|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » விதுரனாகிய நான் |
|
பக்தி கதைகள்
|
|
பாண்டவர்களின் தந்தை பாண்டு, கவுரவர்களின் தந்தை திருதராஷ்டிரன் ஆகிய இருவருக்கும் இளையவன் நான். தர்ம தேவனாக விளங்கிய நான் விதுரனாகப் பிறந்த கதை சுவையானது. மாண்டவ்யர் என்ற முனிவர் வனம் ஒன்றில் ஆஸ்ரமத்தில் வசித்து வந்தார். ஒருநாள் அவர் தவம் செய்து கொண்டிருந்தபோது சில கொள்ளையர்கள் வந்து தாங்கள் கொள்ளையடித்த பொருள்களை அந்த ஆஸ்ரமத்தில் மறைத்து வைத்ததோடு தாங்களும் அங்கு ஒளிந்து கொண்டனர். கொள்ளையர்கள் ஆஸ்ரமத்தில் நுழைந்ததைக் கண்ட சேவகர்கள் மாண்டவ்ய ரிஷிக்கும் கொள்ளையர்ககளுக்கும் தொடர்பு உண்டு என்று நினைத்து விட்டார்கள். போதாக்குறைக்கு அந்த ஆஸ்ரமத்தில் கொள்ளையடித்த பொருள்களும் இருந்தன. மாண்டவ்ய முனிவரை வேடமிட்ட ஒரு கொள்ளையன் என்று தீர்மானித்த மன்னன் அவரை சூலத்தில் ஏற்றிக் கொல்ல உத்தரவிட்டான். அவர் அப்போது தவம் செய்து கொண்டிருந்ததால் சூலத்தில் ஏற்றியும் அவர் உயிர் போகவில்லை. தகவல் அறிந்த பல முனிவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். மாண்டவ்யரின் நிலையைக் கண்டு பதறினர். மாண்டவ்யர் உயிருடன் இருப்பதையும் அவரைச் சுற்றி முனிவர்கள் வந்து கைகூப்பி நிற்பதையும் அறிந்த மன்னன் அதிர்ச்சி அடைந்தான். அவரது பெருமையை அறிந்து அவரை சூலத்தில் இருந்து இறக்கிவிட்டு அவரிடம் மன்னிப்பு கேட்டான். மாண்டவ்யர் தர்மதேவனாகிய என்னிடம் வந்தார். ‘இந்த தண்டனை எனக்கு எதற்காக கொடுக்கப்பட்டது’ என்று கேட்டார். சிறு வயதில் பறவைகள், பூச்சிகளை இம்சை செய்ததால்தான் இந்த தண்டனை என்றேன். ‘சிறு வயதில் அறியாமல் செய்த குற்றத்திற்கு எனக்கு மிகப் பெரிய தண்டனையை வழங்கி விட்டாய். எனவே நீ மனிதனாகப் பிறப்பாய்’ என அவர் சபித்தார் வியாச முனிவருக்கும், விசித்திரவீரியனின் மனைவி அம்பாலிகையின் பணிப்பெண்ணான பரிஸ்ரமி என்பவருக்கும் நான் பிறந்தேன். முற்பிறவியில் தர்மதேவன் என்பதால் தர்ம சாஸ்திரங்களிலும், அரச நீதியிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவனாக இருந்தேன். என் தர்மத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட பீஷ்மர், என்னை திருதராஷ்டிரனின் முக்கிய மந்திரியாக நியமித்தார். ஹஸ்தினாபுரத்தின் அரச குலத்தைக் காப்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்தேன். பாண்டவர்களைக் கொல்வதற்காக அரக்கு மாளிகை ஒன்றைக் கட்டியிருந்தான் துரியோதனன். விபரம் அறியாத பாண்டவர்கள் அதில் தங்குவதற்காகக் கிளம்பியபோது யுதிஷ்டிரனிடம் இந்த சதி குறித்து மறைமுகமாக