|
விஸ்வாமித்திரர் முன்னே செல்ல ராமனும், லட்சுமணனும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். அயோத்தியைக் கடந்து சிறிது துாரம்வரை நட்பாகத் தெரிந்த பாதை அதன் பிறகு, மனித நேயம் அதிகம் காணாததால் கரடு முரடாக விரோதம் பாராட்டியது. ஆனால் இந்தப் பாதையெல்லாம் ஒரு பொருட்டல்ல என்பதுபோல விஸ்வாமித்திரர் சற்று வேகமாக நடை போட்டார். அவருக்கு இந்தநடை பழக்கம்தான் என்றாலும், தன் யாகம் குறையின்றி நிறைவேற வேண்டும் என்ற ஆதங்கம் அதைவிட முக்கிய காரணமாக இருந்தது. சகோதரர்கள்தான் கொஞ்சம் தவித்துப் போனார்கள். தாமரை மலர் போன்ற மென்பாதங்கள் இந்தப் புதுப் பயணத்தால் அயர்ச்சியுற்றன. காலணிகள் அணிந்திருந்தார்கள் என்றாலும் முனிவரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க வேண்டியிருந்ததால் ஓட்டமும் நடையுமாகப் பின் தொடர்ந்ததில் கால்களில் வலி ஏற்பட்டு ஓய்வுக்காகக் கெஞ்சின. வெகு தொலைவு வந்த பிறகே, இனி தசரதன் பின்னால் ஓடி வந்து தன் பிள்ளைகளைத் தன்னிடமிருந்து பிரித்து அழைத்துச் செல்ல மாட்டான் என்ற தைரியம் வந்த பிறகுதான் – விஸ்வாமித்திரர் தன் வேகத்தை மட்டுப்படுத்தி, களைப்பு தெரியாமல் இருக்க அவர்களிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தார். புராணக் கதைகளைச் சொன்னார். ஆமாம், ராமனுக்கே புராணக் கதைகள்! மச்சாவதாரம் முதல் வாமனாவதாரம் வரை திருமாலின் திருவிளையாடல்களை விவரித்தார். ராமனுடைய குலத்து முன் தோன்றலான ஹரிச்சந்திரனின் புராணத்தையும் கொஞ்சம் குற்ற உணர்வோடு விஸ்தாரமாக எடுத்துரைத்தார். நடைப் பயணத்தால் உடல் துன்புறுவதையும், இளம் வயதின் இயல்பான பசி உணர்வையும் அறிந்த முனிவர் பாலகர்கள் இருவரும் வேதனையுறக் கூடாது என்பதற்காக ‘பலை, அதிபலை‘ என்ற இரண்டு மந்திரங்களை உபதேசித்தார். ஒருவரின் நோக்கம் நிறைவேறுவதற்கு உடல் நலிவும், பசியும் தடையாக இருந்துவிடக் கூடாது, ஆகவே அந்த உபாதை பெரிதாக பாதிக்கக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட மந்திரங்கள் அவை. இந்த மந்திரங்கள்தான் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து ராமன், சீதை-லட்சுமணனுடன் வனவாசம் மேற்கொண்டபோது அவர்களுக்குப் பேருதவியாக இருந்தன. முனிவர் சொன்ன விஷயங்களை சகோதரர்கள் கேட்டு மகிழ்ந்து பயனடைந்தார்கள். இந்த கட்டத்தில் அவர்கள் மிக கடுமையான வெப்பம் வீசும் நிலப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். இயற்கையின் இயல்புக்கு மாறாக அங்கு நிலவிய சீதோஷ்ண நிலை ராமனை சந்தேகம் கொள்ள வைத்தது. தன் சந்தேகத்தை முனிவரிடம் கேட்டான். ‘‘ராமா, இந்தப் பகுதி அற்புதமான வளம் நிறைந்த மருத நிலமாக ஒரு காலத்தில் இருந்தது. இங்கே தாடகை என்ற அரக்கி புகுந்து தன்னுடைய அரக்க குணத்தால் இந்தப் பகுதியையே வெம்மையாக்கிவிட்டாள். மனிதர், விலங்கு என்று யாரையும் இயல்பாக நடமாட விடாமல் அனைவரையும் கொன்று அராஜகம் புரிந்து கொண்டிருக்கிறாள். முனிவர்கள் தவமியற்ற தடை உண்டாக்கி அவர்களையும் அழித்து ஊழித் தாண்டவம் ஆடுகிறாள். அபரிமிதமான பலம் கொண்டு தன்னை வெல்பவர் யாருமில்லை என்ற மமதையால் கொடுமை பல புரிகிறாள்’’ என்று விளக்க ஆரம்பித்தார் விஸ்வாமித்திரர். ‘‘அட... ஒரு பெண்ணா இவ்வாறு தாய்மை உணர்வின்றி நடக்கிறாள்’’ என்று மிகவும் அப்பாவியாகக் கேட்டான் ராமன். ‘‘இவள் பெண்ணே அல்ல, ராமா. நான்தான் சொன்னேனே, அரக்கி’’ ‘‘அது எப்படி ஐயனே ஒரு பெண் அரக்கியாக முடியும்? நான் அப்படி கேள்விப்பட்டதே இல்லை, பார்த்ததும் இல்லையே!’’ ‘‘உண்மைதான் ராமா. ஒரு பெண் எப்போது தன் பெண்மை இயல்பை இழக்கிறாளோ அப்போதே அரக்கியாகி விடுகிறாள். அவள் எண்ணத்தில் கொடுமை கலந்தால், அவளுடைய பேச்சிலும், செயலிலும் அது ஆக்ரோஷமாக வெளிப்பட்டு விடும். தனக்கு எதிராக எந்தக் கொடுமை நடந்தாலும், அது முற்றிலும் அநியாயமாகவே இருந்தாலும், அப்போதும் பொறுமை, அடக்கம் ஆகிய பெண்மை குணங்களை அவள் கைவிடக் கூடாது. ஆனால் தாடகை அத்தகையவள் அல்ல’’ ‘‘அதெப்படி பிறவியிலேயே ஒரு பெண் அரக்கியாக முடியும்?’’ ‘‘நியாயமான கேள்வி. சுகேது என்ற இயக்க குலத்தவனுக்குப் பிறந்தவள் தாடகை, பேரழகியாக, குணவதியாகத்தான் பிறந்தாள். இயக்கர்கள் தலைவனான சுந்தன் என்பவனுக்கு மனைவியான பிறகும் நற்குணங்களை அவள் கைவிடவில்லை. இவளுக்கு மாரீசன், சுபாகு என்று இரு பிள்ளைகள் பிறந்தனர். தனக்கு மகன்கள் பிறந்ததை மிகப் பெருமையாகக் கருதிய சுந்தன் தலைகால் புரியாமல் ஆட ஆரம்பித்தான். மகன்களின் துணையுடன் இந்த உலகையே அடிமைப்படுத்திவிடத் துடித்தான். அந்த நோக்கில் இங்கே குடில் அமைத்துத் தங்கியிருந்த குறுமுனி அகத்தியரைத் தாக்கினான். அவரது ஆசிரமத்துக்கு ஆசையுடன் வந்து விளையாடிக் கொண்டிருந்த மான்களைக் கொன்று புசித்தான். இது கண்டு பொறுக்காத அகத்தியர் தீ உமிழும் தன் கண்களால் நோக்க, அவன் எரிந்து சாம்பலானான். இப்போதுதான் தாடகை அரக்க குணம் கொண்டாள். தன் கணவனின் அடாத செயலைவிட, அவனை குறுமுனி தண்டித்ததுதான் அநியாயம் என்ற எண்ணம் கொண்டாள். தாம்பத்திய உறவால், அவளும் சுந்தனின் கொடிய குணத்தை மனதிலும், உடலிலும் அவள் ஏற்றுக் கொண்டிருந்தாள் போலிருக்கிறது! தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அகத்தியரை அழிக்கப் புறப்பட்டாள். இதைக் கண்டு வெகுண்ட அகத்தியர் மூவரையும் அரக்கர்களாகி விட சபித்தார். உடனே அவர்கள் அரக்க உருவம் கொண்டனர். தாடகை மேலும் கோப ஆவேசத்துடன் காமனாச்சிரமம் எனப்படும் இந்தப் பகுதிக்கு வந்தாள். வளம் மிகுந்த சோலைகள் நிரம்பிய இந்த எழில் வனத்தை பாலையாக்கினாள். தொடர்ந்து கொடுமைகள் புரிந்து வருகிறாள்’’ விஸ்வாமித்திரர் விவரித்துக் கொண்டிருக்கும்போதே அங்கே நிலம் நடுங்கியது. சூறாவளிக் காற்று வீசியது… ஆமாம், தாடகை அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். ‘‘ராமா, இதுதான் சரியான சந்தர்ப்பம். அதோ வருகிறாள் தாடகை. உன் கணையால் அவளை வீழ்த்து..’’ என்று கோரினார் முனிவர். ‘என்னது, ஒரு பெண்ணை வதைப்பதா? என்னதான் அரக்கியாக இருந்தாலும், அவள் பெண்ணல்லவா? மகள், மனைவி, தாய் என்று படிப்படியாகப் பெண்மையின் நிலைகளை அடைந்தவளை – ஒரு பெண்ணை – நான் எப்படிக் கொல்வது?’ என்று சிந்திக்கத் தொடங்கினான் ராமன். அவனுடைய மன ஓட்டத்தைப் படித்த முனிவர் ‘‘ராமா, இவள் பெண்ணே அல்ல. நான் ஏற்கனவே சொன்னதுபோல பெண்மையை இழந்துவிட்ட ஒரு அரக்கி. இவளுடைய உருவத்தைப் பார். இவள் இழைத்திட்ட கொடுமைகளை எண்ணிப் பார். எத்தனையோ பேரின் உயிரையும், வாழ்க்கையையும் அழித்த இவள் இனியும் கொடுஞ்செயல் புரியக் கூடாது. அதை இளவரசனான நீ அனுமதிக்கக் கூடாது. எடு வில்லை, தொடு கணையை…’’ முனிவரின் விளக்கத்தைக் கேட்ட லட்சுமணன் தன் அண்ணன் அந்த ‘தர்ம’ காரியத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பெரிதும் எதிர்பார்த்தான். ஆவலுடன் அண்ணனை நோக்கினான். லட்சுமணனின் முகக்குறிப்பால் அவன் மனதைப் படித்த ராமன், கொஞ்சம் குழப்பம் கலைந்தான். அதோடு அவ்வாறு வதைக்குமாறு தன்னை பணிப்பவர், குருவுக்கு சமமான விஸ்வாமித்திரர். குருவின் கட்டளையை சிரமேற்கொள்வதுதான் ஒரு மாணவனுக்கு அழகு…. இதற்குள் தாடகை அம்மூவரையும் நோக்கித் தன் சூலத்தை எறிந்தாள். மலையைக் கிள்ளி வீசினாள். ராமன் தன் முதல் போரின் முதல் கணையைத் தொடுத்தான். தாடகை வீசியனவற்றைத் துாள் துாளாக்கினான். பிறகு அவளை நோக்கி கணை எய்தினான். தாடகையின் மரண ஓலம் வெகு தொலைவுக்குக் கேட்டது. அகத்திய முனிவருக்கும் கேட்டிருக்கும்!
|
|
|
|