|
விஸ்வாமித்திரர் மனநிறைவு கொண்டார். ராம, லட்சுமணர் உதவியால் சித்தாஸ்ரமத்தில் யாகம் நிறைவடைந்ததால் யாகப்பலன்களைப் பெற்றார். அவற்றை உலகோர் நன்மைக்காக செலவிட ஆயத்தமானார். ஆனால் அவரால் நிறைவேற்றப்பட வேண்டிய பணி ஒன்று மிச்சம் இருந்தது. ராமனின் திருமணம். ஹரிச்சந்திர பாவத்துக்கு தேடிக் கொள்ள வேண்டிய பிராயசித்தம். ஆகவே ராம திருமணத்துக்கு முயற்சிக்கும் வகையில், அவர் சகோதரர்களை மிதிலை நோக்கி அழைத்துச் சென்றார். ‘முனிவரின் நோக்கம்தான் பூர்த்தியாகி விட்டதே, இனி அயோத்திக்குத் திரும்ப வேண்டியதுதானே’ என்று ராமன் நினைத்தான். அதே கருத்து லட்சுமணனுக்கும் இருந்தது. ஆனால் குருஸ்தானத்தில் இருக்கும் முனிவர் அவர்களை அயோத்திக்கு அழைத்துச் சென்று தசரதனிடம் ஒப்படைக்க வேண்டாமோ? வந்த பாதை வழியாகத் திரும்பாமல் வேறு பாதையில் தம்மை இவர் இட்டுச் செல்லும் நோக்கம் என்ன? அவர்கள் கண்களால் சந்தேகத்தைப் பரிமாறிக் கொண்டாலும், முனிவர் தங்களை நல்வழிக்குதான் அழைத்துச் செல்வார் என இருவரும் நம்பினர். அதனால் அவரிடம் எதையும் கேட்காமல் பின் தொடர்ந்தனர். போகும் வழியில் ஒரு கிணறு தென்பட்டது. அதனருகே விஸ்வாமித்திரர் தயங்கி நின்றார். ராமனால் ஆக வேண்டிய இன்னொரு பணி இங்கே நிறைவேறக் காத்திருந்தது. அந்தச் செயலால் அவரும் ஆத்ம நிம்மதி கொள்ள முடியும். ஏன் அப்படி? அவருடைய பிராயசித்த கணக்குப் புத்தகத்தில் இன்னொரு பக்கம் இது. நேரடியாக அவர் சம்பந்தப்படவில்லை என்றாலும், தன்னுடைய சேவையாகவே அதனை பாவித்தார். என்ன விஷயம்? பிரம்மா ஒரு பேரழகியை உருவாக்கினார். அவளுக்கு அகல்யா (அகலிகை) என்று பெயரிட்டார். பார்த்த மாத்திரத்தில் இந்திரன் அவளை அடைய முற்பட்டான். ஆனால் இந்திரனின் அந்தப்புரத்தில் பத்தோடு ஒன்று என்ற வகையில் அகலிகை இருப்பதை பிரம்மன் விரும்பவில்லை. ஆகவே அவளை கவுதம முனிவரின் பராமரிப்பில் ஒப்படைத்தான். முனிவரும் பிரம்மன் குறிப்பிட்ட காலம்வரை அவளைப் பாதுகாத்து ஒப்படைத்தார். முனிவருடைய நாணயத்தால் மகிழ்ந்த பிரம்மன், இந்திரனின் காமப் பார்வையிலிருந்து அகலிகையைக் காப்பாற்றும் வகையில் கவுதமருக்கே அகலிகையை மனைவியாக்கினார். அகலிகையும் முனிவரை கணவராக ஏற்று தர்மபத்தினியாக விளங்கினாள். கணவரின் எல்லா தேவைகளையும் குறிப்பறிந்து உடனுக்குடன் நிறைவேற்றினாள். இதைக் கண்டு ஆத்திரம் அடைந்த இந்திரன் எப்படியாவது அகலிகையை அடைய வேண்டும் என தவித்தான். சதி திட்டத்துடன் கவுமரின் குடிலருகே வந்தான். இயற்கைக்கு முரணாக, பொழுது விடியும் முன்னரே சேவலைக் கூவ வைத்தான். அதைக் கேட்ட கவுதமர் பொழுது புலர்ந்து விட்டதாக கருதி நீராட நதிக்கரையை நோக்கிச் சென்றார். அதற்குள் இந்திரன் முனிவரைப் போல உருக்கொண்டு குடிலுக்குள் புகுந்து அகலிகையைத் தழுவினான். ‘கணவரின்’ இந்தச் செய்கை அகலிகைக்குப் புதியதாக இருந்தது. நேரம், காலம் பார்க்காத, தகாத காம இச்சை என தோன்றினாலும் கணவரின் விருப்பத்தை நிறைவேற்றுவது கடமை என உடன்பட்டாள். வெகு விரைவில் அந்தத் தழுவுதலில் வித்தியாசம் உணர்ந்த அவள், காலம் கெட்ட பொழுதில் கணவருக்குத் தோன்றிய இச்சை என்பதால் தான் அவ்வாறு உணர்வதாகக் கருதினாள். சேவல் கூவல் கேட்டு