தது. அவள் மூலம் உருவாகும் வாரிசு ஒழுக்கம், புத்திசாலித்தனத்துடன் இருக்கும் என்பதை உணரமுடிந்தது. அவன்தான் பின்னர் விதுரனாக உருவெடுத்தான். காலம் கடந்தது. திருதராஷ்டிரனுக்கு கவுரவர்களும், பாண்டுவுக்குப் பாண்டவர்களும் பிறந்தனர். விதுரன் நல்வார்த்தைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறுவதோடு நிறுத்திக் கொண்டு நல்வாழ்வு வாழ்ந்தான். ஆனால் குரு வம்சம் பலவித திருப்புமுனைகளைக் கண்டது. வீரம், பேராசை, வஞ்சகம், தர்மம், அவமானம் என்று பல உணர்வுகள் துாண்டப்பட்ட ஏதேதோ நடந்தேறின. மகாபாரதம் பிறந்தது’’
|
|
|
|
|