|
அன்று காலையில் துயிலெழுந்ததுமே மனதில் உற்சாகம் ஒளிர்வதை உணர்ந்தாள் சீதை. அதுவரை அவள் அனுபவித்தறியாத பரவசம் அது. காலைப் பணிகளில் அவள் காட்டிய புதிய, அமைதியான ஈடுபாடு அரண்மனையில் மற்றவர்களை குறிப்பாக சகோதரிகளை கூர்மையாக கவனிக்க வைத்தது. ‘‘என்ன விஷயம் சீதா... இன்று பேரமைதியுடன் காணப்படுகிறாய்’’ என்ற அவர்களுடைய கேள்விக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. அவளுக்கே காரணம் புரிந்தால்தானே! அன்றைய விளையாடல்களில். உணவு எடுத்துக் கொள்வதில் எல்லாவற்றிலும் அவள் காட்டிய நிதானம் அவள் அவற்றில் முழு மனதுடன் ஈடுபடவில்லை என்பதை தெரிவித்தன. மனம் யாரையோ தேடுவதை சீதையால் உணர முடிந்தது. யாரை அல்லது எதையோ எதிர்பார்க்கிறது. ஆனால் இந்த பரபரப்பு, வரப்போகும் நல்ல விஷயத்துக்கான அறிகுறிதான் என்பது புரிந்தது. நேரம் கடந்து சென்று மாலைப் பொழுதை வரவேற்றது. தெளிவான வானமும் முழுநிலவு மேலே வரும் நேரத்தை எதிர்பார்த்தது. வழக்கம்போல அரண்மனையில் தன் அறையின் உப்பரிகைக்கு வந்து நின்றாள் சீதை. கூடவே சகோதரிகள். தமக்கையின் உள்ளக் கிடக்கை என்னவென அறிந்து கொள்வதில் அவர்களுக்கும் ஆர்வம். காலை முதல் தவியாய் தவித்து கொண்டிருந்தனர். சீதையாலும் மன மாற்றத்துக்கான காரணம் இன்னது என்பதை தெளிவாகச் சொல்ல முடியவில்லை. அவளுக்குத் தெரிந்தால்தானே! பவுர்ணமி நிலவு மெல்ல அடி வானில் இருந்து மேலெழுந்தது. வண்ணக் கோப்பையின் விளிம்பில் நிற்கும் தங்கக் காசு போன்ற அந்த காட்சியில் அப்படியே மெய்ம்மறந்து நின்றாள் சீதை. அவளையே வித்தியாசமாகப் பார்த்தபடி உடன் நின்றிருந்தார்கள் சகோதரிகள். கீழே அகன்று நீண்டிருந்த சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்தது. பொதுவாக ஊர் அடங்கும் வேளை அது. வயலுக்குச் சென்றிருந்த விவசாயிகள், மேய்ச்சலுக்குச் சென்றிருந்த கால்நடைகள் எல்லாம் அன்றைய பொழுதை உபயோகமாக செலவிட்ட திருப்தியில் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர். திரளாக அப்படித் திரும்பிய அவர்கள் எழுப்பிய சாலைப் புழுதியும் அப்போதைக்கு அடங்கி மறுநாளைய அவர்களுடைய பாத ஸ்பரிசத்துக்காகக் காத்திருந்தது. ஊரடங்கும் இந்த வேளையில் அதோ சற்றுத் தொலைவில் யாரோ வருகிறார்களே! சாலையின் நடுவே அவர்கள் வந்தாலும் ஒருவர் பின் ஒருவராக அணி வகுத்து வருகிறார்களே! அருகருகே இணையாக வரவில்லையே! விஸ்வாமித்திரர் முன்னே செல்ல, அவருக்குப் பின்னால் ராமனும், அவனுக்குப் பின்னால் லட்சுமணனும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களை கவனித்த சீதை, பளிச்சென தன் பார்வையை நிலைக் குத்தினாள். அது அப்படியே