|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » பீஷ்மனாகிய நான் |
|
பக்தி கதைகள்
|
|
மன்னன் சாந்தனுவுக்கும் கங்கா தேவிக்கும் பிறந்தவன் நான். என்னை திறமைசாலியாக வளர்த்த என் அன்னை, நான் வளர்ந்தபிறகு என் தந்தையிடம் ஒப்படைத்தாள். என்னுடைய அப்போதைய பெயர் தேவவிரதன். காலப்போக்கில் என் தந்தைக்கு சத்யவதி என்ற மீனவப் பெண்ணிடம் விருப்பம் உண்டானது. ஆனால் சத்யவதியின் தந்தை இவர்களின் திருமணத்தை ஏற்கவில்லை. என் தந்தையிடம் ‘உனக்குப் பிறகு உன் மகன் தேவவிரதன்தானே மன்னனாவான்? அதற்கு நான் சம்மதிக்க மாட்டேன். என் மகளுக்குப் பிறக்கும் மகன்தான் முடி சூட வேண்டும்’என்றார். இதை என் தந்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதேசமயம் சத்யவதியிடம் கொண்ட விருப்பம் நிறைவேறாததால் அவர் வாட்டமுற்றார். இதை அறிந்தபின் சத்யவதியின் தந்தையை அணுகினேன். ‘நான் என் அரச உரிமையைத் துறக்கிறேன். என் தந்தைக்குப் பிறகு உங்கள் பேரன்தான் அரசாட்சி செய்வான்’என்று உறுதியளித்தேன். அவர் மகிழ்ந்தாலும் அத்துடன் விடவில்லை. ‘நாளடைவில் உன் மகன் அரியணைக்குப் போட்டியிடுவானே’என்றார்.‘நான் திருமணமே செய்து கொள்ளமாட்டேன்’ என்று சபதமிட்டேன். அப்போது வானிலிருந்து பூமழை பொழிந்தது. வேறு யாரும் எடுத்திராத பயங்கரமான சபதத்தை நான் எடுத்ததால் என்னை ‘பீஷ்மா’ என்று தேவர்கள் வாழ்த்த அதுவே என் பெயரானது. என் தந்தைக்கும் சத்யவதிக்கும் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு மகன் பிறக்க அவனுக்கு விசித்ரவீரியன் என்று பெயரிட்டனர். அவன் மீது மிகவும் பாசம் கொண்டிருந்தேன். வாழ்நாள் முழுதும் பிரம்மச்சரியம் காப்பதாக சபதம் செய்த நான், என் தம்பிக்கு மணம் முடிப்பதற்காக காசி நாட்டு ராஜகுமாரிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோரை சிறையெடுத்து வந்தேன். ஆனால் அவர்களில் மூத்தவளான அம்பை என்னை விட்டுவிடுங்கள். நானும் சுலப நாட்டு அரசனான சால்வனும் ஒருவரையொருவர் விரும்புகிறோம் என்று கூறினாள். எனவே அவளை விடுதலை செய்தேன். ஆனால் சால்வன் அம்பையை ஏற்க மறுத்தான். ‘பலர் அறிய பீஷ்மரால் கடத்திச் செல்லப்பட்ட உன்னைத் திருமணம் செய்வது இயலாது’ என்றான். மீண்டும் என்னிடம் வந்த அம்பை என் தம்பியை மணமுடிக்க சம்மதித்தாள். ஆனால் விசித்ர வீர்யனோ ‘‘வேறொருவனை விரும்பியவளை நான் மணக்க மாட்டேன்’’ என்றான். இப்படி மாறி மாறி இருபுறமும் அவமானப்பட்ட அம்பை ‘‘பீஷ்மரே... நீங்களே என்னை மணம் முடியுங்கள்’’ என்றாள். பிரம்மச்சரிய சபதம் பூண்டிருந்த நான் மறுத்தேன். பழி உணர்ச்சி அம்பையின் மனதை நிரப்பியது. நான் சிறையெடுத்ததினால்தானே அவளது மணவாழ்க்கை சின்னாபின்னமானது என எண்ணிய அவள் சிவனை நோக்கித் தவமிருந்தாள். அவளது கடும் தவத்துக்கு மனமிரங்கிய சிவன் அவள் முன் தோன்றினார். ‘பீஷ்மரின் இறப்புக்கு நானே