|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » அழகில்லாதவளின் கர்மக்கணக்கு |
|
பக்தி கதைகள்
|
|
என் முன்னால் அமர்ந்திருந்த நந்தினிக்கு இருபத்தியைந்து வயது இருக்கும். சாதாரணமான தோற்றம். நொறுங்கலான உடல். மாநிறம். கண்களில் ஒளியில்லை. முகத்தில் பொலிவில்லை. நந்தினி பெரிய கோடீஸ்வரரின் செல்வ மகள். தாழ்வு மனப்பான்மையால் துவண்டு போயிருக்கிறாள். “எனக்கு யாரையாவது காதலிச்சிக் கல்யாணம் செஞ்சிக்கணும்னு ஆசை. ஆனா இப்படி இருக்கேனே” “ஒரு விதத்துல நீயும் அழகாத்தாம்மா இருக்க.” “வெட்டி ஆறுதல் பேச்சு வேண்டாம் சார். நிஜமாகவே அழகாகணும். பச்சைப்புடவைக்காரிகிட்ட கேட்டுச் சொல்றீங்களா” “அவ நிச்சயமா கருணை காட்டுவா” “உங்க வார்த்தைய நம்பிப் போறேன்” அவள் போனதும் எனக்கு பயம் பிடித்துக்கொண்டது. இவளது கர்மக்கணக்கு தெரியாமல் வாக்குக் கொடுத்துவிட்டேனோ.. அன்று மதியம் ஒரு புத்தகக்கடையில் நின்றிருந்தேன். “உங்கள மேடம் கூப்பிடறாங்க” என ஒருவன் அழைத்தான். போனேன். தனியறையில் கம்பீரமாக இருந்தவளைப் பார்த்ததும் யாரென்று தெரிந்துவிட்டது. அவள் காலில் நான் விழுந்தேன். “அடுத்தவர் கர்மக்கணக்கில் குறுக்கிடாதே என ஆயிரம் முறை சொல்லிவிட்டேன்” “மன்னியுங்கள் தாயே” “நந்தினி முற்பிறவியில் பேரழகியாக இருந்தாள். அதனால் அகங்காரம் ஏற்பட்டு மனதில் அன்பில்லாமல் போனது. அழகில்லாதவர்களைக் கேலி செய்தாள். இப்பிறவியில் அழகில்லாதவளாகப் பிறந்திருக்கிறாள்” “அன்பில்லாத நிலையில் தவறு செய்துவிட்டாள். இப்போது மனதில் அன்பு வெள்ளம் ஓடினால் அதில் அவளின் கர்மக்கணக்கு அடித்துக்கொண்டு போய்விடும் அல்லவா” “ஆமாம். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லையே” “அவள் மனதில் அன்பு ஊற்றெடுக்க நான் வழிகாட்டட்டுமா” “அவ்வளவு பெரிய ஆளாகிவிட்டாயா நீ” “இல்லை, தாயே. அன்பின் வழியை காட்ட அன்பரசியான நீங்கள் தான் வழிகாட்டவேண்டும்” “நாளை நீ அவளை அழைத்துப் பேசத் தொடங்கு. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” “நடத்தி வைப்பவர்களே இப்படி விட்டேத்தியாகப் பேசினால் என்ன செய்வது” மறுநாள் நந்தினியிடம் பேசினேன். “நந்தினி...