|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » கர்மக்கணக்கை நீயே பார்த்துக்கொள் |
|
பக்தி கதைகள்
|
|
மைதிலி என்ற பெயர் கொண்ட அந்த நடுத்தர வயதுப் பெண்ணின் சோகம் என்னை உருக்கிவிட்டது. அவளுடைய கணவன் ஏழு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டான். கஷ்டப்பட்டு தன் ஒரே மகனைப் படிக்க வைத்தாள். அவனுக்கு மருத்துவக்கல்லுாரியில் இடம் கிடைத்தது. படித்து முடித்து பயிற்சி மருத்துவராகி விட்டான். பெரிய கனவுகளோடு வருங்காலத்தை எதிர்நோக்கியிருந்த மைதிலியின் தலையில் இடி விழுந்தது. ஒருநாள் மருத்துவமனையில் நடந்து வந்தபோது அவளது மகன் திடீரென விழுந்து விட்டான். ‘தடுக்கிவிட இங்கு எதுவும் இல்லையே...எப்படி கீழே விழுந்தோம்’ என ஆச்சரியப்பட்டு எழுந்து நடந்தான். மூன்று நாள் கழித்து மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது விழுந்துவிட்டான். ஏன் இப்படி காரணமில்லாமல் விழுகிறோமே என அப்போதும் ஆச்சரியப்பட்டான். அடுத்த ஒரு வாரத்தில் பத்து முறை விழுந்துவிட்டான். மீண்டும் ஒருநாள் வீட்டில் குளிக்கும்போது விழுந்துவிட்டான். எழுந்திருக்க முடியவில்லை. அவனது கூச்சலைக் கேட்டு அவனுடைய தாய் அக்கம்பக்கத்தினர் துணையுடன் கதவை உடைத்து பார்த்திருக்கிறாள். உள்ளே அவன் ஆடை இல்லாமல் விழுந்து கதறிக் கொண்டிருந்தான். மருத்துவமனைக்குப் போய் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் வைத்திருக்கிறார்கள். “என் பையனுக்கு என்ன பிரச்னைன்னு கண்டுபிடிக்க முடியலைங்கய்யா...எப்படியும் மூணு வாரமாவது ஐசியூவில இருக்கணும்னு சொல்றாங்க. அவனப் பார்க்கக்கூட விடமாட்டேங்கறாங்க. ஈ, எறும்புக்குக்கூடத் துரோகம் நினைக்காத எனக்கு ஏன் இப்படி நடக்கணும்? பச்சைப்புடவைக்காரி மனசுல இரக்கமே கிடையாதா” ஆறுதல் சொல்லி அவளை அனுப்பிவைத்துவிட்டேன். மருத்துவராக வேண்டிய நேரத்தில் நோயாளியாகி விட்டானே! அன்று மாலையில் மனம்போன போக்கில் நடந்துகொண்டிருந்தேன். “இந்த விலாசம் எங்க இருக்குன்னு சொல்லமுடியுமா?” முன்னால் நின்ற அழகிய பெண் கொடுத்த சீட்டைப் பார்த்தேன். விலாசம் முழுமையாகத்தான் இருந்தது. ஆனால் அந்த இடம் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. “உன் ஊரில் இருக்கும் இடத்திற்கே வழிகாட்ட முடியவில்லையாம். இந்த லட்சணத்தில் எவளோ ஒருத்தியின் கர்மக்கணக்கில் இருக்கும் குழப்பம் தீர வழிகாட்ட முயற்சிக்கிறாராம்” “தாயே” “அடுத்தவர் கர்மக்கணக்கில் தலையிடாதே என ஆயிரம் முறை சொல்லிவிட்டேன். நீ கேட்கவில்லை. இப்போது