காரணமாக வேண்டும்’ என்று வரம் கேட்டாள். அளிக்கப்பட்டது. பாஞ்சால மன்னரின் மகளாகப் பிறந்தும் வேறொரு வரத்தின் விளைவாக ஆணாக மாறினாள். சிகண்டி என்ற புதிய பெயர் கொண்ட அவள் என்னைக் கொல்வதற்காக காத்திருக்கத் தொடங்கினாள். பின்னர் மகாபாரதப் போர் நடைபெறத் தொடங்கியது. கவுரவர் தரப்புக்கு நான் தலைமைத் தளபதியானேன். தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தேன். கிருஷ்ணன் கூறிய ஆலோசனையின்படி சிகண்டி முன்னால் இருக்க, அவளைக் கேடயமாகக் கொண்டு என்னை நோக்கி அம்பு மழை பொழியத் தொடங்கினான் அர்ஜுனன். எதிர்ப்புறம் செலுத்த என்னிடம் அம்புகளுக்கு பஞ்சம் இல்லைதான். ஆனால் எதிரில் தென்படுவதோ சிகண்டி! ஒரு பெண்ணின் மீது அம்பு எய்வது யுத்த தர்மம் இல்லையே. அந்த பரபரப்பான சூழலிலும் சிகண்டியின் முற்பிறவியில் என்னையும் அறியாமல் நான் சிகண்டிக்கு (அம்பைக்கு) இழைத்த அநீதி நினைவில் எட்டிப் பார்த்தது. இப்போது போர்க்களத்தில் சிகண்டியின் பின்னால் நின்றபடி அர்ஜுனன் அம்புகளை என் மீது வீசத் தொடங்க, நான் துரியோதனின் தம்பிகளில் ஒருவனான துச்சாசனனிடம் ‘‘இந்த அம்புகள் சிகண்டியினுடையதல்ல; அர்ஜுனனுடையதுதான். நண்டின் குஞ்சுகள் தன் தாயின் உடலை எப்படிக் கிழிக்குமோ அதுபோலத்தான் இந்த அம்புகள் என் உடலைக் கிழிக்கின்றன’’ என்று கூறி மகிழ்ந்தேன். என் உடல் முழுவதும் அர்ஜுனனின் அம்புகள் சல்லடையாய்த் துளைக்க, தேரிலிருந்து கீழே விழுந்தேன். ஆனால் எனது உடல் தரையைத் தீண்டவில்லை. செங்குத்தான நிலையில் அம்புகள் என் உடலைத் தாங்கி இருந்தன. ‘பீஷ்மர் வீழ்ந்தார்’ என்ற மாபெரும் அதிர்ச்சிச் செய்தி பரவ, அனைவரும் நான் இருந்த பகுதியை நோக்கி குவியத் தொடங்கினார்கள். பாண்டவர்கள், கவுரவர்கள் இரு தரப்பினருக்கும் நான் பாட்டனார். துரியோதன், அர்ஜுனன் இருவருமே என் மடியில் தவழ்ந்தவர்கள். எனவே என்னைச் சுற்றி துரியோதனன் மட்டுமல்ல, பாண்டவர்களும் கலங்கிப் போய் கண்களில் நீர் பெருக்கி நின்றார்கள். ஒவ்வொரு அம்புமுனையும் குத்தீட்டியாக உடலைத் துளைத்துக் கொண்டிருக்க அப்படியொரு சயன நிலையில் இருப்பது எவ்வளவு சித்ரவதை! அர்ஜுனனைத்தான் அருகில் அழைத்தேன். ‘அர்ஜுனா. என் தலை தொங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் ஏற்படும் வலிதான் அம்புகளினால் ஏற்படும் வலியை விட அதிகமானதாக இருக்கிறது’’ என்றேன். துரியோதனும் பிறரும் தகுந்த தலையணை எடுத்து வரும் முயற்சியில் ஈடுபடத் தொடங்க, பாட்டன் மனமறிந்து செயல்பட்டான் அன்புப் பேரன். தொங்கிக் கொண்டிருந்த எனது தலைக்குக் கீழே மூன்று அம்புகளை அர்ஜுனன் செலுத்த அவை செங்குத்தாக என் தலையை ஆதரவாகத் தாங்கிப் பிடித்து நின்றன. ‘‘உத்தராயணம் வரும் வரையில் நான் இந்த அம்புப்படுக்கையில் கிடப்பேன்’’ என்றேன். சூரியன் வடக்கு முகமாகச் செல்லும் தை முதல் ஆனி வரையிலான