நீங்க அழகாகறதுக்கு ஒரே வழிதான் இருக்கு” “எதுன்னாலும் சரி” “கொஞ்ச நாள் நீங்க ஒரு அழகு நிலையத்துல வேலை பாக்கணும்’’ ‘வெளையாடறீங்களா? எங்கப்பாகிட்ட இருக்கற பணத்துக்கு நுாறு பியூட்டி பார்லர் வச்சி நடத்தலாம். நான் சம்பளத்துக்கு வேலை பார்க்கவா.. நிச்சயமா முடியாது” “எனக்குத் தெரிஞ்சதை சொல்லிட்டேன். வேறு எதுவும் தோணிச்சுன்னா சொல்றேன்” ஒரு வாரம் கழித்து என் வாடிக்கையாளர் அகல்யா என்னைப் பார்க்க வந்தார். மதுரையில் நான்கு இடங்களில் அழகு நிலையம் வைத்து நடத்துகிறார். வரி சம்பந்தமான விஷயங்களைப் பேசி விட்டுச் சொன்னார். “அடுத்த பிராஞ்ச் ஆரம்பிக்கப்போறேன். எனக்கு நல்ல, பணிவான பொண்ணு வேணும். நானே பயிற்சி கொடுத்து அழகுக்கலை நிபுணராக்கிருவேன். ரெண்டு வருஷம் என்கிட்ட வேல பாத்துட்டு அப்பறம் அவ சொந்தமா ப்யூட்டி பார்லர் வச்சி நடத்தலாம். தெரிஞ்சவங்க யாராவது இருந்தா சொல்லுங்க.” மறுநாள் நந்தினி அழைத்தாள். “வேற எதுனாச்சும் தோணிச்சா சார்” “இல்லம்மா” “என்னால சென்னையில வேலை பாக்கமுடியாது. வேற ஊர்ல...’’ அகல்யா சொன்னதைச் சொன்னேன். நந்தினி ஏற்றுக்கொண்டாள். எனக்குத்தான் பயமாக இருந்தது. கோடீஸ்வரியான நந்தினியால் அழகு நிலையத்தில் வேலை பார்க்கமுடியுமா? பல்லைக் கடித்துக்கொண்டு அவள் வேலை பார்த்தபின்னும் அழகாகவில்லையென்றால்… அதன்பின் எதிலும் பிடிப்பில்லாமல் போனது. பேருக்குச் சாப்பிட்டேன். துாக்கம் வரவில்லை. கோயிலுக்கும் போகவில்லை. மனம் பச்சைப்புடவைக்காரியையே சுற்றி வந்தது. அந்த வெள்ளிக்கிழமை மாலை நடந்தே கோயிலுக்குச் சென்றேன். “அவிச்ச பனங்கிழங்கு, சாமி. வாங்கிக்கங்க” கோயில் வாசலில் ஒருத்தி வழிமறித்தாள். “இன்னிக்கு எதுவும் சாப்பிடக்கூடாதுன்னு இருக்கேன்” “ஓஹோ பட்டினி கிடந்தால் நந்தினிக்கு அழகு வந்துவிடுமா என்ன? இதைச் சாப்பிட்டால் நந்தினியின் வாழ்க்கையில் என்ன நடக்கப்போகிறது என்று காட்டுவேன்.” அவள் காலில் விழுந்து வணங்கி விட்டு, பனங்கிழங்கை கண்ணில் ஒற்றிக்கொண்டு சாப்பிடத் தொடங்கினேன். “ஒரு வருடம் கழிந்து நந்தினி எப்படி இருக்கிறாள் என்பதைப் பார்” அசந்துவிட்டேன். அழகான முடியலங்காரம், அளவான ஒப்பனை, திருத்தப்பட்ட புருவங்கள், மெல்லிய சாயம் பூசப்பட்ட உதடுகள், இளமைக்கேயுரிய தோலின் பளபளப்பு – இவை எல்லாவற்றையும் துாக்கியடிக்கும் விதமாக முகத்தில், நடையில், தோரணையில் அதீத தன்னம்பிக்கை. இந்தளவிற்கு அழகாவாள் என நான் எதிர்பார்க்கவில்லை. அன்னை விளக்கினாள். அழகு நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்த நந்தினி பயிற்சி காலத்தில் மிகவும் துன்பப்பட்டாள். அழகு நிலையத்தின் வாடிக்கையாளர்கள் எல்லாம் மேல்தட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வார்த்தைகளால் சுட்டார்கள். வேலைக்காரியை போல் நடத்தினார்கள். வாய்க்கு வந்தபடி திட்டினார்கள். தினமும் இரவு தன் அறைக்கு