ராமனின் கண்களை ஊடுருவியது. சட்டென்று புரிந்தது சீதைக்கு. தன்னுடைய அன்றைய மனமாற்றம், செயல் தடுமாற்றம் எல்லாம் இந்த ‘சந்திப்பின்’ முன் அறிகுறிகள் தானா! அப்படியே நெகிழ்ந்து போனாள். ஏனென்றால் அவளுடைய பார்வைக் கோட்டிலேயே, எதிரிலிருந்து ஒரு காந்தவிசை புறப்பட்டுத் தன்னை மோகமாகத் தாக்குவதை உணர்ந்ததுதான். ஒரே கோணத்தில் எதிரும், புதிருமாக இரு பார்வைகள். இரண்டுமே ஒன்றையொன்று ஈர்க்கும் சம வீச்சு, வேகம் கொண்டிருந்தன. அப்படியே மனசுக்குள் அந்தப் பார்வை வந்து தங்கிவிட்டதை சீதை உணர்ந்தாள். அதுவரையிலான அந்த வெற்றிடம் சந்தோஷம் நிரம்பித் ததும்பும் அமிர்த கோப்பையாக மாறிவிட்ட அதிசயத்தில் மெய் மறந்தாள். ஒரு சில விநாடிகள்தான். அதற்குள் அந்தக் கிழ முனிவருக்கு என்ன அவசரமோ தன் நடையைக் கொஞ்சமும் தளர்த்தாமல், வேகம் குறைக்காமல் முன்னே போய்க் கொண்டிருந்தார். பின்பற்றுபவர்களும் வேறு வழியின்றி அவரைத் தொடருவது போலதான் தெரிந்தது. ஆனால் மூவரில் நடுவே வந்தவனாவது கொஞ்சம் தாமதித்தால்தான் என்ன கெட்டுவிடப் போகிறது! அவனும் மேல் நோக்கிய தன் பார்வையை உடனே தாழ்த்திக் கொண்டு நடையில் வேகம் குறைக்காமல் செல்கிறானே. மூன்றாமவனாவது, ‘யாரோ உன்னைப் பார்க்கிறார்கள்’ என்று சொல்லி இரண்டாமவனை இழுத்துப் பிடிக்கிறானா... இல்லையே! இவனும் தலைகுனிந்தபடிதானே செல்கிறான். பெருமூச்சு விட்டாள் சீதை. ‘அடடா… சட்டென அந்த சாலைக் காட்சி மறைந்து விட்டதே! ஆனாலும் அந்த தாமரைக் கண்களிலிருந்து புறப்பட்ட சூரிய ஒளி அந்த முன்னிரவு நேரத்தில் மனதில் கிளர்ச்சியூட்டுகிறதே... ஆதவனைக் கண்டுதான் தாமரை மலரும், ஆனால் இந்த தாமரைக் கண்ணனைக் கண்டு இந்த ஒளியால் வெட்கி சூரியனும் மறைந்து கொண்டு விட்டதோ! பகல் பொழுதெல்லாம் என்னவாக இருக்கும், ஏதாக இருக்கும் என்ற கற்பனையிலேயே ஓடிவிட, மாலைப் பொழுது உரிய காரணத்தை சாட்சி பூர்வமாகச் சொல்லி, மனதில் மகரந்தத்தை முகிழ்த்துவிட, இரவுப் பொழுதோ சீதையின் ஏக்கத்தை அதிகரித்து, அவளைத் துன்பப்பட வைத்தது. ஓ... இதுதான் காதலா? பார்வைப் பரிமாற்றம் அதற்கான முதல் கட்டமா? அடுத்தது என்ன? உடனிருந்து சீதையின் மாற்றங்களை கவனித்துக் கொண்டிருந்த சகோதரிகளின் கன்னங்களிலும் நாணம் சிவப்பேற்றியது. அவர்களும் பார்த்தார்கள். ‘சாலைக் குமரனின்’ பார்வை சீதை குமரியின் உள்ளத்தை ஊடுருவிவிட்ட மாயத்தை அவர்கள் கண்கூடாகக் கண்டார்கள். அதுவரை எத்தனையோ ஆடவரை, இளைஞர்களை அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்திருந்தார்கள் என்றாலும், சீதையைப் பொறுத்தவரை அது மன சந்திப்பாக மாறியது, இந்த சமயத்தில் மட்டும்தான். எப்போதும் கூடவே