|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » துரோணனாகிய நான்... |
|
பக்தி கதைகள்
|
|
‘நதி ஓரமாக முனிவர் பரத்வாஜர் சென்று கொண்டிருந்த போது கிரிடசி என்ற அப்ஸரசைக் கண்டார். அவரது காமசக்தி வெளியேறி அங்கிருந்த ஒரு பானைக்குள் விழுந்தது. அதிலிருந்து உருவானவன்தான் நான். பாண்டவர்கள், கவுரவர்கள் இரு தரப்பினருக்கும் வில்வித்தை பயிற்சி கற்றுத் தந்தவன் நானே. அசுர குருவாகிய சுக்கிராச்சாரியார் என் நண்பர். சிறுவயதில் குருகுலத்தில் கல்வி கற்ற போது எனக்கு நெருங்கிய நண்பன் ஆனான் பாஞ்சால தேசத்து இளவரசனான துருபதன். ‘நான் மன்னரானவுடன் நீ கேட்கும் எதை வேண்டுமானாலும் தருவேன்’ என்று துருபதன் அடிக்கடி கூறுவான். கல்விக் காலம் முடிந்தவுடன் அவன் அரண்மனைக்குச் சென்றான். நான் பரசுராமரிடம் சென்று பல ஆயுதப் பயிற்சிகளை மேற்கொண்டேன். காலப்போக்கில் கிருபரின் சகோதரியான கிருபி என்பவளைத் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு அஸ்வத்தாமன் என்னும் மகனும் பிறந்தான். ஆனால் வீட்டில் நிலவிய ஏழ்மையால் குழந்தைக்கு பால் வாங்கி கூட கொடுக்க முடியாத நிலை. அப்போதுதான் துருபதன் நினைவு வந்தது. அவனிடம் சென்று சில பசுக்களை தானமாகப் பெற தீர்மானித்தேன். பாஞ்சால தேச அரண்மனையை அடைந்தேன். என்னை துருபதன் சரியாக வரவேற்கவில்லை. என்றாலும் நண்பன் என்ற உரிமையுடன் அவனிடம் சில பசுக்களைக் கேட்டேன். அவன் மிகவும் திமிருடன் ‘ஒரு பிச்சைக்காரன் எப்படி என்னை நண்பன் என்று கூறலாம்?’ என்று கேட்டு அவமானப்படுத்தினான். அப்போதே அவனைப் பழிவாங்க வேண்டுமென தீர்மானித்தேன். காலம் கடந்தது. இளம் சிறுவர்களாக இருந்த பாண்டவர்கள் ஒரு நாள் விளையாடிய போது பந்து கிணற்றில் விழுந்துவிட்டது. புற்களை மட்டுமே வைத்துக்கொண்டு அந்த பந்தை வெளியே எடுத்தேன். இதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட பாண்டவர்கள் தங்கள் பாட்டனார் பீஷ்மரிடம் இது குறித்து கூறினார்கள். அவர் என் திறமையை அறிந்துகொண்டு பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் படைப் பயிற்சி அளிக்க என்னை குருவாக நியமித்தார். என் சீடர்களில் அர்ஜுனன் எல்லாவிதமான போர்ப் பயிற்சிகளிலும் தலை சிறந்து விளங்கினான். இதற்கு வெகுமதியாக பிரம்மாஸ்திரத்தைப் பெறும் மந்திரங்களை அவனுக்கு உபதேசம் செய்தேன். கல்விக் காலம் முடிந்ததும் குருதட்சணையாக என்ன வேண்டும் என்று அர்ஜுனன் கேட்க ‘துருபதனைத் தோற்கடித்து என் முன்னே கொண்டு வந்து நிறுத்து’ என்றேன். அப்படியே செய்தான் அர்ஜுனன். என் முன் தலைகுனிந்து நின்ற துருபதனை பார்த்து ‘பிழைத்துப் போ. உன் நாட்டில் பாதியை உனக்கே தருகிறேன். மீதிப் பாதியை என் மகன் அஸ்வத்தாமனுக்கு அளிக்கிறேன்’ என்றேன். பாண்டவர்களைத்தான் நான் அதிகம் விரும்பினேன். காரணம் அவர்கள் நீதியின் வழி நடப்பவர்கள். என்றாலும் ஹஸ்தினாபுரம் என்ற நாட்டுக்கு