நான் குறிப்பிட்டேன். இதன் காரணமாக அந்த அரக்கு மாளிகைக்குள்ளே பாண்டவர்கள் ஒரு சுரங்க வழியை உருவாக்கினார்கள். அந்த மாளிகை தீயில் பற்றி எரிந்த போது அவர்கள் சுரங்கத்தின் மூலமாகத் தப்பித்தார்கள். சகுனியின் சதி காரணமாக தருமனை சூதாட்டத்துக்கு அழைத்தார் திருதராஷ்டிரன். அது கூடாது என்று தடுத்தேன். என் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட திருதராஷ்டிரனும் ‘விதுரன் என்னை விட சிறியவன் என்றாலும் மிகவும் விவேகமானவன். அவன் கூறுவதைக் கேட்போம். சூதாட்டம் வேண்டாம்’ என்று பல விதங்களில் மகனுக்கு புத்தி கூறினான். ஆனால் துரியோதனன் கேட்கவில்லை. என் ஆலோசனையை மீறி சூதாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்தான் யுதிஷ்டிரன். எனவே திரவுபதி தங்களுக்கு அடிமை என்று கூறி அவளை அரசவைக்கு இழுத்து வரச் செய்தான் துரியோதனன். பீஷ்மர், துரோணர் போன்ற ஆச்சார்யர்கள் கூட இதனால் அதிர்ச்சி அடைந்தாலும் மவுனமாக இருந்தனர். ஆனால் நான் இந்தச் செயலை பலமாகக் கண்டித்தேன். ஆனால் நான் கூறியது எதுவும் துரியோதனனின் மனதை மாற்றவில்லை. எனவே வெறுப்புற்று அரச சபையை விட்டு வெளியேறினேன். காலப்போக்கில் வனவாசத்தை முடித்து விட்டு பாண்டவர்கள் திரும்பியபோது அவர்களுக்கு ஐந்து கிராமங்கள் கூட கொடுக்க முடியாது என்று துரியோதனன் கூறியதை கேட்டு மிகவும் துயருற்றேன். இப்படிச் செய்தால் மகாபாரதப்போர் உருவாகும் என்றும் அதில் கவுரவர்கள் அழிந்து விடுவார்கள் என்றும் கணித்துக் கூறினேன். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் துரியோதனின் தரப்பில் யாருமே இல்லை. கிருஷ்ணன் என் முற்பிறவியையும் இந்தப் பிறவியில் நான் அளித்த நல்ல ஆலோசனைகளையும் நன்கு அறிந்தவன். ஹஸ்தினாபுரத்திற்கு வந்த போதெல்லாம் என்னுடன் தங்குவதை விரும்பியவன். என்னால் கவுரவர்களின் தீய நடத்தையையும், மகாபாரதப் போரையும் தடுக்க முடியவில்லைதான். ஆனால் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன் என்பதும் தீயவற்றை ஒருபோதும் ஆதரிக்கவேயில்லை என்பதும் எனக்குப் பெருமை சேர்த்தன. பாரதப் போர் முடிந்ததும் முழுமையாக துறவு மேற்கொண்டு முக்தி அடைந்தேன். அப்போது ஹஸ்தினாபுரத்தின் சிம்மாசனம் ஏறி ஆட்சிசெய்த யுதிஷ்டிரன் நான் முக்தி அடைவதைக் கண்டு வணங்கினான். என் உடலிலிருந்த ஆத்மா அவனுக்குள் புகுந்து கொண்டது. இருவரும் தர்ம தேவனின் இரு வடிவங்கள்தானே. எனக்கும், மன்னன் திருதராஷ்ரனுக்கும் நடந்த விவாதமே விதுரநீதி எனப்படுகிறது. பின்னாளில் சாணக்கியரால் எழுதப்பட்ட நீதி நூல்களுக்கு இதுவே முன்னோடி.
|
|
|
|
|