|
மன்னர் ஒ௫வர் தன் பிறந்த நாளன்று கோயிலில் அன்னதானம் செய்தார். ஏழை ஒருவன் வரிசையில் நின்றான். அவனை பார்த்தவர்கள் முகம் சுளித்ததால் தள்ளி நின்றான். பின்னால் வந்தவர்கள் அவனைக் கண்டு சிரித்தனர்
. ‘தானம் அளிக்கும் அன்னத்தை வாங்கக் கூட போராட வேண்டியிருக்குதே... என்ன பாவம் செய்தேனோ...இன்று எனக்கு பட்டினி தான் விதிக்கப்பட்டிருக்கு போலிருக்கு’ என நொந்தான். கோபுரத்தை அண்ணாந்து பார்த்து, ‘‘அப்பனே ஈஸ்வரா.. என்னை ஏன் படைத்தாய்’ என அழுது கொண்டே வணங்கினான். பின்னர் குளத்திற்கு வந்து முகம் கழுவி விட்டு அமர்ந்தான்.
தானம் கொடுத்து முடித்தபின் மன்னர் அந்த பக்கமாக வந்தார். தண்ணீரை வெறித்து பார்த்தபடி இருந்த ஏழையை நோக்கி, ‘‘என்னப்பா...சாப்பிட்டாயா’’ எனக் கேட்டார். மன்னர். ‘என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியிருக்கு போலிருக்கு’ என்றான் விரக்தியுடன். அவனது பதில் மன்னரின் மனதை தொட்டது. ‘ என் பிறந்தநாளில் யாரும் பசியால் வாடக் கூடாது என்று தானே தானம் அளித்தேன். நீ மட்டும் ஏன் இப்படி சொல்கிறாயே’ என அருகில் வந்த ராஜா அவனது தோளில் கை வைத்து ‘ரொம்ப பசிக்கிறதா உனக்கு’ எனக் கேட்டார். தலையில் கிரீடம், காதில் குண்டலம், நெற்றியில் திருநீறு என மன்னரின் நிழல் குளத்து நீரில் தெரியவே திடுக்கிட்டு எழுந்தான். ‘‘மகாராஜா நீங்களா... யார் எனத் தெரியாமலேயே பேசி விட்டேன். மன்னியுங்கள்’’ என்றான். ‘‘பயப்படாதே. இன்று அரண்மனையில் என்னுடன் விருந்து உண்ண வா’’ என்றதோடு, அவனை பேசவிடாமல் தடுத்து தேரில் அழைத்துச் சென்றார். அரண்மனையை அடைந்ததும் ‘குளித்து விட்டு உடுத்திக் கொள்’ என புத்தாடை கொடுத்தார்.
ஏழையும் விருந்துக்கு தயாரானான். அறுசுவை உணவுகளை சாப்பிட்டான். அ்னபளிப்பாக பொற்காசுகள் கொடுத்த மன்னர், ‘‘இன்று முதல் நீ ஏழை இல்லை. இதைக் கொண்டு தொழில் செய்து கவுரவத்துடன் வாழ்’’ என்றார். ஏழைக்கு கண்ணீ்ர வந்தது. ‘ஏனப்பா அழுகிறாய்’ எனக் கேட்டார் மன்னர். ‘இதுநாள் வரை ஏழையாக பிறந்தேனே என வருந்தினேன். இப்போதுதான் அது முட்டாள்தனம் என்பது புரிகிறது’ என்றான். ‘ஏன் அப்படி சொல்கிறாய்’ எனக் கேட்டார் மன்னர். ‘என் வாழ்வில் முதல் முறையாக இன்று தான் கோயில் கோபுரத்தை அண்ணாந்து பார்த்து ‘அப்பனே ஈஸ்வரா.. என்னை ஏன் படைத்தாய்’ என முறையிட்டேன். உங்கள் மூலம் என் தலையெழுத்தையே கடவுள் மாற்றி விட்டார். இந்த உண்மையை அறியாமல் இவ்வளவு காலம் முட்டாளாக இருந்தேனே’ என்று அழுதான். ஒரு பொருள் கிடைக்கவில்லை என்றால் சராசரியை விடச் சிறந்த ஒன்றை கடவுள் நிச்சயம் நமக்கு தருவார் என நம்புங்கள். ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்று சும்மாவா சொன்னாங்க பெரியவங்க!
|
|
|
|