|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » கங்கையாகிய நான்... |
|
பக்தி கதைகள்
|
|
புனிதநதியாக கருதப்படும் கங்கையாகிய நான் ஒருமுறை பெண் உருவில் நடந்தபோது என் எதிரில் எட்டு பேர் வந்து பணிந்தனர். அவர்களை எனக்குத் தெரியும். அவர்கள் அஷ்டவசுக்கள் – அதாவது எட்டு திசைகளின் காவலர்கள். அவர்கள் ஒரு சாபத்துக்கு உள்ளாகியிருந்தனர். அதிலிருந்து விமோசனம் பெற என் உதவியை நாடினர். அந்த சாபத்தின் பின்னணியை விளக்கினர். மகரிஷி வசிஷ்டரின் ஆஸ்ரமத்தில் நந்தினி என்னும் பசு இருந்தது. விரும்பியதை எல்லாம் அளிக்கும் சக்தி அதற்கு உண்டு. அதன் மீது ஆசை கொண்ட அஷ்ட வசுக்களில் ஒருவனான பிரபாசனின் மனைவி அப்பசுவை அடைய விரும்பினாள். வசிஷ்டரை அணுகிய பிரபாசன் மனைவியின் விருப்பத்தைக் கூறினான். நந்தினியைத் தர வசிஷ்டர் மறுத்தார். இதன்பின் பிரபாசன் வேறொரு திட்டம் தீட்டினான். அன்றிரவு ஏழு வசுக்களையும் அழைத்துக் கொண்டு வசிஷ்டரின் ஆஸ்ரமத்தில் இருந்த நந்தினியை திருடிச் சென்றான். வசிஷ்டர் கடும் கோபம் கொண்டு, ‘அஷ்ட வசுக்களாகிய நீங்கள் அனைவரும் பூமியில் பிறக்க வேண்டும்’ என சாபமிட்டார். தவறை உணர்ந்த எட்டு பேரும் வசிஷ்டரிடம் மன்னிப்பு கேட்டனர். ஏழு வசுக்களுக்கு மட்டும் சலுகை காட்டினார் அவர். ‘நீங்கள் பிறந்த சிறிது காலத்திலேயே தேவலோகத்தை அடைவீர்கள். பிரபாசன் மட்டும் நீண்ட காலம் பூமியில் வாழ்வான்’ என்றார். இப்படி நடந்ததை எல்லாம் விளக்கிய அஷ்ட வசுக்கள், ‘நீங்கள் எங்களுக்கு அன்னையாக வேண்டும். நாங்கள் ஒவ்வொருவராகப் பிறந்தவுடன் எங்களைக் கொன்றுவிடுங்கள். எங்களுக்கு உடனே திசைக்காவலர் பதவி மீண்டும் கிடைத்துவிடும்’ என்றனர். காலம் நகர்ந்தது. ஒருநாள் பெண்ணுருவில் நான் சென்ற போது, அங்கு வந்த மன்னன் சாந்தனு என்னை விரும்பினான். என்னைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டான். அஷ்டவசுக்களின் சாபத்தைப் போக்க இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த தீர்மானித்தேன். ‘நான் உன்னைத் மணம் செய்கிறேன். ஆனால் எனது எந்தச் செயலுக்கும் குறுக்கே நிற்கக் கூடாது. அப்படிச் செய்தால் நான் உன்னை விட்டுப் பிரிவேன்’ என்றேன். சாந்தனு சம்மதித்தான். திருமணம் நடந்தது. எங்களுக்கு முதல் குழந்தை பிறந்தது. அவன் அஷ்டவசுக்களில் முதலாமவன். நான் அந்தக் குழந்தையை எடுத்துச் சென்று நதியில் வீசியெறிந்தேன். மன்னன் சாந்தனு அதிர்ச்சி அடைந்தாலும் எனக்குக் கொடுத்த வாக்கை நினைத்து மவுனமானான். இப்படியே அதற்கடுத்துப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றேன். ஆனால் எங்களது எட்டாவது குழந்தையையும் (அப்படி எட்டாவது குழந்தையாகப் பிறந்தவன் பிரபாசன்தான்) நதியில் வீச முயற்சித்தபோது சாந்தனு தடுத்தான். என் மனம் கல்லா என்று கேட்டான். தன் குலம் தழைக்க இந்தக் குழந்தையை அழிக்கக் கூடாது என்றான். ‘மன்னா! நிபந்தனையை மீறிவிட்டாய். நான் உன்னைப் பிரிய போகிறேன். நம் மகனையும் அழைத்துச் செல்கிறேன். அவன் இளைஞன் ஆனவுடன் உன்னை ஒப்படைக்கிறேன்’ என்றேன். அந்தக் குழந்தையுடன் நதியில் கலந்தேன். அந்தக் குழந்தை வளர்ந்தான். ஆயுதப் பயிற்சிகளில் தலைசிறந்து விளங்கினான். பரசுராமரிடமிருந்தே ஆசிகளைப் பெற்றான். பிறகு ஒரு நாள் அவனை மன்னன் சாந்தனுவிடம் ஒப்படைத்தேன். ‘மன்னா, இவன் வேத சாஸ்திரங்களையும் ஆயுதப் பயிற்சிகளையும் கற்றுத் தேர்ந்தவன். இவன் உன் குலத்திற்குப் பெருமை சேர்ப்பான்’ என்றேன். பின் எங்கள் மகனிடம் ‘மகனே தேவவிரதா, இவர்தான் உன் தந்தை’என்றேன். பின் தன் மகனை அழைத்துக் கொண்டு மன்னன் சாந்தனு அரண்மனைக்குச் சென்றார். அது யார் தேவ விரதன் என்கிறீர்களா? பீஷ்மர் என்ற பெயரில் பின்னாளில் பெரிதும் புகழ் பெற்றவனின் இயற்பெயர்தான் அது. ஆம் பீஷ்மன் தான் என் மகன்’.
|
|
|
|
|