நேர்மையானவனாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் காரணமாக கவுரவர்கள் தரப்பில் போரிட நேர்ந்தது. மகாபாரதப் போரின் பத்தாவது நாள் பீஷ்மர் வீழ்ந்துவிட, அதற்கடுத்து கவுரவ சேனை படைத்தளபதியான நான் நியமிக்கப்பட்டேன். ஐந்து நாட்கள் வெற்றிகரமாகப் போரை நடத்தினேன். என் வியூகங்களால் பாண்டவ சேனைக்குப் பெரும் பின்னடைவு உண்டானது. தர்மரை சிறைப்பிடித்தால் போரை நிறுத்த அர்ஜுனன் ஒத்துக் கொள்வான் என்பதால் பல விதங்களிலும் தர்மரை சிறைபிடிக்க முயற்சித்தேன். ஆனால் அர்ஜுனின் சாமர்த்தியத்தால் இதை நடத்த முடியவில்லை. போரில் பீமன் தன் கதாயுதத்தால் என் தேரை நொறுக்கினான். போதாத காலம் அப்போது துரியோதனனுக்கு என் மீது சந்தேகம் எழுந்தது. பாண்டவர்கள் மீது கொண்ட அபிமானத்தால் நான் அவர்களை போரில் சரியாகத் தாக்கவில்லை என்று குற்றம் சாட்டினான். இது எனக்கு மிகுந்த கோபத்தையும், வருத்தத்தையும் அளித்தது. அடுத்த நாள் வாள் சண்டையில் துருபதனைக் கொன்றேன். அதேசமயம் எனக்குத் தெரியாமல் கண்ணன் ஒரு சதி செய்தார். அஸ்வத்தாமன் என்ற யானையை பீமனை விட்டு கொல்லச் செய்தார். அஸ்வத்தாமன் இறந்து விட்டான் என்ற செய்தி பரவியது. என் மகனா இறந்துவிட்டான்? அதிர்ச்சி அடைந்தாலும் இது தந்திரமாகவும் இருக்கலாம் என நினைத்தேன். தர்மனிடம் இந்தத் தகவலின் உண்மைத்தன்மை குறித்து கேட்டேன். அவன் ‘அஸ்வத்தாமனை பீமன் கொன்றது உண்மைதான். ஆனால் அது உங்கள் மகனின் மகன் அல்ல; அந்தப் பெயர் கொண்ட ஒரு யானை’ என்றான். கண்ணன் தந்திரசாலி. தர்மன் முதல் வாக்கியத்தைக் கூறி முடித்தவுடன் கோஷங்களை பலமாக ஒலிக்க செய்து அவன் கூறிய மீதிப் பகுதி என் காதில் விழாமல் பார்த்துக் கொண்டான். ஏற்கனவே மனம் வெறுத்துப் போய் இருந்த நான் என் மகன் இறந்து விட்டான் என்றதும் தேரிலிருந்து இறங்கி தரையில் அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கி விட்டேன். இந்த வாய்ப்பை பயன்படுத்தி திருஷ்டத்யும்னன் என் தலையைக் கொய்தான்’. .................. நம் நாட்டின் தலைநகர் டெல்லியிலிருந்து 30 கி.மீ., தொலைவில், ஹரியானா மாவட்டத்தில், உள்ளது குர்காவ் என்ற நகரம். பல தொழிலகங்கள் இங்குள்ளன. இதை தொழில் நகரம் என்றே கூறலாம். குரு துரோணாச்சாரியருக்கு மரியாதை அளிக்கும் விதமாக குருகிராமம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இங்குதான் ஆரவாரமின்றி அமைந்திருக்கிறது துரோணாச்சாரியார் கோயில். நகரின் முக்கிய பேருந்து நிறுத்தத்துக்கு அருகே சுபாஷ் நகர் என்ற பகுதியில் அமைந்த குறுகலான தெருவில் கோயில் உள்ளது. ஊதா நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்ட எளிய இக்கோயில் 180 ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்டது. இந்த இடத்தில் உத்தர்கண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனுக்கும், ஆச்சாரியர் துரோணருக்கும் உள்ள தொடர்பை குறிப்பிட்டாக வேண்டும். ‘டூன்’ என்றால் வசிக்கும் இடம் என்பது