அந்தப் பெண்ணின் கர்மக்கணக்கைச் சொல்கிறேன். இதை அவளிடம் நீ சொன்னால் அவள் படவேண்டிய துன்பத்தைப் போல் நுாறு மடங்கு அனுபவிக்க வேண்டியதிருக்கும். அதன்பின் நான் உன்னைப் பார்க்க வரமாட்டேன்” “அப்படியென்றால் என்னிடம் எதுவும் சொல்லாதீர்கள் தாயே” “ சொல்லத்தான் போகிறேன். உனக்கும் பொறுப்பு வரவேண்டுமே” “நான் அவளிடம்...’’ “அவளது கர்மக்கணக்கின் விபரங்களைச் சொல்லாமல் அவளுக்கு வழிகாட்டலாம். அவள் புரிந்துகொண்டால் அவள் பிரச்னை தீர்ந்துவிடும். “மைதிலியின் கணவர் இறந்தவுடன் அவளது மாமியார் தன் பாரம்பரிய வீட்டை அவளுக்குத் தானமாகக் கொடுத்துவிட்டாள். அதன்பின் இவள் மாமியாரைச் சரியாகக் கவனிக்காமல் வீட்டை விட்டே துரத்தினாள். ஒரு முதியோர் இல்லத்தில் சேர்ந்த மாமியார் நோய்வாய்ப்பட்டு கவனிக்க ஆள் இன்றி மனமுடைந்து இறந்தாள். அந்தப் பாவம்தான் இவளைப் பாடாய்ப்படுத்துகிறது. இது அவளுக்குத் தெரியவே கூடாது. வேறு ஏதாவது வேண்டுமா” “ஆம், தாயே! அன்பின் வழியை அவளுக்குக் காட்ட அன்பரசியான நீங்கள் எனக்கு வழிகாட்ட வேண்டும்.” அன்னையின் புன்னகை அழகாக இருந்தது. மறுநாள் அந்தப் பெண்ணிடம் கவனமாக பேசினேன். “உங்க கர்மக்கணக்குல ஏதோ குழப்பம் இருக்கும்மா” “இதையேதான்யா எங்க ஜோசியரும் சொன்னாரு. அவரு சொன்னதுபோல கிராமத்துல இருக்கற எங்க குலசாமிக்குப் படையல் போடட்டுமா” “அந்த மாதிரி கணக்கு இல்லம்மா. இந்தப் பிறவியிலயோ. போன பிறவிலயோ யாரையாவது பாடாப் படுத்தியிருக்கீங்க. அவங்க சாபம்தான்...” “நீங்க சொல்றதை உண்மைன்னு வச்சிக்கிட்டாலும் அவங்க யாருன்னு தெரியாம எப்படி பரிகாரம் செய்யறது?” “அதுதாம்மா அன்போட விசேஷம். அன்பு சர்வரோக நிவாரணி. வந்திருக்கற நோய் என்னன்னு தெரியலேன்னாக்கூட அன்பு அந்த நோயை குணமாக்கும்” “இப்போ நான் என்ன செய்யணும்” “யார்கிட்டயாவது அன்பு காட்டுங்க. உதவி தேவைப்பட்டவங்களுக்கு ஏதாவது உதவுங்க. அதுவும் உங்களுக்குத் தொடர்பில்லாதவங்ககிட்ட அன்பு காட்டினா அதுக்கு பலம ஜாஸ்தி. உங்க மகன் நல்லபடியா குணமாக வாய்ப்பு இருக்கு” “அப்போகூட நிச்சயமாச் சொல்ல மாட்டேங்கறீங்களே!” “எதையும் நிச்சயமாச் சொல்ல என்னைக் கொத்தடிமையா கொண்டவளாலதாம்மா முடியும். நீங்க எப்போ யாருக்கு துரோகம் செஞ்சீங்கன்னு எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது, அதனால மனசுல வஞ்சனையில்லாம அன்பு காட்டுங்க” அவள் சென்ற பிறகு எனக்கு பயம் வந்தது. ஒருவேளை நான் சொல்லக்கூடாததைச் சொல்லிவிட்டேனா? நான் நுாறு மடங்கு துன்பம் அனுபவிக்க நேரிடும் என்று பச்சைப்புடவைக்காரி சொன்னாளே...