வந்து பச்சைப்புடவைக்காரியின் படத்தின் முன் கதறி அழுவாள். சாப்பிடாமல் படுத்துவிடுவாள். அகல்யாவிற்கு நந்தினியைப் பிடித்துப் போயிற்று. அவளுக்கு சிறப்புப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். பல அழகுக்கலை நிபுணர்களை அழைத்து நந்தினியை அழகுபடுத்தச் சொன்னாள். நந்தினியின் கூந்தல், முகம், புருவம், கைகள், கால்கள், நகங்கள் என அனைத்திலும் அழகை ஏற்றினார்கள். ஆனால் நந்தினியைப் பேரழகியாக மாற்றும் நிகழ்வு அப்புறம்தான் நடந்தது. ஒருநாள் அகல்யா நந்தினியிடம் புதிய திட்டத்தை அறிவித்தார். “ சேரிகளில் வாழற பொண்களுக்கு அழகு விஷயத்துல நிறைய தாழ்வு மனப்பான்மை இருக்கு. அதைப் போக்க அவங்கள எல்லாம் அழகிகளா மாத்தணும்னு தீர்மானிச்சிருக்கேன். ஏழைப் பெண்களுக்கு இலவசமா சேவை செய்ய தனியா ஒரு பார்லர் திறக்கறோம். அது உன் பொறுப்புலதான் இருக்கும். வரவங்ககிட்ட அன்பாப் பேசணும். அவங்க காசு கொடுக்கலேங்கறதுக்காக செய்யற சேவையில எந்தக் குறைவும் இருக்கக்கூடாது. உன் தலைமையில அஞ்சு பியூட்டிஷியன்ஸ் வேலை பாப்பாங்க. நல்லபடியா செஞ்சி கொடும்மா” நந்தினியின் மனம் இளகியது. தன்னை நாடி வந்த ஏழைப்பெண்களிடம் கனிவாகப் பேசினாள். அகல்யாவிற்கு தெரியாமல் பல பெண்களுக்குப் பண உதவி செய்தாள். பலருக்குத் தன் தந்தையின் மூலம் நல்ல வேலை வாங்கிக் கொடுத்தாள். சிலருக்குக் அழகுக்கலையில் பயிற்சி கொடுத்து அவர்களை நிபுணர்களாக்கினாள். நந்தினி பேரழகியானாள். ஒரு அழகான பத்திரிகை நிருபர் மீது காதல் வந்தது. அவனும் அவளை காதலித்தான். அவள் மனதில் தோன்றிய அன்பு கர்மக்கணக்கை மாற்றி அவளுக்கு அழகைக் கொடுத்தது. காதல் அந்த அழகை இன்னும் ஒளிரச் செய்தது. ‘‘நந்தினிக்கு அன்பைப் போதித்து அவள் கர்மக்கணக்கையே மாற்றிய உன்னை அடுத்த பிறவியில் மனிதர்களின் கர்மக் கணக்குகளை நிர்வகிக்கும் தேவதையாக்குகிறேன்” “என் பதவியை ஏன் பறிக்கிறீர்கள்? நான் என்ன பாவம் செய்தேன்? கடைசிவரை ஒரு பேரழகியின் கொத்தடிமையாகவே இருந்துவிட்டுப் போகிறேன். பதிலுக்கு வேறு ஒரு வரம் கொடுங்கள்” “என்ன வேண்டுமப்பா” “நான் சந்திக்கும் மனிதர்களின் கர்மக்கணக்கு எவ்வளவு கோணலாக இருந்தாலும் அவர்களைக் கணக்கில்லாமல் நேசிக்கும் மனதைக் கொடுங்கள் தாயே” “அந்தளவிற்கு அன்பு செய்ய உன் கர்மக் கணக்கு இடம் கொடுக்காதே” “என் கர்மக்கணக்கை நேர் செய்ய அன்புள்ளம் கொண்ட யாரிடமாவது எடுபிடி வேலை செய்கிறேன் தாயே” அன்னை சிரித்தபடி மறைந்துவிட்டாள். நான் தனியாக அழுது கொண்டிருந்தேன்.
|
|
|
|
|