பொருள். துரோணர் வசித்த இடமான ‘துரோண் கா டூன்’ என்பது தான் காலப்போக்கில் டேராடூன் என மாறியது. துரோணர் தன் தந்தை மகரிஷி பரத்வாஜரின் ஆஸ்ரமத்தில் எட்டு ஆண்டுகள் வளர்ந்தார். வித்யாரம்பம், வேத பாராயணம், உபநயனம் ஆகியவை அங்கேயே முடிந்தன. அதற்குப் பிறகு தனி இடம் தேடி பல இடங்களுக்குச் சென்றார். பின்னர் விருஷத் நகர் என்னும் இடத்தை அடைந்தார் (டேராடூனின் முந்தைய பெயர்) இங்குள்ள சஹஸ்ரதாரா என்னும் இடத்தின் இயற்கை அழகால் கவரப்பட்டு ஒரு ஆஸ்ரமத்தை நிறுவினார். இங்குள்ள குகையில் எழுந்தருளியுள்ள சிவலிங்கத்தை வழிபட்டு தவம் செய்தார். டேராடூனில் இருந்து 14 கி.மீ., துாரத்தில் உள்ளது சஹஸ்ரதாரா அமைதியான சூழல். தேஜன்ய நதி சிவாலிக் மலைத் தொடரிலிருந்து பிறந்து இங்கே பாய்கிறது, அருவியாகக் கொட்டுகிறது. பிறகு ஹரித்வாரில் பொங்கிப் பெருகும் கங்கையில் சங்கமம் ஆகிறது. துரோணர் புகழ் பரப்பும் இன்னொரு இயற்கைப் பகுதி தப்கேஷ்வர். டேராடூனில் இருந்து 6 கி.மீ., துாரத்தில் உள்ளது இது. தப்கேஷ்வர் கோயில் மிக அமைதியான பகுதியில் அமைந்திருக்கிறது. பிரதான வாசலில் இருந்து 40 படிகளில் இறங்க வேண்டும். இறங்கியவுடன் துரோணாச்சாரியாரின் கம்பீரமான உருவத்தை தரிசிக்கலாம். வலதுபுறம் வியாசருக்கான சிறு கோயில் உள்ளது. மேலும் நடந்தால் பளிங்குக் கல்லினால் ஆன முழு உருவ சிவபெருமானின் தோற்றம். அந்த இடத்தில் வழி இரண்டாகப் பிரிகிறது. வலதுபுறம் அனுமன் குகைக்கான பாதை, இடதுபுறம் தப்கேஷ்வர் குகைக்கான தடம். கீழே தமஸ் நதி வேகமாகப் பாய்ந்து கண்ணுக்கு விருந்தளிக்கிறது. அது பாறைகளில் மோதி எழுப்பும் ஒலி காதுக்கு விருந்து. கொஞ்ச நேரம் நின்று பார்த்தால் அந்த நதி இளநீலம், பச்சை, வெண்மை ஆகிய மூன்று வண்ணங்களில் பாய்வதாகத் தோன்றுகிறது. படிகளில் கவனத்துடன் இறங்க வேண்டும். இத்தனைக்கும் அந்தப் படிகளில் பாசி படரவில்லை. நதியின் மேற்புறமாக பாலத்தைக் கடந்தால் குகை வாசல் தெரிகிறது. குறைந்த உயரம் காரணமாக பல இடங்களில் தலை வணங்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. இப்போதே இப்படி என்றால் அந்தக் காலத்தில் எவ்வளவு அமைதியாக இந்த அற்புத சூழலில் துரோணர் தவம் செய்திருக்க வேண்டும். நினைக்கும்போதே இந்த தலத்தேர்வுக்காக அவரைப் பாராட்டத் தோன்றுகிறது. துருபதனால் அலட்சியம் செய்யப்பட்டு அவனைப் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று கடும் கோபத்தோடு திரும்பி வந்த துரோணர் இந்த குகைக்குள் நீண்ட தவத்தில் மூழ்கினார். சிவபெருமான் காட்சி தந்த போது அவரிடம் பிரம்மாஸ்திரம், பிரம்ம தண்டம், பாசுபத அஸ்திரங்களை வழங்கும்படி வேண்டினார் துரோணர். அவற்றை அருளிய சிவபெருமான் அவற்றை விட சிறந்த வரம் ஒன்றைக் கொடுத்தார். இன்று வரை தேவேஸ்வரம் எனப்பட்ட இந்த குகை இனி உன் தவத்திற்கு நான் அளித்த அங்கீகாரத்திற்காக தப்கேஷ்வர் எனப்படும். இந்த இடமும் துரோண நகர் என பெயர் பெறும்’ என்றார்.
|
|
|
|
|