|
அர்ச்சகர் ஒருவர் கோயிலில் பூனை ஒன்றை வளர்த்து வந்தார்.
ஒருநாள் அது மரத்தின் மீதேறி உட்கார்ந்து கொண்டது. பாலை வைத்தபடி அர்ச்சகர் பூனையை நோக்கி கையசைத்தார்.
ஆனால் குட்டியாக இருந்ததால் கீழே இறங்க பயப்பட்டது. கயிற்றை வீசி, மரக்கிளையை வளைத்தால் பூனை இறங்கும் என்ற முடிவுக்கு வந்தார்.
கயிறை இழுக்க மரக்கிளை வளைந்தது. ஆனால் திடீரென கயிறு வழுக்கவே கிளை வேகமாக மேலே சென்றது. பூனை அந்தரத்தில் துாக்கி எறியப்பட்டது. எங்கு தேடியும் பூனையை காணவில்லை. செய்த தவறால் பூனைக்கு ஆபத்து நேர்ந்ததை எண்ணி, கடவுளிடம் அர்ச்சகர் மன்றாடினார்.
மூன்று நாட்கள் கழித்து கோயிலுக்கு வரும் ஒரு பெண்ணை மளிகைக்கடையில் அவர் கண்டார். அவளது கூடையில் பூனை படம் போட்ட பிஸ்கட் இருந்தது. ‘‘ஏம்மா... நீ பூனை வளர்க்கிறாயா’’ எனக் கேட்டார். ‘‘ சுவாமி...என் மகள் பூனை வளர்க்க ஆசைப்பட்டாள். நான் சம்மதிக்காததால் அழ ஆரம்பித்தாள். அவளை சமாதானப்படுத்த ‘கடவுளிடம் பூனைக்குட்டி ஒன்றைக் கேள். அவர் கொடுத்தால் நீ வளர்க்கலாம்’ என்றேன். உடனே பிரார்த்திக்க ஆரம்பித்தாள். என்ன ஆச்சரியம்... கால்களை விரித்த படி பூனைக்குட்டி ஒன்று அவளது மடியில் பறந்து வந்து விழுந்தது. அதையே வளர்க்கிறோம்’’ என்றாள். வருத்தம் நீங்கிய அர்ச்சகர், ‘கடவுளின் கருணையே கருணை’ என்றார். யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதை கடவுள் அறிவார்.
|
|
|
|