அதைக் கூடத் தாங்க முடியும். ஆனால் அதன்பின் என்னைப் பார்க்க வரமாட்டேன்னு சொன்னாளே.. அவளைப் பார்க்காமல் இருப்பதை விடச் செத்துவிடலாமே! ஒரு வேளை உணவு, தினமும் கோயில், அபிராமி அந்தாதி சொல்லுதல் என இரண்டு வாரம் நோன்பிருந்தேன். அன்று பொற்றாமரைக் குளத்தின் படிகளில் அமர்ந்திருந்தேன். அருகில் ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது. அந்தக் குடும்பத் தலைவி அழகாக இருந்தாள். என்னையும் அறியாமல் அதிக நேரம் அவளைப் பார்த்துவிட்டேன் போலும். கோபத்துடன் எழுந்து வந்தாள். மன்னிப்பு கோரும் வகையாக எழுந்து நின்று கைகூப்பினேன். “பயந்துவிட்டாயா” “இரண்டு வாரங்களாகப் பயத்தில்தான் இருக்கிறேன்.” “ஏன் பயப்படவேண்டும் அதுதான் கர்மக்கணக்கைப் பற்றி சொல்லாமல் சரியாக வழிகாட்டிவிட்டாயே” “அந்த பெண்ணின் மகன்..” “உன் பேச்சைக் கேட்டதும் மைதிலியின் மனம் உறுத்தலாகி விட்டது. மாமியாரைத் துரத்தி விட்டது பாவம் என புரிந்து கொண்டாள். மாமியாரைத் தேடி அலைந்திருக்கிறாள். அவர் இறந்து போனது தெரிந்தவுடன் அந்த முதியோர் இல்லத்தில் இரண்டு வாரமாக ஆயா வேலை பார்த்திருக்கிறாள். அங்கே இருந்த ஆதரவில்லாத முதியவளுக்குத் உறுதுணையாக இருந்திருக்கிறாள். அவர் நேற்றுத்தான் இறந்தாள். மைதிலி தன் மகனைப் பார்க்க மருத்துவமனைக்கு நாளை போகப் போகிறாள்” “மகனின் கதி...’’ “அவனுக்கு முதுகுத் தண்டில் காசநோய் வந்திருக்கிறது என மருத்துவர்கள் கண்டுபிடித்து விட்டனர். அதற்குத் தீவிர சிகிச்சை நடக்கிறது. முதலில் அவனால் நடக்கமுடியாது. பின் ஊன்றுகோல் துணையுடன் நடப்பான். இன்னும் ஆறே மாதங்களில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவான். அமோகமாக வாழ்வான். அவனை நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டும் சொல்? உன்னிடம் வரும் மனிதர்களின் கர்மக்கணக்கை அறியும் வல்லமையைத் தரட்டுமா” “வேண்டாம் தாயே. அடுத்தவரின் கர்மக்கணக்கு எனக்கு எதற்கு? அது தெரிந்தால் ஆவணம் தான் அதிகமாகும். அதற்குப் பதிலாக...’’ “அதற்குப் பதிலாக...” “எந்த கணக்கும் பார்க்காமல் எல்லோரையும் நேசிக்கும் அன்பு மனதை தாருங்கள். அன்பின்மை என்ற காட்டில் அவதிப்படுவோருக்கு அன்பின் வழியைக் காட்டும் ஆற்றலை தாருங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அன்பே வடிவான உங்களுடைய கொத்தடிமை என்ற நிலை இம்மியும் பிசகாமல் என்னை வழிநடத்துங்கள்.” என்னைத் தனியாக அழவிட்டு விட்டு அன்னை சிரித்தபடி காற்றோடு கலந்தாள்.
|
|
|
|
|