இருக்கும் நெருக்கத்தில் அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இந்தப் பார்வை காதலாகி, மன ஒற்றுமையை வளர்த்து, திருமண பந்தத்தில் கொண்டு விட வேண்டுமே என்று அவர்கள் மிகுந்த பாசத்துடன் வேண்டிக் கொண்டார்கள். சீதையின் மனதைத் தற்காலிகமாக மாற்றி அவளை இயல்பு நிலைக்குக் கொண்டு வர முயன்றார்கள் சகோதரிகள். முதல் சகோதரி ஊர்மிளை, ‘‘என்ன சீதா, இதுவரை இல்லாத புது உணர்வாக இருக்கிறதே! உன்னுடைய இப்போதைய தோற்றம் நீ காதல் வயப்பட்டிருப்பதை உணர்த்தினாலும், பெண்களாகிய நாம் எப்படி அந்த அழகனைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்’’ என்று தன் சந்தேகத்தைச் சொன்னாள். சட்டென்று தாமரை மலர் கூம்பிவிட்டதைப் போல முகம் வாடினாள் சீதை. அதுதானே... யார் அவர், எங்கிருந்து வருகிறார், எத்தகையவர், கையில் பிடித்திருந்த வில்லும், பரந்து விரிந்த முதுகில் கட்டப்பட்டிருந்த அம்பறாத்தூணியும் அவர் ஒரு சாதாரண வேடர் இல்லை என்பதைப் பறை சாற்றுகின்றன. எந்த தேசத்தையாவது சேர்ந்த யுத்த வீரனாகவும் தெரியவில்லை. தலைக்கு மேலே சுருட்டிக் கட்டிய முடியால் அவனை ஒரு முனிவராகவும் கருத முடியவில்லை - ஏனென்றால் முதலில் சென்ற முனிவரின் தவத் தோற்றம் இவனிடம் இல்லை. அப்படியானால் இவன் யார்? எப்படித் தெரிந்து கொள்வது? தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் அடுத்தடுத்து வந்த எத்தனையோ ராஜகுமாரர்களைப் பிடிக்காத தனக்கு இப்போது என்ன நேர்ந்தது? ஒருவேளை இவனை சந்திக்க வேண்டும் என்பதற்காக விதி செய்த நன்மையோ இது. ‘‘ஆனால் அந்த ராஜகுமாரர்களால் உன் தந்தையாரின் நிபந்தனையை நிறைவேற்ற முடியவில்லையே, அதனால்தானே அவர்களில் யாராலுமே உன்னை மணக்க முடியவில்லை’’ மாண்டவி கேட்டாள். ‘‘ஆமாம்…’’ என்று ஒப்புக்கொண்ட சீதைக்கு சட்டென்று தேள் கொட்டியது போலிருந்தது. ‘‘அப்படியானால் இவனும் சிவதனுசை எடுத்து வளைத்தால்தானே என்னை மணக்க முடியும்? அந்த விவரம் இவனுக்குத் தெரியுமா? தெரிந்தாலும், அவ்வாறு வளைத்து நாணேற்றும் ஆற்றல் கொண்டிருப்பானா? சாதித்து விடுவான் என்றே வைத்துக் கொண்டாலும், இப்படி ஒரு நிபந்தனை இருப்பது இவனுக்கு யாரேனும் எடுத்துச் சொல்ல வேண்டுமே! இவன் நம் மிதிலையில் தங்குவானா? எத்தனை நாள் தங்குவான்? நம் அரண்மனைக்கு வருவானா…’’ என்றெல்லாம் கேட்டு அரற்றினாள் சீதை. மூன்று சகோதரியரும் அவளைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். அன்றிரவு துாக்கமே இல்லாமல் கழிந்தது சீதைக்கு. மறுநாள் சிவதனுசில் நாணேற்ற ஒரு வீரன் வந்திருக்கிறான் என்ற தகவல் அவளுக்குக் கலக்கத்தை கொடுத்தது. ‘இவன் அவனாக இருக்க வேண்டுமே!’
|
|
|
|