|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » உன்னைக் காணாத கண்ணும்... |
|
பக்தி கதைகள்
|
|
அழகாபுரி கிராமத்தில் வசித்தார் பாகவதர் ஒருவர். கிருஷ்ணர் மீது பக்தி பாடல்கள் பாடுவதில் வல்லவர். தனக்கு வந்த புகழால் கர்வம் ஏற்பட்டது. வருமானம் பெருகவே தலைகால் புரியாமல் ஆடினார். அவருக்கு கடவுள் புத்தியைப் புகட்டும் காலம் நெருங்கியது. ஒருமுறை நெசவாளர் தெருவில் பாகவதர் நடந்து கொண்டிருந்தார். ஒரு பெண் பக்தி பாடல் பாடியபடியே சேலை நெய்தபடி இருந்தாள். “ஆஹா...இந்த ஊரில் நம்மை மிஞ்ச ஒருத்தி இருக்கிறாளே! இவள் பாடும் விஷயம் மன்னருக்கு தெரிந்தால் அரசவையில் பாடகி ஆக்கி விடுவாரே என பயந்தார். அவளது வீட்டுக்குள் நுழைந்தார். ஆங்காங்கே நுால்கள் சிதறிக் கிடந்தன. “ஏனம்மா! இங்கு குப்பையாக கிடக்கிறதே.. பாடினால் மட்டும் போதாது. வீடும் சுத்தமாக இருக்க வேண்டும். கண்ணன் சுத்தமான இடங்களில் தான் இருக்க விரும்புவார். இல்லாவிட்டால் பாடுவதை நிறுத்து” என்றார். “அட நீங்க வேற பாகவதரே! இந்த நிலைமைக்கு காரணமே கண்ணன் தான்! நான் எத்தனை முறை தான் சுத்தம் செய்வது! அலுப்பு தெரியமால் இருக்க பாடிக் கொண்டே தறி நெய்வேன். அப்போது சின்னக்கண்ணன் வீட்டுக்குள் வருவான். நுாலிழைகளை அறுத்து காற்றில் பறக்க விடுவான். நான் மீண்டும் இழைகளை இணைத்து நெய்வேன். மீண்டும் அறுத்து எறிவான். அவனது குறும்புகளைத் தாங்க முடியலை” என்றாள். பாகவதரால் நம்ப முடியவில்லை. “என்னம்மா கதை அளக்கிறாய். கண்ணன் வருகிறானா.... நுால்களை அறுத்தெறிகிறானா.... அதுவும் உன் பாட்டைக் கேட்க ஆசைப்பட்டு! காலம் காலமாக நானும் தான் பாடுகிறேன். அரசவை பாகவதராக உள்ளேன். என் பாட்டுக்கு வராத கண்ணன் உன்னைத் தேடி வருகிறான் என்கிறாயே எப்படி? நம்பவே முடியவில்லையே. ஏன் இப்படி பொய் சொல்கிறாய்” என்றார். “பாகவதரே! பொய் சொல்ல வேண்டும் என ஆசையா என்ன! வேண்டுமானால் ஊர் மக்களை அழைப்போம். கண்ணன் இங்கு வந்து நுால்களை அறுத்தெறிவதை அவர்களே நேரில் பார்க்கட்டும்” என்றாள் அவள். ஊரார் முன்னிலையில் அவளும் பாடினாள். நுாலிழைகள் பறந்தன. வீடே குப்பையானது. அனைவரும் ஆச்சரியப்பட்டனர். “எங்கள் கண்ணுக்கு கண்ணன் தெரியவில்லை. ஆனால் நுாலிழைகள் பறக்கிறதே.... வீடே குப்பையாகிறது, எல்லாம் அதிசயமாகத் தானிருக்கிறது” என்றனர். அப்போது மழலைக்குரல் அசரீரியாக வானில் ஒலித்தது. “கண்ணன் பேசுகிறேன். இவளின் இனிய குரலுக்கு ரசிகன் நான். சவால் விட்டாரே பாகவதர்! அவர் பணத்துக்காகவும், புகழுக்காகவும் பாடுகிறார். இவளோ பக்தியுடன் பாடுபவள். இனி அரசவை பாடகியாக இவளே இருப்பாள். இவளின் கண்களுக்கு மட்டுமே தெரிவேன். பக்தையான இவளைச் சோதிக்க முயன்ற உங்களுக்குத் தெரியமாட்டேன்’’ இதைக் கேட்டதும் மன்னர் முடிவுக்கு வந்தவராக, அந்த பெண்ணை அரசவை பாடகியானாள். ‘‘உன்னைக் காணாத கண்ணும் கண் அல்ல...கண்ணா’’ என அழுது வேண்டினாள். அதன் பயனாக பகவான் கண்ணனின் தரிசனம் அனைவருக்கும் கிடைத்தது.
|
|
|
|
|