காலத்தைதான் உத்தராயணம் என்பார்கள். (பாரதப்போர் மார்கழி மாதத்தில் துவங்கியது). அது போலவே படுத்த நிலையிலேயே தொடர்ந்து வரும் போரின் போக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். போரின் முடிவு எனக்குத் தெரிந்து விட்டது. தர்மன்தான் ஹஸ்தினாபுரத்தை ஆட்சி செய்யப் போகிறான் என்பதை அறிந்து அவனுக்கு நல்லாட்சி எப்படிச் செய்ய வேண்டும் என்பதை விளக்கினேன். ஒரு கட்டத்தில் என் நாக்கு வறட்சியில் தவிக்கத் தொடங்கியது. இதைக் கண்ணுற்ற அர்ஜுனன் என் முகத்துக்கு வலப்பக்கமாக இருந்த நிலப்பகுதியில் ஒரு அம்பைச் செலுத்தினான். அது மண்ணுக்குள் ஆழமாகப் பதிய, உள்ளிருந்து நீர் ஒரு ஊற்றாக வெளிவந்து நாக்கை நனைத்தது. தாகம் தணிந்தது. கடவுளின் ஆயிரம் நாமங்களை ஜெபிக்கத் தொடங்கினேன். சூரியன் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான். போர் முடிந்த பவுர்ணமியில் இருந்து எட்டாம் நாளில் உயிர் துறந்தேன்’. ................. உத்திர பிரதேசத்தின் அலகாபாதில் உள்ளது பீஷ்மர் கோயில். இந்தியாவிலேயே பீஷ்மருக்கென எழுப்பப்பட்ட கோயில் இதுவே. 50 ஆண்டுகளுக்கு முன் இக்கோயில் நிறுவப்பட்டது. இதைக் கட்டியவர் ஜே.ஆர்.பட் என்ற வழக்கறிஞர். முதியவள் ஒருத்தி தினமும் கங்கையில் குளிப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தாள். கங்கையின் புனிதம் குறித்து அவளுக்கு மிக அதிகமான நம்பிக்கை. கங்கையின் மகன் பீஷ்மன் குறித்து அறிந்த போது அவளுக்கு அவர் மீது மிகுந்த மரியாதை எழுந்தது. பீஷ்மர் தெய்வீகத்தன்மை கொண்டவர் என்பதை அவள் உணர்ந்தாள். தான் நினைக்கும் போதுதான் ஒருவருக்கு மரணம் வரும் என்றால் அவர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதை எண்ணி பிரமித்தாள். அவள் தினமும் மேற்படி வழக்கறிஞரை கங்கைக் கரையில் பார்ப்பது வழக்கம். ‘கங்கையை தினமும் வழிபடுகிறீர்களே... அவள் மகனான பீஷ்மருக்கு ஒரு கோயிலை நீங்கள் எழுப்பக் கூடாதா?’ என்ற கோரிக்கையை முன்வைத்தாள். வழக்கறிஞருக்கும் அது ஏற்புடையதாக இருக்கவே கோயில் எழுந்தது. பிரபல நாகவாசுகி கோயிலின் அருகே கங்கைக் கரையில் இக்கோயில் உள்ளது. பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருக்கும் சிலை இங்குள்ளது. பீஷ்மர் நீண்ட காலம் உயிர் வாழ்ந்தவர். அனைவரும் இணக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக முடிந்தவரை போராடிப் பார்த்தவர். குடும்பத்துக்காக தன் சுகங்களை விட்டுக் கொடுத்தவர். எனவே இக்கோயிலில் வழிபட்டால் நீண்ட காலம் வாழலாம். குடும்பத்தினர்கள் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஹரியானாவில் உள்ள குருக்ஷேத்ரத்தில் பாட்டனார் பீஷ்மருக்காக அர்ஜுனன் அம்புவிட்டு கங்கையை வரச் செய்த இடம் பீஷ்மகுண்ட் என்று அழைக்கப்படுகிறது. அதன் அருகே அம்புப் படுக்கையில் உள்ள பீஷ்மரை தரிசிக்கலாம்.
|
|
|
|
|