விடியும் முன்பாக புறப்பட்டது தவறு என குடிலுக்குத் திரும்பினார் கவுதமர். முனிவர் வருவதை அறிந்த இந்திரன் உடனடியாக அகலிகையிடமிருந்து விலகி வெளியே ஓடினான். அதைக் கண்டு சினம் கொண்ட முனிவர், அவனது சருமம் சிதைந்து போகும்படி சாபமிட்டார். அதைக் கண்டு தவறை உணர்ந்த அகலிகை கணவரிடம் மன்னிப்பு கோரினாள். ‘நெறி தவறாத ஒழுக்கமுடைய கணவன் நேரம், காலம் பார்க்காமல் காம இச்சைக்கு ஆட்படுவான் எனக் கருதியதே பெருந்தவறு’ என்று சொன்ன கவுதமர் மனைவியைக் கல்லாகிப் போகும்படி சபித்தார். அந்த தண்டனையை ஏற்றுக்கொண்ட அகலிகை மீண்டும் அவரை சுய உருவில் அடையும் வகையில் சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினாள். அப்போதுதான், ‘ரவிகுல திலகன் ஸ்ரீராமனின் பாதத் துாசி பட்டு சுயவடிவம் பெறுவாய்’ என்று விதித்தார் முனிவர். கிணற்றருகே வந்த விஸ்வாமித்திரர், ‘‘ராமா... இந்தக் கருங்கல்லைப் பார்’’ என்று காட்டி சாபம் பெற்ற அகலிகை கதையை விவரித்தார். மனம் வருந்தினான் ராமன். கல்லருகே சென்றபோது ராமனின் பாதத்திலிருந்து தெறித்த பூமித் துகள்கள் பட்டு அங்கே பளிச்சென்று எழுந்து நின்றாள் அகலிகை. முனிவரையும், ராமனையும் வணங்கினாள். அவள் வணங்குவது கண்டு திடுக்கிட்ட ராமன், ‘அன்னையே, தங்களுக்கு சுயவடிவம் கொடுக்க என்னைப் பணித்திட்ட விதிக்கு நன்றி செலுத்துகிறேன். தாங்கள் இழைத்த பிழை, முன்வினைப்பயனா அல்லது இப்பிறவியில் இடைப்பட்டு ஏற்ற செயலா என்று நான் அறியேன். ஆனாலும் சாபம் மேற்கொண்ட காலங்களில் உணர்ச்சியற்ற கல்லாய் எல்லா பருவ நிலைகளையும் தாங்கிக் கொண்டிருந்தீர்கள். இந்தப் பொறுமையை இனியும் தொடர்ந்து தங்கள் கணவருடனான வாழ்க்கையில் மேற்கொள்ளுங்கள்’ என கேட்டுக் கொண்டான். நால்வரும் சற்றுத் தொலைவிலிருந்த குடிலுக்குச் சென்றனர். கவுதமரிடம் அகலிகையை ஒப்படைத்தனர். அவரும் மனம் திருந்திய மனைவியை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார். முனி தம்பதியரை வணங்கி ராம, லட்சுமணர் ஆசி பெற்றனர். பின்னர் அவர்களுடைய மிதிலை நகரை நோக்கிய பயணம் தொடர்ந்தது. ஹரிச்சந்திர தம்பதியைப் பிரித்த தன்னால், பிரிந்த கவுதம தம்பதி மீண்டும் சேர, ராமன் துணை கொண்டு உதவ முடிந்ததே என விஸ்வாமித்திரர் மனம் மகிழ்ந்தார். ‘தாடகை என்ற பெண்ணை வதைத்ததால் வருத்தம் கொண்டிருந்த நேரத்தில் ஒரு கல்லை உயிர்ப்பித்து பெண்ணாக்கி விட முடிந்ததே’ என ராமனும் ஆறுதல் கொண்டான். விஸ்வாமித்திரர் பெருமையுடன், ‘அரக்கர்களை வதைத்து யாகம் முழுமையாக நிறைவேற உதவிய ராமா, அங்கே உன் கைவண்ணம் கண்டு பேருவகை கொண்டேன். இங்கோ அகலிகை சாப விமோசனம் அடைந்திட்ட நேர்த்தியால் உன் கால்வண்ணம் கண்டு உளம் பூரித்தேன்’ என பாராட்டினார். இன்னும் ஒரு விஷயம்தான் பாக்கி, இந்த முனிவரைப் பொறுத்தவரை. அது ராமனின் திருமணம். அதையும் சிறப்புற நடத்தி விட்டால், இந்த உலக பந்தத்தை முற்றிலுமாகத் துறந்து நிரந்தர தவ வாழ்க்கையை மேற்கொள்ளலாம்… அந்த அற்புதக் கடமையை நிறைவேற்றும் நோக்கில் மிதிலையை நோக்கிச் சற்று எட்டியே நடை போட்டார் விஸ்வாமித்திரர். சகோதரர் இருவரும் முனிவரின் வேகத்தைக் கண்டு வியந்தபடி பின் தொடர்ந்தனர்.
|
|
|
|